தேவையான பொருட்கள்:
கோப்தாவுக்கு:
உருளைக்கிழங்கு – 4
கேரட் – 2
பட்டாணி – ½ கோப்பை
பீன்ஸ் – 5
மைதா – 6 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழச் சாறு – 3 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பிரெட் துண்டுகள் – 6
அரைக்க:
தேங்காய் – 1½ மூடி
முந்திரி – 10
புதினா – 1 கட்டு
கொத்துமல்லித்தழை – ½ கட்டு
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 10
தாளிக்க:
பட்டை – 2
லவங்கம் – 2
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வேக வைத்து, தண்ணீரில்லாமல் வடித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உருளைக்கிழங்கு, காய்கறி, மைதா, எலுமிச்சம்பழச் சாறு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரெட் துண்டுகள் (தண்ணீரில் நனைத்துப் பிழிந்தது), உப்பு, கொத்துமல்லி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைய வேண்டும்.
பிசைந்ததைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு, ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, உருண்டைகளைப் பொரித்தெடுத்தால் கோப்தா தயார்.
அடுத்ததாக, தேங்காய், முந்திரி இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு புதினா, கொத்துமல்லித்தழை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்குங்கள்.
அத்துடன் அரைத்து வைத்த புதினா மசாலாவைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள்.
கூடவே, அதில் 4 கோப்பை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
பிறகு தேங்காய், முந்திரி விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
பரிமாறும்பொழுது , கோப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொத்துமல்லி தூவிப் பரிமாற வேண்டும்!
சுவையான வெஜிடபிள் கோப்தா தயார்! இது பிரைடு ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவிற்குப் பொருத்தமாக இருக்கும்.
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
“