பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முத்து வடுக நாதர் என்ற மன்னர்அரியகுறிச்சி பகுதியை ஆண்டு வந்தார். அவர் ஆட்சியின் கீழ் காளையார் கோயில் பகுதியும் இருந்தது. அவருக்கு அந்தக் கோயில் மீது தனி ஈடுபாடு உண்டு. அந்தக் கோயிலுக்குச் சென்று தினமும் வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயக் கம்பெனியைச் சேர்ந்த தளபதி ஜோஸப் ஸ்மித் என்பவன் அந்தப் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். முத்துவடுக நாதருக்கும் ஸ்மித்திற்கும் பகைமை மூண்டது. மன்னருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் அவருடன் நேரிடையாக மோதாமல் வஞ்சகமாகக் கொல்லத் திட்டமிட்டான் ஸ்மித். அவரிடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, அவரைக் கோயில் பக்கம் வரவழைத்து திட்டமிட்டபடி கொன்று விட்டான்.
இதைக் கேள்வியுற்ற அவரது மனைவி வேலு நாச்சியார் யாருக்கும் தெரியாமல் கோயில் பக்கம் வந்தார். அவருடன் மருதுபாண்டியரும் காவலாக வந்தார்கள். வேலுநாச்சியார் தன் கணவர் கொல்லப்பட்ட இடத்தைப் பார்த்துக் கதறினார். பின், ரகசியமாக அந்த ஊரை விட்டுச் செல்லும் பொருட்டு குதிரையில் காட்டு வழியாக அரியக் குறிச்சி நோக்கிச் சென்றார்.
போகும் வழியில், உடையாள் என்னும் கன்னிப்பெண் ஒருத்தி வேலுநாச்சியாரைக் கண்டாள். இரவில் ஒரு பெண்மணி குதிரையில் காட்டு வழிப்பாதையில் செல்வதைக் கண்டு மிகவும் வியப்புற்றாள். அந்தப் பெண்மணி வெகுதொலைவு சென்றதும் குளம்பொலி எழுப்பியபடி வந்த குதிரைகளில் இருந்து இறங்கினர் ஆங்கிலேயச் சிப்பாய்கள் சிலர்.
ஒரு சிப்பாய் கடுமையான குரலில் "இந்தப் பக்கம் ஒரு பெண்மணி சென்றாளா?" என வினவ, உடையாள் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். ஆத்திரமடைந்த சிப்பாய், "உண்மையைச் சொல்லாவிட்டால் என் வாளுக்கு இரையாகிவிடுவாய்" என்று மிரட்டினான். உண்மையைச் சொல்லமுடியாது என அவள் பதிலளிக்க, "இந்த சின்ன வயதில் இத்தனைத் திமிரா உனக்கு.." என்றவாறே தன் வாளினால் அவளை வெட்டிச் சாய்த்தான் சிப்பாய்.
வெட்டப்பட்ட உடையாள் ‘வெட்டுடையாள்’ ஆனாள். கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் அரசியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த உடையாளை தெய்வமாக மதித்து அவளுக்கு ஒரு கோயிலையும் எழுப்பினர். இவளே வெட்டுடையாள் காளி என்ற பெயரில் போற்றப்பட்டு கோயிலில் அருள் புரிகிறாள்.
வேலுநாச்சியார் தனக்காக உயிரைத் தியாகம் செய்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பற்றி அறிந்து, பின்னர் அந்தக் கோயிலுக்காகப் பல கிராமங்களை மானியமாகக் கொடுத்தார். தன் வைரப் பதக்கம் பதித்த திருமாங்கல்யத்தையும் அர்ப்பணித்தாள்.
இதுவே அக்கோயிலின் தலவரலாறு.
கோயில் கிழக்கு திசை பார்த்து அமைந்திருந்தாலும் வெட்டுடையாள் காளி மேற்கு நோக்கி நின்று அருள்புரிகிறாள். சூலத்தை ஏந்தியபடி எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். சூலம் கீழே குத்தியபடி இருக்கிறது. வலது கரங்களில் சூலம், அங்குசம், வாள் மற்றும் அம்பு முதலியவற்றையும் இடது கரங்களில் பாசம், வில், கேடயம் மற்றும் கபாலம் ஆகியவையும் ஏந்தியிருக்கிறாள்.
இங்கு பூஜை செய்யும் விதமும் வித்தியாசமாகத்தானிருக்கிறது. குறைநீக்க வேண்டி வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை பூசாரியிடம் கொடுத்து தங்கள் குறைகளைச் சொல்கின்றனர். பூசாரியும் அதைக் காளியின் பாதத்தில் வைத்து, பக்தரின் பெயரையும், அவர்தம் குறைகளையும் உரத்த குரலில் சொல்கிறார்.
காளியின் பின் பக்கம் ஒரு பீடமும், அதன் அருகில் ஒரு சுத்தியும் உளியும் இருக்கிறது. அங்கே அந்த ரூபாய் நாணயத்தை வைத்து
இரண்டாக வெட்டுகின்றனர். நாணயம் இரண்டு துண்டுகளாவதைப் போல் அவரது குறைகளும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து போய்விடுமாம். அவர் வேண்டுதல் நிறைவேறியதும் இந்தக் கோயிலில் அன்னதானம் செய்ய வேண்டும்.
நாணயங்களை வெட்டிப்போடுவதால் "வெட்டுக்காளி" என்ற பெயர் வந்ததாகவும் சொல்லலாம். இந்த நேர்த்தியைச் செய்ய வருபவர்கள் முதலில் அனுமதி பெற்று குறிப்பிட்ட தொகையைக் கட்டவேண்டும்.