வெற்றிக்கலை.இரண்டாம் பாகம்(16)

கோப்மேயரின் அறிவுரை

வெற்றிக்கான வழிகளை சுலபமாக நான்கு புத்தகங்கள் வாயிலாக உலகத்தினருக்குத் தந்தவர் அமெரிக்கரான கோப்மேயர். அவர் தரும் பல அரிய உத்திகளில் முக்கியமான ஒன்று ‘தகுந்த நேரத்தில் தகுந்த விஷயங்களைப் பற்றித் தகுந்தவரிடம் கேளுங்கள்’ என்பது!

கேட்கத் தயங்கியவர்கள் அரிய வாய்ப்பை இழப்பவர்களே! மௌனமாக இருத்தல் வெற்றிக்கான இரகசியம் என்பது உண்மையே. அதே நேரம், தக்க மொழிப்புலமையுடன் வார்த்தைகளைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதும் வெற்றிக்கான வழி என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதே சமயம், ‘கேளுங்கள்’ என்ற உத்தியையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; சமயத்திற்குத் தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

கோப்மேயரின் கூற்றைப் பார்ப்போம்:

ASK courteously – ASK in an extremely courteous manner.
ASK expectantly in the voice and attitude that the other person will gladly do what you courteously and expectantly ASK.
ASK reasonably – This applies to what you ASK and how you ASK.
ASK persuasively. Never DEMAND! Never use the word: “DEMAND”. Never even “sound demanding”.
ASK pleasantly – without pressure. Do not let your voice or manner imply pressure. Pressure creates resistance and resistance is the exact opposite of what you want. What you should want is an agreement.
ASK politely – Let your voice and manner, in every way, imply that, the other person will be agreeable and co-operative by gladly doing what you ASK.
ASK firmly. This is the most difficult and probably the most important technique of ASKING successfully because you must give a firm impression that what you ASK is so reasonable, logical and just – that you shall pleasantly persist until you get it!

இதுவே தமிழில்:

•கேளுங்கள் – பணிவுடன் கேளுங்கள்.
•எதிர்பார்ப்புடன் கேளுங்கள். உங்களின் அணுகுமுறையும் குரலும் நீங்கள் கேட்பதை அடுத்தவர் உடனே சந்தோஷத்துடன் கொடுக்கும் முறையில் நீங்கள் கேட்க வேண்டும்.
•நியாயமான ஒன்றைக் கேளுங்கள். என்ன கேட்க வேண்டுமோ எப்படிக் கேட்க வேண்டுமோ அப்படிக் கேளுங்கள்.
•கட்டாயமாகக் கட்டளையிடும் தோரணையில் கேட்காதீர்கள்.
•இனிமையாகக் கேளுங்கள்.
•மரியாதையுடன் கேளுங்கள்.
•உறுதியுடன் கேளுங்கள்.

இதுதான் அவரது அறிவுரையின் சுருக்கம்.

கண்ணனின் அருளுரை

கீதையில் "குருநாதரிடம் பிரஸ்னம் செய்ய வேண்டும்" என்று கண்ணன் உபதேசிக்கிறான். வெறுமனே ‘கேட்கச் சொல்லவில்லை’. ‘பரிப்ரஸ்னம்’ என்று கூறுகிறான். அதாவது, குடைந்து குடைந்து, திருப்தியுறும் வரை, தெரிந்து கொள்ளும் வரை கேட்பதே பரிப்ரஸ்னம்!

கேளுங்கள், கொடுக்கப்படும்!

தெரியாத ஒரு நகரில், ஓர் இடத்தில் செல்ல வேண்டிய வழியைக் கேட்டுப் பாருங்கள். அனைவரும் உதவுவதைப் பார்க்கலாம். நல்ல மாணாக்கன் கேட்பதை ஆசிரியர் நன்கு தெளிவாக, அக்கறையுடன் சொல்லித் தருவதைப் பார்க்கலாம்.

அமந்தா பால்மரின் புத்தகம்

பிரபல பாடகியும், கலைஞரும், கவிஞரும், இணையத்தளம் மூலமாக அனைவரிடமும் நல்ல காரணத்திற்காக நிதி திரட்டுவதில் வல்லவரும், இசைக் கலைஞரும், எழுத்தாளருமான அமந்தா பால்மர் சமீபத்தில் ‘தி ஆர்ட் ஆஃப் ஆஸ்கிங்’ (The Art of Asking – How I learned to Stop Worrying and Let People Help) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஏராளமான சம்பவக் கோவைகளைக் கொடுத்து, கேட்டால் கேட்டது கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் அவரது புத்தகம் பிரபல ஹிட்டாகி பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆனது.

இந்த உத்தியைப் பின்பற்ற நினைத்த ஏராளமானோர் ஒரு தளத்தை இதற்கென உருவாக்கி," ‘தி ஆர்ட் ஆஃப் ஆஸ்கிங்’ புத்தகம் படிக்க ஆசைப்பட்டுக் கேட்கிறோம்; யாராவது தாருங்களேன்" என்று கேட்க அவர்கள் அதைப் பெற்றது (இன்றும் பெற்று வருவது) ஒரு சுவையான திருப்பமே!

வனத்தின் நடுவே அமைந்திருந்த தனது வீட்டைத் தோரோவிற்குத் தந்து எமர்ஸன் அவரை உபசரித்ததைக் கூறி, இதுவும் ‘கேளுங்கள்’ உத்தியின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் என்கிறார் அமந்தா.

அவரது அழுத்தமான வரிகளைப் பார்ப்போம்:

"Asking for help with shame says:
You have the power over me.
Asking with condescension says:
I have the power over you.
But asking for help with gratitude says:
We have the power to help each other."

புராண இதிஹாசங்களில் கேட்கும் உத்தி

ராமாயணம் எழுந்ததே வால்மீகி முனிவர் நாரதரிடம், மனிதர்களிலேயே உத்தமமானவர் யார் என்று கேட்டதன் விளைவுதான்!

வாழ்வாங்கு வாழ வழி என்ன என்று அறம் சம்பந்தமான தன் சந்தேகங்களை எல்லாம் கண்ணனின் அறிவுரைப்படி பீஷ்மரிடம் தர்மர் கேட்டதாலேயே அத்தனை அறிவுரைகள் மஹாபாரதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்படி ‘சம்வாதா’ என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் ஆயிரக்கணக்கில் நமது பாரம்பரியக் காவியங்களிலும் நூல்களிலும் உள்ளன. எனவே, ‘கேளுங்கள்’ என்ற இந்த வெற்றிக்கான உத்தியைத் தந்ததே நம் முன்னோர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

ஆக, வெற்றி பெற விரும்புவோர் தேவையானதைத் தக்கவரிடம் கேட்டுத் தகுந்த சமயத்தில் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

–வெல்வோம்…

About The Author