பகவான் ரமணரின் அருளுரை: மௌனம் பழகுங்கள்!
முருகன் அருளிய உபதேசம்
அருணகிரிநாதர் முருகனை நேரில் தரிசித்த அருளாளர். தனக்கு முருகன் நேரடியாக உபதேசம் செய்ததை அவரே கூறியுள்ளார். என்ன உபதேசம்? "சும்மா இரு சொல் அற!"
இதைக் கந்தர் அனுபூதியில் 13ஆம் பாடல் விளக்குகிறது!
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
அரும் பெரும் மெய்ஞானத்தையே சொல் இல்லாத மௌனநிலை வழங்கும் எனில் உலகியலில் அது என்னதான் வழங்காது – சரியாக அதைப் பயன்படுத்துகின்ற நிலையில்! இக உலக வாழ்க்கைக்கு மௌனம் பழகுதல் வெற்றிக்கான முக்கியமான வழிகளில் ஒன்று!
மஹரிஷி ரமணரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
மௌனத்தின் பெருமையை நன்கு உணர ரமண மஹரிஷி வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தாலே போதும்!
பகவான் ரமணரிடம் ஏராளமான கேள்விகள் கேட்க வேண்டும் என்று வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் அவர் முன் வந்து உட்கார்ந்தார். தான் கேட்க நினைத்த ஒவ்வொரு கேள்வியையும் அவர் நினைக்கையில் அதற்கான பதில் அவருக்குள்ளேயே தோன்றியது. நேரம் கழிந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்த நிலையில் அவர் மௌனமாகத் திரும்பினார். பகவான் ரமணரைச் சந்தித்து விட்டு வந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனைப் பத்திரிக்கையாளர்கள் அந்தச் சந்திப்புப் பற்றிக் கேட்டபோது "We met in silence" என்று பதில் கூறினார். ரமண மஹரிஷியைச் சந்திக்க வந்த ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர் முன்னிலையில் பேசாமல் அமைதியாக அமர்ந்து பெரும் சாந்தியைப் பெற்றார். திருவண்ணாமலையில் ஒரு கூட்டத்தில் பேச வந்த மஹாகவி பாரதியார், ரமணாசிரமம் சென்று ரமண மஹரிஷியின் முன்னர் மௌனமாக அமர்ந்திருந்தார். பின்னர் திரும்பினார். பின்னால் மஹாகவியின் புகைப்படத்தைப் பார்த்தபோதுதான் வந்து அமர்ந்திருந்தவர் பாரதியார் என்று தாம் தெரிந்து கொண்டதாக பகவான் அருளினார்.
இப்படி நூற்றுக்கணக்கான பல்துறை வித்தகர்கள், ஞானிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் ரமண மஹரிஷியின் முன்னிலையில் அமர்ந்து உத்வேகம் பெற்றனர். தக்ஷிணாமூர்த்தி மௌன நிலையில் உபதேசம் அளிப்பது போல ரமண மஹரிஷியும் மௌனத்தாலேயே அனைவருக்கும் சாந்தியையும் உபதேசங்களையும் அளித்தார். அவர் கூறும் அருளுரை, ‘மௌனம் பழகுங்கள்’ என்பதுதான். அதன் அளப்பரிய சக்தியை அப்போதுதான் அறிய முடியும் என்பது உட்கருத்து.
நிறைகுடம் தளும்பாது
பிரபல பாதிரியாரான தாமஸ் கீடிங் (Thomas Keating) "மௌனமே கடவுளின் முதல் மொழி; ஏனைய அனைத்தும் மோசமான மொழிபெயர்ப்புகளே" (Silence is God’s first language; everything else is a poor translation) என்று கூறுகிறார்!
எபாமெனோண்டஸ் என்ற கிரேக்க அறிஞரைப் பற்றி ப்ளூடார்க் கூறுகையில், "அவரை விட நிறையத் தெரிந்தவர் ஒருவரும் இல்லை; அவரை விட மிகக் குறைவாகப் பேசுபவரும் ஒருவர் இல்லை" என்றார். நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி!
மௌனத்தைத் தூக்கிலிடு
அந்தணர் ஒருவரின் வீட்டிற்கு ஒருவன் திருடப் போனான். அந்தணரோ பரம ஏழை. அவர் வீட்டுச் சுவர் வலிவற்றதாக இருந்தது. மிகுந்த ஈரமாக இருந்த அந்தச் சுவர் திருடன் கன்னம் வைத்தபோது இடிந்து அவன் மீது விழுந்தது. அந்தக் கணமே அவன் இறந்து போனான். திருடனின் நண்பர்களும் குடும்பத்தாரும் அந்தணரின் மீது வழக்குத் தொடுத்தனர். இழந்த உயிருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பதுதான் வழக்கு. புத்திசாலியான அந்நாட்டு அரசனிடம் இந்த விநோதமான வழக்கு விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட அனைவரையும் அரசன் அழைத்தான். விசாரணையைத் தொடங்கினான்.
அரசன்: அந்தணரே! உமது சுவர் இடிந்து திருடன் இறந்து விட்டான். ஆகவே அவனுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!
அந்தணர்: அரசே! நான் செய்ய இதில் என்ன இருக்கிறது? இந்தச் சுவரை எழுப்பிய கொத்தனாரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்! அவன்தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.
கொத்தனார் வரவழைக்கப்பட்டார்.
அரசன்: கொத்தனாரே! ஈரச் சுவரைக் கட்டி விட்டீர். நீர்தான் நஷ்ட ஈடு தர வேண்டும்!
கொத்தனார்: அரசே! தண்ணீர் கொண்டு வரும் குடத்தைக் குயவன் பெரிதாகச் செய்து விட்டான். அதனால்தான் தண்ணீர் கூடுதலாகி விட்டது. குயவன்தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.
குயவன் வரவழைக்கப்பட்டான்.
அரசன்: குயவரே! இதற்கு நீர் என்ன சொல்கிறீர்?
குயவன்: அரசே! நான் பானை செய்து கொண்டிருந்தபோது நாட்டியக்காரி அந்த வழியே போனாள். அழகு சொட்டும் விழிகளால் என்னைப் பார்த்தாள். அந்த நேரம் பானை வழக்கமான அளவை விடப் பெரிதாகி விட்டது. பானை பெரிதானதற்கு நாட்டியக்காரிதானே காரணம்? அவள்தான் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
நாட்டியக்காரி வந்து சொன்னாள்: எப்போதும் போகாத அந்த வழியே நான் ஏன் போனேன்? வண்ணான் என் ஆடைகளைக் கொண்டு வந்து உரிய நேரத்தில் தரவில்லை, அதனால்தான்! ஆகவே வண்ணான்தான் நஷ்ட ஈடு தர வேண்டும்!
வண்ணான் கூறினான்: நான் சரியான நேரத்திற்குத்தான் ஆற்றங்கரைக்குத் துவைக்கச் சென்றேன். என் கல்லின் மீது சமணர் துணியைக் கசக்கிக் கொண்டிருந்தார். அவர் முடித்த பிறகே நான் துவைக்க வேண்டியதாக இருந்தது. ஆகவே சமணர்தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.
சமண முனி வரவழைக்கப்பட்டார். அவரோ பல வருட காலமாகத் தீவிர மௌன விரதத்தை அனுஷ்டித்து வருபவர். யாருடனும் பேசாதவர். அரசன் என்ன கேட்ட போதிலும் அவர் பதில் உரைக்கவில்லை.
புத்திசாலியான அரசன் தீர்ப்பைக் கூறினான் இப்படி: ஆஹா! காரணம் இப்போது மௌனம்தான் என்று ஆகிறது! மௌனத்தைத் தூக்கித் தூக்கில் இடுங்கள்!
வழக்கு ஒரு வழியாக முடிந்தது. ‘எல்லாப் பழியும் சமணன் மீது’ என்ற பழமொழியும் இதனால்தான் வந்தது. (கன்னடத்தில் இந்தப் பழமொழி பிரசித்தம்). மௌனம் அனைவரையும் காப்பாற்றும்!
மௌனமே சக்தி
எப்படிப் பேசுவது என்பதை நன்கு அறிந்து கொள்வதை விட எப்போது மௌனம் காக்க வேண்டும் என்று அறிவதே சாலச் சிறந்தது. கற்றோர் அவையில் நடக்கும் பெரும் பட்டிமன்றத்தில் மௌனமாக இருக்கும் மூடனே சிறந்த பண்டிதனாகி விடுவான்!
மௌனமே சக்தியைத் தரும்; மௌனமே குழப்பங்களைத் தவிர்க்கும்; மௌனமே மனோ பலத்தை விருத்தியாக்கும். மௌனம் சர்வார்த்த சாதனம்!
இந்த வலிமை வாய்ந்த கருவியை வெற்றி பெற விரும்பும் ஒருவன் பயன்படுத்த ஆரம்பித்தால் அவன் பெறுகின்ற வளங்கள் அளப்பற்றவையாக அமையும். ஆகவே வெற்றியை விழையும் ஒருவன் தேவைப்பட்டபோதெல்லாம் மௌனமாக இருக்கப் பழக வேண்டும்!
–வெல்வோம்…