நாள்தோறும் நமது உணவில் எப்படியாவது சேர்ந்து விடும் வெங்காயம், நம் அன்றாட வாழ்வில் நன்றாகவே பின்னிப் பிணைந்துவிட்டது.
இந்த வெங்காயத்தின் வரலாறு என்ன? எந்த நாட்டில் முதன் முதலாகப் பயிரிடப்பட்டது? இதன் மருத்துவக் குணம் என்ன? கொஞ்சம் உரிக்கலாம் வாருங்கள்!
வெங்காயம் தோன்றிய காலம் பற்றியும், நாடு பற்றியும் திடமான தகவல்கள் இல்லையென்றாலும், மத்திய ஆசியாவிலிருந்து வெங்காயம் பிறந்திருக்கலாம் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. ஈரானிலும், மேற்கு பாகிஸ்தானிலுந்தான் முதல் தடவையாக வெங்காயம் பயிரிடப்பட்டது என்று இன்னொரு சாராரின் கருத்தும் அடிபடுகின்றது.
எது எப்படியோ, வெங்காயம் முதலில் காட்டுப் பயிராகவே இருந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகச் சொல்லப்படுகின்றது. மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன்பாக, எழுதப் படிக்கத் தெரியாத காலத்திலேயே வெங்காயம் மனித சமுதாயத்திற்கு அறிமுகமாகி விட்டது. ஆதி காலத்தில் இது அன்றாட உணவாகவும் இருந்துள்ளது.
சுமாராக 5000 வருடங்களுக்கு முன்பு வெங்காயம் பயிரிடப்படத் தொடங்கியிருக்கலாம் என்பதில் ஆய்வாளர்கள் பலர் இணக்கமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காட்டுப் பயிராகவே ஆயிரக்கணக்கான ஆண்டுக்காலம் இதைச் சாப்பிட்டு வந்தவர்கள் நாளடைவில் விவசாயப் பயிராக மாற்றியுள்ளார்கள். இலகுவில் பழுதாகாது, பயிரிடுவது சுலபம், வித்தியாசமான காலைநிலை – வித்தியாசமான மண்ணாக இருந்தாலும் சுலபமாகப் பயிரிட முடிதல், உற்பத்திகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது சுலபம், இவை எல்லாவற்றையும் விட, தாகத்தைத் தணிக்கும் குணம், உலர வைத்து, உணவுப் பஞ்ச நேரத்தில் பயன்படுத்தக்கூடியது என்பவையெல்லாம் வெங்காயத்தின் தனிச் சிறப்புகள்!
ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனத் தோட்டங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டமைக்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எகிப்தில் கி.மு-3500இல் வெங்காயம் பயிரிட்டமைக்கான வரலாற்றுக் குறிப்புகளை வைத்திருக்கின்றார்கள். சுமேரியர்கள் கி.மு-2500இல் வெங்காயம் பயிரிட்டுள்ளார்கள். இவர்கள் நகர ஆளுநரின் தோட்டத்தில் வெங்காயத்தைப் பயிரிட்டதாக எழுதியுள்ளார்கள். எனவே, மிக மிகப் பழமையான பயிர் இது என்பதை வரலாறு நன்றாகவே உறுதிப்படுத்துகின்றது.
இன்னொரு வினோதமான விடயம் என்னவென்றால், எகிப்தில் வெங்காயம் வழிபாட்டிற்குரிய ஒன்றாக இருந்துள்ளது என்பதுதான். பாரோக்கள் (Pharaohs) என்று அழைக்கப்படும் எகிப்திய மன்னர்களைப் புதைக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்துப் புதைத்துள்ள எகிப்தியர்கள், அழியாத ஒரு வாழ்வின் வடிவமாகவே வெங்காயத்தைப் பார்த்திருக்கின்றார்கள். பிரமிடுகளின் உட்சுவர்களிலும், மன்னர்களைப் புதைத்த சமாதிகளிலும் வெங்காயத்தை இவர்கள் ஓவியமாக வரைந்துள்ளார்கள். மரணச் சடங்குகளில் காணப்பட்டுள்ள வெங்காயம் விருந்துபசார மேசைகளையும் அலங்கரித்துள்ளது. இறை வழிபாட்டுப் பீடங்களிலும் இதே வெங்காயம் காணப்பட்டுள்ளது.
எகிப்திய மதகுருக்கள், வழிபாட்டுப் பீடங்களில் தங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் பொருட்களுள் வெங்காயம் முக்கியம் வகித்துள்ளது என்பதை அறிய வரும்போது வெங்காயத்தின் மகிமை நமக்கு நன்றாகவே புலனாகும்.
பதனிடப்பட்ட, புதைக்கப்பட்ட மனித உடல்களின் முக்கிய உறுப்புகளை ஒட்டி வெங்காயத்தை வைத்து மம்மிகள் அடக்கம் செய்யபப்பட்டிருக்கின்றன. நாலாவது ராம்சேஸ் என்று அழைக்கப்பட்ட எகிப்திய மன்னரின் கண்குழிகளில் வெங்காயம் வைக்கப்பட்டிருந்ததை நேரில் பார்த்துள்ளார்கள். வெங்காயத்தில் மந்திரத் தன்மை இருப்பதாகவும், இதன் பலமான நெடி இறந்தவர்களை உயிர்ப்பிக்குமளவிற்கு மந்திரத் தன்மை வாய்ந்தது என்றும் அன்றிருந்த எகிப்தியர்கள் திடமாக நம்பி வந்தார்கள் என்று எகிப்திய வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். பூத்திருக்கும் வெங்காயச் செடி நெஞ்சுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்ததையும், காது மடல்களுக்கு அருகில், கால்கள் அருகில், பாதங்களுக்கு அடியில் என்று வெங்காய வாசனையோடு மன்னர்களது உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதையும் எகிப்தில் காண முடிகிறது.
இஸ்ரவேல் (Israel) மக்கள் வெங்காயத்தைச் சாப்பிட்ட சம்பவங்களைப் பழைய ஏற்பாட்டில் காணலாம். மீன், வெள்ளரிக்காய், வெள்ளைப்பூடு, வெங்காயம் ஆகியவற்றை இவர்கள் சாப்பிட்டமை இப்புனித நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குக் கி.மு-6ஆம் நூற்றாண்டில் வெங்காயம் வருகை புரிந்துள்ளது. இதை ஒரு மருத்துவ உணவாகவே அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இலகுவான உணவுச் சமிபாட்டிற்கும், இருதயம் பலமடையவும், கண்களின் குளிர்ச்சிக்கும், மூட்டுக்கள் திடப்படவும் வெங்காயம் அருமருந்து என்றே இதன் அறிமுகம் இந்திய மண்ணில் அரங்கேறி இருக்கின்றது.
அதே போல, கிரேக்க நாட்டில் Dioscorides என்று அழைக்கப்பட்ட ஒரு மருத்துவர் (கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.) வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பலவற்றை நன்கறிந்திருந்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும் முன்பு வெங்காயத்தை நிறையச் சாப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, வெங்காயச் சாற்றை நிறையப் பருகியதோடு தங்கள் உடம்பிலும் வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ரோமானியர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்த தமது பிராந்தியங்களுக்குப் பயணமாகும்போது வெங்காயத்தை நிறையச் சாப்பிட்டுள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல கண்பார்வை, நல்ல உறக்கத்தை வரவழைப்பது, வாய்ப் புண்களைக் குணமாக்குவது, பல்வலி போக்கி, நாய்க்கடி நிவாரணி, முதுகு வலியைக் குறைப்பது என்று ரோமானியர்கள் வெங்காயத்தின் மருத்துவ மகிமைகளைக் குறிப்பிட்டுப் புகழ்ந்திருக்கின்றார்கள்.
பிற்பகுதியில் ஐரோப்பியர்களது பிரதான மரக்கறி உணவுகளில் பீன்ஸ், கோவா, வெங்காயம் ஆகிய மூன்றுமே முதன்மை வகித்துள்ளன.
நீங்கள் பச்சை வெங்காயம் சாப்பிடுவதுண்டா? அப்படி ஒரு பழக்கம் உங்களிடம் இருக்குமானால் நீங்கள் பாராட்டத்தக்கவர்தான். காரணம், நல்ல கொலஸ்ரோலை அதிகமாக உடலில் உருவாக்கும் தன்மை பச்சை வெங்காயத்திற்கே உண்டு. இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் குரோமியம் வெங்காயத்தில் இருக்கின்றது. புற்று நோயை எதிர்க்கும் சக்திகொண்ட ஒரு வேதிப்பொருளும் வெங்காயத்தில் உண்டு. தேனீ, குளவி கொட்டினால் அந்த இடத்தில் வெங்காயச் சாற்றைப் பிழிந்து விட்டீர்களானால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இன்றைய கணிப்பின்படி 90,00,000 ஏக்கர் பரப்பளவில் உலக நாடுகளெங்கும் வெங்காயம் பயிரிடப்பட்டு வருகின்றது. ஏறத்தாழ 170 நாடுகள் வெங்காயத்தைப் பயிரிடுகின்றன. வெங்காய உற்பத்தியில் முறையே சீன, இந்திய, அமெரிக்க நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.மலிவாகக் கிடைக்கும் அருமருந்தை நிறைவாக உண்போம்! ஆரோக்கியம் அடைவோம்!