வீட்டிலேயே ஃபான்டா

செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் குளிர் பானங்களைத் தவிர்க்க, நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானங்களைத் தயாரித்துப் பருகலாம். அப்படி இந்த வாரம் நாம் கற்றுக்கொள்ள இருப்பது உலகப் புகழ்பெற்ற குளிர்பானமான ஃபான்டா செய்முறை!

தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 600 கிராம் (3 கோப்பை),
தண்ணீர் – 300 மில்லி (1½ கோப்பை),
ஆரஞ்சு பேஸ்ட் – 1½ தேக்கரண்டி,
சிட்ரிக் அமிலம் – 1½ தேக்கரண்டி,
ஆரஞ்சு எஸென்ஸ் – சில துளிகள்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கொண்டு, அதனுடன் சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வையுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் ஆரஞ்சு எஸென்ஸ், ஆரஞ்சு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைக் கலந்து கொண்டால் ஃபான்டா சிரப் தயார். இதைச் சுத்தமான, உலர்ந்த கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். தேவையானபொழுது தேவைக்கேற்பத் தண்ணீரில் இதைக் கலந்து கொண்டால் வீட்டிலேயே சுவையான ஃபான்டா தயார்! பருகுங்கள்! உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்!

பின் குறிப்பு: எச்சரிக்கை! ஒருபோதும், தண்ணீர் கலக்காமல் சிரப்பை அப்படியே அருந்த முயல வேண்டாம்! தொண்டை அழற்சி ஏற்படும்!

About The Author

1 Comment

Comments are closed.