எவ்வளவு அழகான பெயர்! பெயர் பற்றாக்குறையால், இன்றைய இயக்குனர்கள் திரைப்படங்களுக்கு பெயர் வைக்கத் தெரியாது தவிக்க, இந்த இயக்குனர் சுசீந்திரன் தன் படத்திற்கு அழகியதோர் பெயரிட்டுள்ளார். சரண்யா மோஹன் (ஆம், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நாயகனை விரும்பும் குட்டிச் சுட்டிப் பெண் தற்போது கதாநாயகி ஆகிவிட்டார்!), விஷ்ணு, கிஷோர் என்றொரு புது கூட்டணியில் தயாராகி இருக்கிறது ‘வெண்ணிலா கபடி குழு.’
திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்று இன்னும் தெரியாத நிலையில், படத்தின் பாடல்களைக் கேட்டோம். படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வி.செல்வகணேஷ். ‘வி’ என்றால் விநாயக்ராம். ஆமாம், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறில் புகழ்பெற்ற க்ராமி விருது வாங்கிய முதல் தென்னிந்தியர் ‘விக்கு’ விநாயக்ராம். அவர் மகன் செல்வகணேஷ் பெர்குஷனில் ஏற்கனவே உலகப் புகழ் பெற்றுவிட்டார். தமிழ் சினிமா இசையில் அவரின் முதல் படிதான் வெண்ணிலா கபடி குழு.
கபடி கபடி
சோர்ந்திருக்கும் எவரையும் தூண்டிவிட்டு ஊக்குவித்து எழவைக்கும் பாடல். “மண்ணைத் தொடு, மார்பில் இடு” என்று ஆத்திச்சூடி ஸ்டைலில் ஆரம்பிக்கின்றது. ஃப்ரான்ஸிஸ் க்ருபா அருமையாக எழுதியுள்ளார். ஷங்கர் மஹாதேவன் குரல் பாடலுக்கேற்ற உணர்வை அள்ளித் தருகின்றது. ஒரு கபடிக் குழுவை ஊக்குவிப்பது போல் அமைந்திருக்கின்றது. வேகமான நடையிலிருந்து இசையமைப்பாளர் மென்மைக்குத் தாவி மீண்டும் பழைய நடைக்குத் திரும்பும் விதம் அருமை. முதல் வரிகளே சில நாட்களுக்கு உதடுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும். ‘உன்னைக் கொடு, ஒன்றுபடு’ வாழ்க நின் கருத்து!
லேசா பறக்குது
தமிழ் சினிமா காணும் லட்சத்தி ஒன்றாவது காதல் டூயட். இருந்தும், தனியாய் நிற்கின்றது. செல்வகணேஷ் மெலடியில் தன் திறமையைக் காட்டுகின்றார். அய்யா, ரஹ்மானிடம் கொஞ்ச காலம் வேலை பார்த்தீரோ?! கார்த்திக்கும் சின்மயியும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். அம்மணியின் குரலில் எத்தனை கோணங்கள்!! பாடலுக்கேற்ப அழகாய் பரிமாணித்துக்கொண்டு பாடுகிறார். நா.முத்துகுமாரின் அழகிய வரிகள் பாடலின் மெட்டோடு முழுதும் கலந்து தரும் உணர்வு – சுகம்!
வந்தனம் வந்தனம்
“இது ஒரு கிராமிய திரைப்படம்” என்று சொல்லிக் கொண்டே ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். ‘சுப்ரமணியபுரம்’, ‘பருத்தி வீரன்’ கண்ட கிராமத்திய பாடல் போல ஒன்று. மாலதி குரல் பாடலுக்குக் கை கொடுக்கின்றது. வேறொன்றும் சொல்வதற்கில்லை என்று முடிக்கப் போனால், நிற்க!! இதுவென்ன பாடலுக்கு நடுவில்?! பேசுகிறார்களோ பாடுகிறார்களோ, முணுமுணுக்கிறார்களோ! எதுவாகயிருந்தாலும் இசையமைப்பாளர் தர நினைத்த மெலடி நம்மை வந்து சேர்ந்து விடுகிறது. அவ்விடத்தில் சினேகனின் வரிகள் நம்மைக் கவர்ந்து விடுகின்றன. காதலரின் உணர்வை பாடலுக்கு நடுவில் சேர்த்து புதுமை செய்த இயக்குனருக்கு சபாஷ்!
பட பட
கார்த்திக் நேதா – தமிழ்த் திரைக் கவிஞர்களில் சமீபத்திய வரவு. (நேபாளி படத்தின் பாடல்களைக் கேட்டீர்களா?!) “இம்புட்டு அழகும்” “கெடந்த பையனும்” எம்புட்டு அழகு!! மதுரைத் தமிழ் இனிக்கிறது. நல்லவேளையாக தமிழ் தெரியாதோர் யாரும் பாடவில்லை. கார்த்திக் ரொம்பவும் கச்சிதமாக முடித்துவிட்டார். கோவணம் – வானவில் – இது வரை பயன்படுத்தப் படாத உவமையோ? சரிபார்க்கவேண்டும்! செல்வகணேஷிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல மெலடி.
உயிரில் ஏதோ
இதம் தரும் பியானோ இசையோடு ஆரம்பிக்கின்றது “உயிரில் ஏதோ” பாடல். காதலியைத் தேடித் தவிக்கும் காதலனின் வலியைச் சொல்லும் பாடல். சொல்லித் தர வேண்டுமா நா.முத்துகுமாருக்கு?! சின்னப் பாடலாக இருந்தாலும் மனிதர் அசத்தியிருக்கிறார். குரல் ஹரிசரண்.
இசையமைப்பாளருக்கு நல்ல திறமை. ஏன் ஐந்து பாடல்களோடு நிறுத்திவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஐந்திலும் தன் முத்திரையைப் பதித்துவிட்டார். நிறைய இடங்களில் அற்புதமான புல்லாங்குழல் உபயோகிப்பு. செல்வகணேஷ் மிகவும் விரும்பும் கருவியோ? ரஹ்மானின் சில ஃப்லூட் ட்யூன்கள் காலத்தால் அழியாதவை என்பதை நாம் நினைவுகொள்வோம். அவரைப் போலவே, செல்வகணேஷ் அவர்களே, நீரும் நல்லிசை தந்து, வானளாவி வளர்க, வாழ்க!
எல்லாப் பாடல்களிலும் இசை வேறு; வார்த்தை வேறு என்று பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு. அவ்வளவு அழகிய வேலைப்பாடு. தற்போது வரும் பாடல்களில் இதைக் காண்பது அரிதாக உள்ளது என்பது நமக்குத் தெரிந்ததே. மெட்டிற்கு வரிகளைக் கேட்டுக் கேட்டு புண்பட்ட காதுகளுக்கு நல்லதோர் மாற்றம்.
அழகிய வரிகளைப் பாட தமிழ் நன்கு தெரிந்த பாடகர்கள்! முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைவரும் இந்த தலைமுறையின் பாடகர்கள். ஒரு காலத்தில், தூய தமிழ் கேட்க வேண்டும் என்றால் சௌந்தரராஜனே கதி என்று கிடந்த தமிழ் சினிமா.. இனி சற்று பெருமூச்சு விடலாமோ?
“
இந்த படம் மட்ர படஙலை விட வெகு அலழக எடுக்கப்பட்டுல்லது.தன்க்யொஉ