ஷேக்ஸ்பியரின் அறிவுரை
உலகின் தலைசிறந்த ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியரைப் படிக்காதோர் இருக்க முடியாது. அவரின் அறிவுரைகளுள் முக்கியமான ஒன்று ‘இசை கேட்டு இன்புறுங்கள்’ என்பது! இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இசை பற்றி அவர் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று ‘தி மெர்சண்ட் ஆஃப் வெனி’ஸில் இடம் பெறுகிறது:
"The man that hath no music in himself,
Nor is not moved with concord of sweet sounds,
Is fit for treasons, stratagems and spoils;
The motions of his spirit are dull as night
And his affections dark as Erebus:
Let no such man be trusted. Mark the music."
— (The Merchant of Venice, 5.1.91-7)
இசை கேட்டு இன்புறாமல் இருப்பவன் மனிதப் பிறவியே இல்லை என்பது உண்மைதான். அவனை எந்த ரகத்தில் சேர்ப்பது!
வெற்றியான வாழ்க்கைக்கு மனதில் சமநிலை வேண்டும். இந்தச் சமநிலையைத் தருவது இசையே! எந்தவிதக் கலக்கத்தையும் போக்கும் அருமருந்து இசையே!
பழங்காலத்திலிருந்து இன்று வரை இசையின் அற்புத வலிமையைச் சுட்டிக் காட்டும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன; இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.
அலெக்சாண்டரின் வாழ்வில்
மாவீரன் அலெக்சாண்டர் இளவரசனாக இருந்தபோது கிரேக்கத்தின் பெரும் இசைக் கலைஞரான திமோதியஸ் அவன் முன் கீதம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். அது கிரேக்க தேவதையான Pallas Athena-வின் புகழ் பாடும் கீதம். அந்த தேவதை கலைகளுக்கும் அறிவுக்கும் அதி தேவதை. அந்த கீதத்தின் வீர ரசம் சொட்டும் வரிகளைக் கேட்க ஆரம்பித்தவுடன் அலெக்சாண்டர் தன் நிலையை மறந்து கவசத்தை அணிந்து, வாளை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த விருந்தினரைத் தாக்க முற்பட்டான். இதைக் கண்டு திடுக்கிட்ட திமோதியஸ் உடனே மிகவும் சாந்தமான, மிருதுவான உணர்வுகளைத் தூண்டும் கீதம் ஒன்றிற்கு மாறினார். உடனே அலெக்சாண்டர் தன் இயல்பான நிலைக்கு வந்து தன் இடத்தில் அமர்ந்தான். இதை கிரேக்க சரித்திரம் கூறுகிறது.
ஐந்தாம் பிலிப்பின் விரக்தியைப் போக்கிய இசை
இன்னொரு சம்பவம் ஸ்பெயின் அரசனான ஐந்தாம் பிலிப் பற்றியது. ஒரு முறை மன விரக்தியினால் பாதிக்கப்பட்ட அவன் எந்த வித அக்கறையுமின்றிச் சலிப்புடன் நாட்களைக் கழிக்க ஆரம்பித்தான். அவனது அழகிய மனைவியான எலிசபெத் தன்னால் ஆன மட்டும் அவனை விரக்தியிலிருந்து மீட்கப் பார்த்தாள். அரசனோ முகத்தை ஷவரம் செய்யாமல், ஆடைகளையும் மாற்றாமல், அரசவைக்கும் வராமல் இருந்தான். இதனால் கலக்கமுற்றாள் அரசி. அவள் பெரும் புத்திசாலி. இசையின் வலிமையை உணர்ந்திருந்த அவள், அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றிருந்த பாடகரான ஃபாரினெல்லியை (Farinelli தோற்றம் 26-1-1705; மறைவு 16-9-1782) அரண்மனைக்கு வருமாறு அழைத்தாள். பாடகர் வந்தவுடன் அரசர் இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அவரைப் பாடுமாறு கூறினாள். பாடல் ஆரம்பித்தது. மன்னர் உடலில் அசைவுகள் தோன்றின. அவர் இசையில் லயிக்க ஆரம்பித்தார். இரண்டாம் பாடல் ஆரம்பித்தபோது அவர் எழுந்து அடுத்த அறைக்கு ஓடி வந்து ஃபாரினெல்லியைக் கட்டித் தழுவிக் கொண்டார். "என்ன பரிசு வேண்டும்" என்று ஆர்வத்துடன் கேட்டார். இசைக் கலைஞரோ, "தயவுசெய்து நாவிதரை உங்கள் அருகில் வர அனுமதியுங்கள்; நல்லாடை புனையுங்கள்; அரசவைக்கு வாருங்கள்" என்றார். உடனே மன்னன் அதை ஏற்றுக் கொண்டு அன்றிலிருந்து வழக்கம் போல அரசவைக்கு வர ஆரம்பித்தான்.
நாளுக்கு நாள் ஃபாரினெல்லியின் புகழ் அரசவையில் ஓங்கியது. முக்கிய அமைச்சர்களுள் ஒருவராக அவரை ஐந்தாம் பிலிப் நியமித்தான்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்
இசையின் வலிமையைச் சொல்லும் பாடலை 1959இல் வெளியான ‘கல்யாணப் பரிசு’ என்ற திரைப்படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அழகுறக் கூறுகிறார் இப்படி:-
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் – துயர்
இருளை மறைப்பதும் கீதம்
உண்மைதானே!
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் அற்புதக் கட்டுரை
சங்க இலக்கியங்களில் இசையின் வலிமையைப் பரக்கக் காண்கிறோம். ‘பண்டைத் தமிழரின் இசையும் இசைக் கருவிகளும்’ என்ற தலைப்பில் தமிழ்த்தாத்தா உவே.சாமிநாதையர் எழுதியுள்ள அரிய கட்டுரையில் இசையின் வலிமை கூறும் ஏராளமான விஷயங்களைக் காணலாம் [நல்லுரைக் கோவை (பாகம் – 2); கட்டுரை எண் 6ஐ முழுவதும் படித்தால் இசையின் பெருமையை உணரலாம். இதை இப்பொழுது இணையத்திலேயே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.]
அந்தக் கட்டுரையில் வரும் ஒரு சிறு பகுதியை அவர் சொற்களிலேயே பார்ப்போம்:-
"பெருங்கதையில், உதயணன், நளகிரி யென்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை எடுத்துத்தர அதனையே ஏவி ஊர்ந்தானென்று ஒரு செய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை உதயணனுக்கு அடங்கி நின்றதை ஆசிரியர் கூறுகையில்,
‘குருவினிடத்து மிகுந்த பக்தியுள்ள ஒரு சிஷ்யனைப் போல யானை படிந்தது’ என்னும் பொருள் பட,
"வீணை யெழீஇ வீதீயி னடப்ப
ஆனை யாசாற் கடியுறை செய்யும்
மாணி போல மதக்களிறு படிய"
என்று பாடியுள்ளார்.
மூளைத் திறனைக் கூட்டும் இசை
மொசார்ட் இசை மூளையின் திறனைக் கூட்டுகிறது என்று நவீன அறிவியல் ஆய்வு கூறுகிறது.
மனதை உயர் நிலைக்கு இட்டுச் செல்ல ஏராளமான ராகங்கள் உள்ளன. இவை உடல் வலியையும் வாழ்க்கையில் சில சமயம் ஏற்படும் உள்ள வலியையும் போக்கும்.
சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோரின் கீர்த்தனைகள் பல வியாதிகளுக்கும் பல வித கிரக தோஷங்களுக்கும் அருமருந்தாக அமைகின்றன.
‘மியூசிக் தெரபி’ என்ற ‘இசை சிகிச்சை’ இன்று பிரபலம் அடைந்து வருகிறது. சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, இசையை வாழ்க்கையின் வெற்றிக்கு யார் ஒருவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகச் செலவில்லாத இந்த உத்தி நிம்மதியையும் உடல் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் ஒன்று!
வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக விளங்குகின்ற இவை அனைத்தையும் தரும் இசையை, வெற்றி பெற விழையும் ஒவ்வொருவரும் நாடுவது அவசியம்!
–வெல்வோம்…