நம்ம வீட்டு மேல்தளத்தை செப்பனிட்டுப் புதுப்பித்து, ரெண்டு பெட்ரூம் தளத்தை மூணு பெட்ரூமாய் விஸ்தாரப்படுத்தி முடித்த போது பெண்டு கழண்டு விட்டது. இப்போது அடுத்த பிரச்சனை, அதில் குடி வருவதற்கு ஒரு குடும்பத்தை இனங்காண வேண்டுமே என்பது.
ட்டு லெட் போர்டு மாட்டி விட்டு, அண்ணாநகர் டைம்ஸிலும் விளம்பரம் கொடுத்து விட்டால் வாடகைக்கு வந்து மொய்த்து விடுவார்கள். ஆனால், நாகரீகமான, தகராறு சச்சரவு பண்ணாத அடக்கவொடுக்கமான பார்ட்டியாய் அமைய வேண்டுமே என்பதுதான் பெரிய கவலை.
இந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போதுதான் வீடு கேட்டு வந்தான் ஹீரா. நம்ம சொந்த சாச்சா மகன் ஹீரா. இப்போது அவன் குடியிருக்கிற ரெண்டு பெட்ரூம், கீழ் வீடாயிருந்த போதும், வீடு வசதிக் குறைவாயிருக்கிறது. இந்த மாதிரியொரு மூணு பெட்ரூம் முதல்மாடி வசதியாயிருக்கும் என்றான். உறவுக்காரன் என்பதற்காக வாடகையில் சலுகை ஏதும் வேண்டாம், பத்தாயிரம் தர ரெடி என்றான்.
அல்லா, ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது என்று ஹீராவுக்கு உடனடியாய் ஓக்கே சொல்லி அனுப்பி வைத்தேன். அதுதான் நான் செய்த தப்பு.
அடுத்த மாசத்திலிருந்து மாசாமாசம் சுளையாய்ப் பத்தாயிரம் ரூபாய் வந்துவிடப் போகிறது என்று நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டதில், இந்த வீட்டில் என்னை மீறிய சக்தியொன்று இருக்கிறது என்பதை மறந்து போனேன்.
மாடியில் குடியிருக்க பார்ட்டியைப் பிடித்து விட்ட, அதிலும் நம்ம சொந்தத்திலேயே பிடித்துவிட்ட நல்ல சமாசாரத்தை நம்ம சம்சாரத்தோடு பகிர்ந்து கொண்டபோது என்னுடைய சந்தோஷமோ நிம்மதியோ அவளுடைய வதனத்தில் பிரதிபலிக்கவில்லை.
“நல்லா யோசிச்சித்தான் ஒங்க சாச்சா மகனுக்கு சம்மதஞ் சொன்னீகளா?” என்று ஒரு கொக்கியைப் போட்டாள்.
“ஆமா…. வந்து… ஒன்னயும் ஒரு வார்த்த கேட்டுப்புட்டு ஓக்கே சொல்லியிருக்கலாம். ஆனாலும் சொந்தக் காரனாச்சே, ப்ரச்சனையில்லாத பார்ட்டியாச்சேன்னு….” என்று நான் நீட்டி முழக்கினதை தயவு தாட்சணயமில்லாமல் இடைமறித்தாள்.
“ப்ரச்சனையில்லாத பார்ட்டின்னு எப்படிச் சொல்றீக? அந்த ஹீராவோட அம்மா, ஒங்க சாச்சி, சீக்காளியா படுத்துக் கெடக்கறது ஒங்களுக்குத் தெரியாதா?”
“தெரியாம என்ன, ஹீரா பெரிய வூடாப் பாக்கறதே நம்ம சாச்சிக்காகத்தானே? அவனே சொன்னானே, உம்மா படுத்துக் கெடக்கிற ரூம்பு வசதியாயில்ல, டாக்டர்ங்க வந்து போறதுக்குத் தோதா இல்லன்னு சொன்னான். கடைசிக் காலத்துல பெத்த தாயை எவ்ளோ அக்கறையாப் பாத்துக்கறான் பாத்தியா?”
“கடைசிக் காலம்னு தெரியிதுல்ல, அப்பறம் எப்படி அந்த மனுசனுக்கு வீடு தர்றேண்டு சொன்னீக?”
“ஃபாத்திமா, நீ என்ன சொல்ற?”
“என்ன சொல்லிப்புட்டேண்டு இப்படி ஷைத்தான் புடிச்சமாதிரி முளிக்கிறீக! ஒங்களுக்கும் எனக்கும் நல்லதுக்குத்தான் சொல்லுதேன். நாலு லச்சம் செலவு பண்ணி வூட்ல மராமத்து வேல பாத்திருக்கோம், பெரிசாக்கிக் கட்டியிருக்கோம். அதுல மொத மொதலா ஒரு சீக்காளியக் கொண்டாந்து குடி வக்யணுண்டு சொல்லுதியளே, அது இன்னிக்யோ நாளக் யோண்டு ஊசலாட்டிருக்கற உசிரு. பொசுக்குண்டு அது போவணும், நம்ம வூடு சாவு வூடா ஆவணும்ங்கியளா? வாடகக்கி ஆள் வந்த கையோட வூட்ல ஷாமியானா கட்டிர ணும்ங்கியளா? அப்பறம் வீடு வௌங்குமா? இது நமக்குத் தேவையா? ஒடனே போய்ச் சொல்லிப்புட்டு வாங்க, வூடு விடறதுக்கில்லண்டு.”
“எனக்கு மனசு கேக்கல ஃபாத்திமா. நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணப்படாதா?”
“பெரிய மனசு தானே, பண்ணிட்டாப் போச்சு. வீட்ட நீங்க ஆருக்குக் குடுக்கீகளோ குடுங்க. பால்காச்சுன கையோட ஒரு மவுத்து விழட்டும், வீடு வௌங்காமப் போவட்டும்.”
“டபக்னு கோச்சுக்கறியே. சரி ஒம் பிரியம் போலவே செஞ்சிருவோம். ஹீராட்ட இல்லண்டு சொல்லிப்புடறேன். காரணம் என்னாண்டு சொல்றது, எனக்குத் தெரியாம நீ ஏற்கனவே வேற ஒரு பார்ட்டிகிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டண்டு சொல்லுவமா?”
“ஒடன எந்தலமேல பழியப் போட்டுருவீகளே! சரி என்னத்தயாச்சும் சொல்லுங்க. கௌம்புங்க. அவன் அட்வான்ஸோட வந்து நிக்யப் போறான்.”
“அவன் நாள நிண்டு தான் அட்வான்ஸ் தாறதாச் சொன்னான், நா நாளக்கி விஷயத்தச் சொல்லிப்புடுதேன் ஃபாத்திமா, ஒரு நா டைம் குடு.”
“நாளக்கி நீங்கப் போய்ச் சொல்லலண்டா நானே ஃபோன் போட்டுச் சொல்லிப்புடுவேன்.”
ஒரு அச்சுறுத்தலோடு ஃபாத்திமா தன்னுடைய உருவிய வாளை உறையில் போட்டாள்.
மறுநாள் அதிகாலை, ஸுபுஹ் தொழுகையை முடித்த கையோடு, “என்ன கௌம்பலியா” என்று ஆரம்பித்து விட்டாள்.
“ஒங்களுக்கு சங்கடமாயிருந்தா சொல்லுங்க நா ஃபோன் போட்டுச் சொல்லிருதேன்.”
நீ செஞ்சாலும் செய்வே என்று வேறு வழியில்லாமல் நான் ஹீராவின் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமான போது, ஃபோன் மணி ஒலித்தது. ரிஸீவரை எடுத்து ஹலோ சொன்ன ஃபாத்திமா, “இந்தாங்க, கொஞ்சம் இரிங்க” என்றாள் என்னை.
பிறகு போனில் வந்த செய்தியைத் தெரிவித்தாள். “ஒங்க சாச்சி ராத்திரி மவுத்தாய்ட்டாகளாம். சாயங்காலம் அசருக்குப் பெறவு அஞ்சுமணிபோல எடுக்காகளாம்.”
இறுதிக் காலத்தில் தாயைப் பரிவோடு பார்த்துக் கொண்ட அன்பு மகனைப் பிரிந்து சென்று விட்ட அந்த ஆத்மாவுக்காக சில விநாடிகள் ப்ரார்த்தித்தேன். சரி, கிளம்பின கையோடு போய்ப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்றதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
“இப்பப்போய் என்ன செய்யப் போறீக, மத்யானம் லொஹருக்கப்புறம் போவலாம், நானும் வரணும்ல?” என்றாள்.
மத்யானம் புறப்பட்டுப் போனோம். ஹீராவின் வீட்டுப் பகுதியில் ஆளரவமே இல்லாதது ஆச்சர்யமாயிருந்தது. வீட்டை நெருங்கியபோது, உள்ளேயிருந்து வெள்ளை வேட்டி சட்டை, நெற்றியில் விபூதியணிந்த ஒரு நபர் அவசரமாய் வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்தார். விலாசம் மாறி வந்து விட்டோமா என்கிற சந்தேகத்தில் நானிருந்த போது, “ஹீரா பாய் வீட்டுக்குத்தானே வந்தீங்க, இதான் சார் வீடு” என்று புதிரைப் பெரிதாக்கினார்.
“என் பேர் கணேசனுங்க, ஹீரா பாயோட ஃப்ரண்ட். வீடு சின்ன வீடாச்சே ஜனம் நெறைய வருமே எப்படிச் சமாளிக்கிறதுன்னு தடுமாறிட்டிருந்தான். அடப் பைத்தியக்காரா, அரண்மன மாதிரி நம்ம வீடு இருக்கு, எதுக்கு யோசிக்கிற, நம்ம வீட்ல கொண்டு போய் வச்சிருவோம்னு, பாடிய நம்ம வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம். காரியமெல்லாம் நம்ம வீட்லதான் நடக்குது. கஃபன் துணியாமே, வெள்ளத் துணியொண்ணு டேபிள் மேல வச்சிருக்கேன், கொஞ்சம் எடுத்துட்டு வந்துரு கணேசான்னான். அதான் எடுத்துட்டு வீட்டப் பூட்டிட்டுக் கௌம்பறேன். இங்க வர்றவங்களுக்குத் தகவல் சொல்ல ஒரு பையனப் போட்டிருந்தோம். சோம்பேறி, எங்கயாவது டீ சாப்புடப் போயிருப்பான். நீங்க வண்டிய இங்கயே விட்டுட்டு எம்ப் பின்னாடி வாங்க சார். அடுத்த தெருதான் நம்ம வீடு. அடுத்த தெரு திரும்புனவொடன மூணாவது வீடு. வாசல்ல ஷாமியானா போட்டிருக்கும்.”
கணேசன் வேகமாய் நடக்க, நாங்கள் ஓட்டமும் நடையுமாய்ப் பின் தொடர்ந்தோம். அடுத்தத் தெருமுனை திரும்பினவுடன் ஷாமியானா கண்ணில் பட்டது. சட்டென்று இவள் என் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தாள். நான் முகத்தைத் திருப்பி அவளைக் கூர்மையாய்ப் பார்த்தேன்.
“அப்படிப் பாக்காதீக ப்ளீஸ்” என்றாள்.
“புத்தி கெட்டுப் போய்ட்டேங்க, அல்லாவுக்காக என்ன மன்னிச்சிருங்க” என்றாள், கண்கள் பனிக்க.
(கல்கி, 19.11.2006)
துன்பம் வந்த காலத்தில் பிரதிபலன் பாராமல் உதவுபவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் தாம். நல்ல கதை.