ராண கால வரலாறுகள் பல கொண்ட ஒரு பரிகார ஸ்தலம்தான் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் என்ற க்ஷேத்ரம். பல வியாதிகளைப் போக்கும் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற திருக்குளம் அங்கே இருக்கிறது . ‘ஹ்ரூ’ என்றால் இதயம்; ‘தாபநாசினி’ என்றால் மனதில் ஏற்படும் தாபங்களை நாசம் செய்துவிடுவது என்பது பொருள். உடலில் கட்டி, சிரங்கு அல்லது தோல் வியாதி போன்ற பிரச்சினைகளுக்கும், மக்கள் இங்கு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். பின் அது சரியானதும் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்துகிறார்கள். இதனால் இவருக்கு ஸ்ரீவைத்திய வீரராகவன் என்றும் வினை தீர்த்த வீரராகவன் என்றும் பெயர்கள் உண்டு.
இங்கு அமாவாசையின் போது மிக அதிகமான அளவில் கூட்டம் சேர்ந்து விடுகிறது. பக்தர்கள்
ஹிருத்தாபநாசினியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பின் தம்முடன் கொண்டு வந்திருக்கும் வெல்லக் கட்டியை அங்கு கரைக்கிறார்கள். வெல்லம் கரைவது போல் உடலில் வந்த கட்டிகளும் மறைந்து போகும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்கிறார்கள். தவிர, மூதாதையரின் சிரார்த்தமும் இங்கு செய்கின்றனர். தை அமாவாசை , ஆடி அமாவாசையில் பலர் இதற்காகவே இங்கு வருகின்றனர். இங்கு வந்து ஸ்நானம் செய்யும்போது பாபங்களும் அழிந்து விடுகின்றன. இந்த வீரராகவப்பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 16வது திருத்தலமாகத் திகழ்கிறது.
இதன் புராணக் கதை பின் வருமாறு :
சாலிஹோத்ரர் என்பவர் பத்ரிகாஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் புருபுண்ணியர் என்பவருக்கும் சதி என்ற பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே திருமாலை அவர் மனம் நாடியது. தீர்த்த யாத்திரை அடிக்கடி செய்வார். ஒரு சமயம் தீர்த்த யாத்திரை செய்யும் போது இந்தத் திருவள்ளூரை அடைந்தார். அவர் வந்த தினம் தை அமாவாசையாக இருந்தது. ஹிருத்தாபநாசினி என்ற புண்ணியத் தீர்த்தத்தில் பல சித்தர்களும், ரிஷி முனிவர்களும், தேவர்களும் அங்கு நீராட வந்த அதிசயத்தைக் கண்டார். திருமாலைக் காண இந்த இடம்தான் சரியானது என்று தானும் அதில் நீராடி, குளத்தின் வடதிசையில் தவம் செய்ய ஆரம்பித்தார்.
பல மாதங்கள் எழாமலே இந்திரியங்களை அடக்கி அவரால் தவம் செய்ய முடிந்தது. வருடத்தில் ஒரு முறை தவம் கலைத்து, பின் நெல்லை அரிசியாக்கி, அதை மாவாக்கி அதில் ஒரு பகுதியை அன்னதானம் செய்து, பின் தானும் உண்டு மறுபடியும் தவத்திற்குப் போய்விடுவார். இப்படியே சில வருடங்கள் கழிந்தன. ஒரு வருடம் அவர் தன் தவம் கலைத்து, அரிசி மாவைத் தயாரித்து அதிதிக்காகக் காத்திருந்தார்.
அந்த நேரம் ஒரு வயோதிகர் வந்து தனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்றும் கேட்டார். சாலிஹோத்ரரும் மனம் மகிழ்ந்து அவருக்கு அரிசிமாவை உருண்டையாகச் செய்து கொடுத்தார். அவரும் அதை உண்டபின் இன்னும் பசியடங்கவில்லை என்றார். இவரும் கொஞ்சம் கூட தனக்கு இல்லையே என்று சிந்திக்காமலே தன்னிடமிருந்த மற்றொரு உருண்டையையும் கொடுத்தார். பின்னும் அவர் பசியென்று சொல்ல தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.
வயோதிகரும், "அப்பா! இப்போதுதான் பசி தீர்ந்தது. மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேன். " எவ்வுள் கிடப்பது? – கிம்கிரஹம்?” என்று கேட்டார் சமஸ்கிருதத்தில். இவரும் பர்ணசாலையில் ஒரு இடம் காட்ட அந்த முதியவர் தெற்குத் திசையில் திருவடியை வைத்தார். பின் நீட்டிப் படுத்தார். வடதிசையில் அவரது திருவடிகள்
மிக அழகாக இருந்தன. அப்போது எல்லா திசைகளிலிருந்தும் மங்களமான ஒலிகள்
வர ஆரம்பித்தன. இனிய கானமும் ஒலித்தது.
மணியின் ஒலி அந்த இடத்தை மிகவும் புனிதமாக்கியது. சாலிஹோத்ரருக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. பல்லாண்டுகளாக அவர் பார்க்க விரும்பிய திருமால்தான் வந்து சயனித்திருக்கிறாரென்று. பின் சயனித்த அந்த வயோதிகர் எழுந்திருக்கவேயில்லை. முகத்தில் ஒரு பொலிவு, காந்தமாக இழுக்கும் கமலக்கண்கள், வில்லினையொத்த புருவங்கள், மந்தஹாசவதனம் என்று சாட்க்ஷாத் பள்ளிகொண்டப் பெருமாள் ஆனார். வயோதிகர் "எவ்வுள் படுப்பது?” என்று கேட்டதினால் ”திருஎவ்வுள்” என்ற ஊராகிப் பின் மறுவி திருவள்ளூர் என தற்போது ஆகிவிட்டது. பெருமாளை கிங்கிருகேசன் என்றும் அழைக்கின்றனர் . பெருமாளின் வலதுகரம் சாலிஹோத்ரரை ஆசீர்வதிப்பது போல் அவரது சிரசின் மேல் வைத்தபடி இருக்கிறது.
ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர் அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும் திருவள்ளூருக்கு செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில் இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று அப்போதுதான் அவர் மனதில் பட்டது.
பின் அவர் அங்கு போய்ப் பிராத்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர் இந்தப் பெருமாள் மேல் "வீரராகவப் பஞ்சகம்” எனும் நூலை இயற்றியிருக்கிறார். இந்தக் கோயில் வாயிலில் இந்த வீரராகவப்பஞ்சகம் பளிங்குப் பலகையில் செதுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, திருமங்கையாழ்வார் இயற்றிய மங்களாஸாசனமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வைணவத் தலமானதால் இங்கு கணபதி தும்பிக்கையாழ்வாராக அமர்ந்திருக்கிறார். கோயிலில் வரிசையாக கொடிமரம், பலிபீடம் பின் கருடாழ்வார் அதற்குப் பிறகு பள்ளி கொண்ட பெருமாள் – வீர ராகவப் பெருமாள் தரிசனம் தருகிறார். எல்லா வைணவக் கோயில்களிலும் லட்சுமி நரசிம்மர் – சக்கரத்தாழ்வார் கண்டிப்பாக இருப்பது வழக்கம். இங்கும் இவர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.
சோளிங்கபுரம் நரசிம்மர், சோட்டானிக்கரை பகவதியின் சன்னிதானத்தில் மனப்பிரமை பிடித்தவர்கள் வந்து தகுந்த பரிகாரம் செய்து சரியாகிப் போவார்கள். அதேபோல் இங்கும் இதுபோல் அவதிப்படுபவர்களை அழைத்து வந்து சக்கரத்தாழ்வார் முன் அமர வைக்கிறார்கள். பின் பூஜை செய்யப்படுகிறது. அதன் பின் சக்கரத்தாழ்வாரின் தீர்த்தத்தை அவர்கள் மேல் அடிக்க, அவர்கள் குணமடைகிறார்கள் .
இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் பெயர் வசுமதித் தாயார். ஸ்ரீராமானுஜருக்கும் தனி சன்னதி உண்டு. அங்கு எல்லோரும் நெய் விளக்கு ஏற்றுகிறார்கள். வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீராம சீதை லஷ்மண ஹனுமாரின் சன்னதியும் உள்ளது. சூடிக் கொடுத்த ஆண்டாளும் அழகுக் கொண்டையுடனும் கிளியுடனும் அருள் புரிகிறாள். அருகே ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதியும் உள்ளது.
இந்த இடத்தில் ஒரு கோசாலையும் அமைக்கப்பட்டு கோமாதா பூஜையும் நடக்கிறது. தவிர பெருமாளுக்கு கருடசேவை, வைரமுடி சேவை என்று பல பிரம்மோத்சவங்களும் நடைபெறுகின்றன. இந்த இடத்தில் வேண்டிக் கொண்டால் வேண்டிக் கொண்டது அப்படியே நடக்கும். அருள்மிகு வீரராகவப் பெருமாளின் ஆசிகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் பலருக்கு குருவாகவும் – மருவாகவும் -குலதெய்வமாகவும் – நலம்தரும் தெய்வமாகவும் அருள்பாலிக்கின்றார். விசாலம் அவர்களுக்கு மிக்க நன்றி