வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 6)

ஜீன் ராபர்ட்ஸனின் அறிவுரை: சிரித்து மகிழுங்கள்!

இடுக்கண் வருங்கால் நகுக

துன்பம் நேரும் சமயத்தில் சிரியுங்கள் என்று வாழ்வாங்கு வாழும் வழியைக் காட்டும் வள்ளுவர் கூறுகிறார்

"இடுக்கண் வருங்கால் நகுக" அதனை
அடுத்தூர்வது அஃதொப்பதில் (குறள் 621)

எனும் அவரது கூற்றில் அடிப்படையான அறிவியல் உண்மை பொதிந்து கிடக்கிறது. ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரு வேறு உணர்ச்சிகளைக் கொண்டிருக்க முடியாது. பயம், வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைத் தவிர்க்கும் உன்னதமான வழி சிரிப்பதுதான்.

காண்ட் கூறும் உண்மை

இமானுவேல் காண்ட் என்ற விஞ்ஞானி ஜோக்குகளை ஆராய்ந்து, "இறுக்கமான சூழ்நிலையில் நமது எதிர்பார்ப்புகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி, சூழ்நிலையை மாற்றி மகிழ்விப்பது ஜோக்தான்" என்கிறார். உதாரணமாக, 1790ஆம் ஆண்டு பழமையான ஜோக் ஒன்றை ஆய்வு செய்து இப்படி முடிவைக் கூறுகிறார்.

ஜோக் இதுதான்:- ஒரு ஆங்கிலேயரும் ஒரு இந்தியரும் சந்திக்கும்போது ஆங்கிலேயர் பீர் பாட்டில் ஒன்றைத் திறக்கிறார். அதிலிருந்து நுரை பொங்கிப் பீறிட்டு வழிகிறது. இதைப் பார்த்த இந்தியர் ‘ஆ’ என்று ஆச்சரியப்படுகிறார். "எதற்கு இவ்வளவு ஆச்சரியம்" என்று ஆங்கிலேயர் கேட்க, இதுவரை இப்படி பீர் பாட்டிலையே பார்த்திராத இந்தியர், "ஒன்றுமில்லை; இந்த திரவத்தை பாட்டிலின் உள்ளே வைத்திருப்பது எனக்கு ஆச்சரியம் ஊட்டவில்லை. இந்த நுரையை உள்ளே அடைத்து அதை எப்படிப் பீறிட்டு அடிக்க விடுகிறீர்கள் என்பதில்தான் எனக்கு ஆச்சரியம்" என்கிறார்.

பீர் பாட்டில் பற்றி ஒன்றுமறியாத இந்தியரின் அப்பாவித்தனம் நகைச்சுவையை ஆங்கிலேயர் மத்தியில் ஏற்படுத்தி அது ஒரு பிரபல பழம்பெரும் ஜோக்காக வழங்கி வருவதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அறிவியல் ஆய்வின் முடிவுகள்

சிரித்து மகிழும்போது முகத்தில் 43 தசைகளின் இயக்கம் தேவைப்படுகிறது. பயம், வெறுப்பு, கோபம் ஆகியவற்றைச் சிரிப்பு தூரத் தள்ளி விடுகிறது.

சிரிப்பு ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. இதய நாளங்களை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்தால் ஏற்படும் பலன்களையும் அது தருகிறது. 100 முறை சிரித்தால் அது 15 நிமிடம் சைக்கிளை ஓட்டினால் ஏற்படும் பலன்களைத் தருகிறது என்பது அறிவியல் ஆய்வின் முடிவு. மன சம்பந்தமான நோய்களைச் சிரிப்பு அகற்றுகிறது. இப்படி, சிரிப்பு என்னும் மருந்தின் பயன்களைப் பெரிய பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு ஆய்வுகள் சிரிப்பைப் பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜீன் ராபர்ட்ஸனின் அறிவுரை

ஜீன் ராபர்ட்ஸன் (Jeanne Robertson) உலகையே சிரிப்பில் ஆழ்த்தும் அமெரிக்கப் பெண்மணி. சிரிப்பின் வலிமை பற்றி ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். சிரித்து மகிழுங்கள் என்பதே அவரின் அறிவுரை. அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சமாகச் சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் அவர்.

சிரிப்பில் ஏராளமான வகைகள் உண்டு. ஒருவர் சிரிப்பது போல இன்னொருவர் சிரிப்பதில்லை; ஒரு வரியில் ஏற்படுத்தப்படும் கிண்டல்கள், வார்த்தை ஜாலங்கள், நையாண்டி, தரமான ஜோக்குகள், அடுத்தவரின் அறியாமையைச் சுட்டிக் காட்டும் கேலிகள் என்று பட்டியல் நீள்கிறது.

மனநலத்திற்கான திட்டம்

100 காமெடிப் படங்களைப் பார்ப்பது அல்லது சிரிக்க வைக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது என நம் மனநலத்திற்கான திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். லாரல் ஹார்டி, ஜெர்ரி லூவிஸ், சார்லி சாப்ளின் என (யூடியூப்தான் இருக்கிறதே!) இவர்கள் நடித்த ஆங்கிலப் படங்களையோ அல்லது மன்னார் அண்ட் கம்பெனி கே.ஏ.தங்கவேலுவின் ‘கல்யாணப் பரிசு’ போன்ற நகைச்சுவைகளையோ தொகுத்து வைத்துப் பார்த்தால் அன்றாடம் நாம் பெறும் மனநலமே வேறு!

வகை வகையாக ஜோக்குகளை இனம் பிரித்துத் தொகுத்து வைத்து, அவ்வப்பொழுது படித்து வந்தால் மனம் லேசாகும். எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் நம்மை மற்றவர்கள் ஒரு விதமாக – அலாதியாகப் பார்ப்பார்கள். சிரியுங்கள்! சிரிக்க வையுங்கள்! உலகமே பாராட்டி உங்களுடன் சிரித்து மகிழும். அழுங்கள், அழ வையுங்கள்; நீங்கள் மட்டுமே இறுதியில் அழுது அவலமாவீர்கள்! இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

நிம்மதியான மனம் வெற்றிகரமான வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அதற்கு உரம் போடுவது சிரிப்பு.

உலகின் முதல்தரமான இரண்டு ஜோக்குகள்

பிரிட்டனில் நகைச்சுவை பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலுமிருந்து வந்த 40,000 ஜோக்குகளை அறிவியலாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். 20 லட்சம் பேர் வாக்களித்துச் சிறந்த ஜோக்குகளைத் தேர்ந்தெடுத்தனர்.

மான்செஸ்டரிலிருந்து குர்பால் கோஸால் என்பவர் அனுப்பிய ஜோக் முதலிடம் பெற்றது. அது இதுதான்:-

வேட்டையாடக் காட்டிற்குள் நண்பர்கள் இருவர் சென்றனர். அதில் ஒருவர் திடீரெனக் கீழே மயங்கி விழுந்தார். உடன் வந்த நண்பர் அவரைப் பார்த்து அலறி, அவசர அழைப்பை போனில் தொடர்பு கொள்கிறார். "என் நண்பர் இறந்து விட்டார்! என்ன செய்வது?" என்று அவர் கேட்கிறார்.

பதில் வருகிறது போனில். "சற்று அமைதியாக இருங்கள்! முதலில் அவர் இறந்தாரா என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்."

ஒரு கணம் மௌனம் நிலவியது. பிறகு, ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. பிறகு, போன் செய்த நண்பர் மீண்டும் பேச ஆரம்பிக்கிறார்; "ஓகே! இப்போது என்ன செய்ய வேண்டும்?"

ப்ளாக்பூலில் இருந்து ஜெஃப் ஆனந்தப்பா என்பவர் அனுப்பி இரண்டாவதாக இடம் பெற்ற ஜோக் இது:-

பிரபல துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸும் அவரது நண்பர் டாக்டர் வாட்ஸனும் வெளியிடத்திற்குச் செல்லும்போது ஓர் இடத்தில் டெண்ட் அடித்துத் தங்குகின்றனர். இரவாகி விட்டது. இருவரும் படுத்துத் தூங்குகின்றனர்.

சில மணி நேரம் கழிகிறது. ஹோம்ஸ் எழுந்திருந்து வாட்ஸனைப் பார்க்கிறார். அவரும் விழித்துக் கொள்ளவே அவரைப் பார்த்துக் கேட்கிறார்: "வானத்தைப் பாருங்கள், வாட்ஸன்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

"லட்சக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கிறேன்" என்று பதில் அளிக்கிறார் வாட்ஸன்.

"நீங்கள் இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?" – ஷெர்லாக்ஹோம்ஸ் கேட்கிறார்.

ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்து விட்டு வாட்ஸன் பதில் அளிக்கிறார்: "வானவியல்ரீதியாகப் பார்த்தால் ஆயிரக்கணக்கான காலக்ஸிகள் விண்ணில் இருக்கின்றன. லட்சக்கணக்கான கிரகங்கள் அங்கே உள்ளன. ஜோதிடரீதியாகப் பார்த்தால் சனி கிரகம் இப்போது சிம்ம ராசியில் இருக்கிறது. மணி அதிகாலை மூன்று எனத் தெரிகிறது! நிர்மலமான ஆகாயத்தால் நாளை ஒரு நல்ல நாளைக் கொண்டிருப்போம்! மதரீதியாகச் சிந்தித்தால் கடவுள் எவ்வளவு வலிமை வாய்ந்தவன்; நாமோ பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளிதான் என்று தோன்றுகிறது. அது சரி, உங்களுக்கு என்ன தோன்றுகிறது, ஷெர்லாக்ஹோம்ஸ்?"

ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு ஷெர்லாக் ஹோம்ஸிடமிருந்து பதில் வருகிறது:" வாட்ஸன்! நீங்கள் ஒரு முட்டாள்! யாரோ ஒருவன் நமது டெண்டைத் திருடிக் கொண்டு போய் விட்டான்!"

இதைப் படிக்கும்போது உங்கள் முகத்தில் இலேசான புன்னகை அரும்புகிறதா? மனம் லேசாகிறதா? சிரிப்பின் மகிமை உங்களுக்குப் புரிந்து விட்டது.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு வளமான மனம் தேவை. வளமான மனம் பெறச் சிரித்து மகிழுங்கள்!

–வெல்வோம்

About The Author