வெற்றிக்கலை இரண்டாம் பாகம் (7)

புத்தரின் அருளுரை: நிகழ்காலத்தில் வாழுங்கள்!

புத்தரின் அறிவுரை

"கடந்த காலத்தில் மூழ்கி இருக்காதீர்கள்!
எதிர்காலம் பற்றிக் கனவு காணாதீர்கள்!

இப்போதிருக்கும் இந்தக் கணத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்!"

இதுதான் உலகினருக்கு புத்தரின் அற்புதமான அருளுரை! மனிதனின் வாழ்வில் ஐம்பது சதவிகிதம் கடந்த கால நினைவுகளிலும் நாற்பத்தைந்து சதவிகிதம் எதிர்காலம் பற்றிய பயம் அல்லது கனவுகளிலும் போகிறது. மீதி இருக்கும் ஐந்து சதவிகிதம்தான் அவனது நிகழ்கால நிகழ்வு அல்லது வாழ்வாக ஆகிறது! இது எப்படி நிறைவான வாழ்வாக அமைய முடியும்? ஆகவேதான் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ருசித்து நிகழ்காலத்தில் வாழுங்கள் என்கிறார் புத்தர்.

டெரிக் பெல்லின் அனுபவக் கூற்று

1968 முதல் 1996 முடிய ஃபார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொண்ட பிரபலமான வீரர் டெரிக் பெல் (Derel Bell), தனது ரேஸ் காரின் இக்னிஷனை ஸ்டார்ட் செய்து விட்டால் ரேஸ் முடியும் வரை ஓடுபாதை (track) தவிர வேறு எதையும் எண்ண மாட்டாராம். டயர் ப்ரஷர், காரைத் திருப்ப வேண்டிய இடம், வேகம் எனக் கார் ஓட்டுவதில் சிறு சிறு நுணுக்கமான அம்சத்தையும் எண்ணியவாறே ஓட்டுவார் அவர். "இது ஒரு ஜென் அனுபவம் போல. ஓட்டுவதைத் தவிர வேறு எதையும் எண்ண முடியாத கவனக் குவிப்பு அந்த அனுபவம்" என்கிறார் அவர்.

ஜென் பழமொழி ஒன்றை அவர் இப்படித் தனது அனுபவத்தின் மூலமாக விவரித்து விட்டார்! அந்தப் பழமொழி சிறியதுதான்; ஆனால் அது போதிப்பதோ வெற்றிக்கான வித்தைத் தரும் பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை! “நடக்கும் போது நட; சாப்பிடும் போது சாப்பிடு” என்கிறது அந்தப் பழமொழி!

மனித நிலை பற்றி லாவோட்சு

நீங்கள் விரக்தியுடன் இருந்தீர்கள் என்றால் இறந்த காலத்தில் வாழ்கிறீர்கள்!

கவலையுடன் இருந்தீர்கள் என்றால் எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள்!

நிம்மதியுடன் இருந்தீர்கள் என்றால் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்!

இப்படிச் சரியாக மனித நிலையைக் கணித்துக் கூறுபவர் யார் தெரியுமா? பிரபலமான சீன ஞானி லாவோட்சுதான்!

IF YOU ARE DEPRESSED YOU ARE LIVING IN THE PAST
IF YOU ARE ANXIOUS YOU ARE LIVING IN THE FUTURE
IF YOU ARE AT PEACE YOU ARE LIVING IN THE PRESENT

– LAO TZU

நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி?

இந்நாளில் நிகழ்காலத்தில் வாழ்வதைக் குறிக்க ‘கவனக் குவிப்பு’ (concentration) என்ற வார்த்தை போய் மைண்ட்ஃபுல்னெஸ் (Mindfulenss) என்ற நவீன யுக வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜென் பயிற்சியாளரும் தத்துவஞானியுமான ஆலன் வாட்ஸ், "ஏன் நம்மால் நிகழ்காலத்தில் வாழ முடியவில்லை என்றால், நம்மால் நம்மை ‘மூட’ முடியவில்லை" என்கிறார். எப்போதும் மனதிற்குள் நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். எப்போதுமே நாமே பேசிக்கொண்டிருந்தால் அடுத்தவரின் பேச்சை எப்போதுதான் கேட்பது? நமக்கு நாமே பேசிக் கொண்டிருந்தால் உண்மை நிலையுடன் நம்மால் தொடர்பு கொள்ளவே முடியாது. உங்களைப் பற்றியே சிந்தித்து உங்களுடனேயே பேசிக் கொண்டிருப்பதை மூடு – SHUT – என்கிறார் அவர்.

நிகழ்காலத்தில் வாழப் பயிற்சி அவசியம்! இது பிரம்மாண்டமான ஆன்மிக முன்னேற்றத்திலும் கொண்டுபோய் விடும். பல்வேறு விதமான சக்திகள் நமக்கு அனுகூலமாக அப்போது உதவிக்கு வருவதை அனுபவத்தின் மூலம் அறியலாம்.

இதற்கான எளிய வழிகளில் முக்கியமானவை:-

1)அடுத்தவராக உங்களைப் பாருங்கள்; நமக்கு நேரும் நிகழ்வுகளையும் நாம் செய்யும் செயல்களையும் ஒரு மூன்றாம் மனிதருக்கு நேர்வது போலவும் ஒரு மூன்றாம் மனிதர் செய்வது போலவும் பாருங்கள். உங்கள் பெயர் ராமன் என்று வைத்துக் கொள்வோம். ராமன் இப்போது அலுவலகம் செல்ல நடக்க ஆரம்பிக்கிறான் என்றோ, ராமனை இப்போது மானேஜர் கூப்பிட்டுப் பாராட்டுகிறார் / திட்டுகிறார் என்றோ உங்களை நீங்களே மூன்றாம் நபராகப் பார்த்துப் பழகுங்கள்.

2)ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு உங்களின் தற்போதைய நிலைக்கு அடிக்கடி வாருங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது தற்போதைய கணத்திற்கு வருவதன் மூலம் நிகழ்காலத்தில் வாழும் பயிற்சி வெற்றிகரமாக வர ஆரம்பிக்கும்.

3)உங்கள் வேகத்தைக் குறைத்து நாளுக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறையாவது என்ன செய்கிறோம், செய்வது சிறப்பாக அமைகிறதா என்று உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

லாங்ஃபெல்லோவின் கவிதை

‘நிகழ்காலத்தில் வாழ்க’ என்று ஆங்கிலக் கவிஞன் லாங்ஃபெல்லோ அருமையான ஒரு கவிதையையே வடித்து விட்டான். கதே பற்றி அவன் ஆற்றிய சொற்பொழிவின் உத்வேகத்தால் எழுந்த கவிதை இது.

இதை ‘Carpe Diem’ கவிதை என்பார்கள். Carpe Diem என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘இந்தக் கணத்தைப் பிடித்துக் கொள்’ என்று அர்த்தம். கிரேக்க அறிஞர் ஹோரேஸ் எழுதிய கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாங்ஃபெல்லோ எழுதிய கவிதையின் பெயர் ‘A Pslam of Life’. வெற்றி பெற விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை இது.

கவிதையின் முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:

Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffled drums, are beating
Funeral marches to the grave.

Trust no Future, howe’er pleasant!
Let the dead Past bury its dead!
Act,— act in the living Present!
Heart within, and God o’erhead!

Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time;

Let us, then, be up and doing,
With a heart for any fate;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.


இறைசக்தி வழி காட்டும்!

சரி, நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, வாழ்நாளின் எந்தத் தருணங்கள் முக்கியமானவை? இதற்கு பதிலை அமெரிக்க எழுத்தாளர் ஃப்ரெடெரிக் புச்னர் அழகாகக் கூறுகிறார் இப்படி: LISTEN TO YOUR LIFE. ALL MOMENTS ARE KEY MOMENTS, (வாழ்க்கையை உற்றுக் கவனியுங்கள். அனைத்துத் தருணங்களுமே முக்கியமானவைதான்!)

ஆன்மிகரீதியாகப் பார்த்தால் நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்விக சக்திகள் நிகழ்காலத்தில் வாழும் ஒருவனை வழிநடத்தி அவன் செல்ல வேண்டிய பாதையை வகுக்கின்றன. நிகழ்காலத்தில் வாழும்போது நேரும் உயரிய அனுபவங்களால் மட்டுமே இதை அறிய முடியும்.

ஆகவே வெற்றிகரமாக வாழ நினைப்போர் அனைவரும் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

–வெல்வோம்…

About The Author