உண்மையிலேயே தடைகளை வென்று சரித்திரம் படைத்து விட்டது, பெரிய போராட்டத்திற்குப் பிறகு வெளியாகியிருக்கும் இந்தப் படம். உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது என்று முதலிலேயே சொல்லி விட்டுத்தான் படம் தொடங்குகிறது.
ஒரு புள்ளியில் கதையைத் தொடங்கி, அதன் பின்கதைச் சுருக்கம் சொல்லி, அங்கிருந்து இந்தப் புள்ளியை வந்தடைந்து, பின்னர் மேற்கொண்டு நகரும் புதுமையான முறையில் திரைக்கதை பின்னியிருக்கிறார் கமல். ஆம் பின்னியிருக்கிறார்!
புறா பறக்கும் நியூயார்க் நகரம் காட்சியாக விரிந்து, பூஜாகுமார் (நாயகி நிருபமா) தன் மண வாழ்க்கை பற்றி விவரிப்பதில் ஆரம்பிக்கிறது. கதக் நடனக் காட்சியுடன் திருநங்கை வேடத்தில் கமல் அறிமுகம் அருமை! அழகாக வருகிறார் ஆண்ட்ரியா. அணிகலன்களின் ஒலியையும் பாடலின் இசையில் பயன்படுத்தியிருப்பது புதுமை!
கமலின் மனைவியான பூஜாவுக்கு, தான் வேலை பார்க்கும் நிறுவன முதலாளியுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது. அதற்காகத் தன் கணவரைப் பிரியக் காரணம் வேண்டி துப்பறிவாளர் ஒருவரை வைத்துக் கமலைக் (விஸ்வனாத்) கண்காணிக்கிறார்.
அந்தத் துப்பறிவாளர் கமலைப் பின்தொடர்வதில், கமல் முஸ்லீம் என்கிற உண்மை தெரிய வருகிறது. அதே நேரம், பின்தொடரும்பொழுது ஏற்படும் குழப்பத்தில் துப்பறிவாளர் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த ஒருவனைப் பார்க்க நேர்ந்து விட, அவர்கள் துப்பறிவாளரைக் கொன்றுவிட்டு, நூல் பிடித்து வந்து கமல் – பூஜா குமாரையும் கடத்திச் சென்று விடுகிறார்கள்.
அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள். அவ்வளவையும் தாங்கிக் கொண்டு திருநங்கை போலவே நடிக்கும் கமல், கும்பலின் தலைவன் வருகிறான் என்று தெரிந்தவுடன் ஒரே மூச்சில் அத்தனை பேரையும் அடித்துக் கொல்லும் அந்தச் சண்டைக்காட்சி மிரட்சி! அதுவும், அந்த நேரத் துல்லியம் (timing of the fight) இதுவரை தமிழ்த் திரையுலக விசிறிகள் காணாத புதுமை! சரியாக இந்த இடத்தில் அந்த "யார் என்று தெரிகிறதா?" "பாடலை வைத்திருப்பது அசத்தல்!
இதன் பின், ஓமர் வாயிலாகப் பின்கதை ஓட்டம் (flashback). ஆப்கானிஸ்தான் கண்முன் விரிகிறது. அங்கே ஜிகாதிகளின் பயிற்சிக் காட்சிகள், ஜிகாதிகளின் வாழ்க்கை முறை ஆகியவற்றை அசலாகக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் கமல், சிறுவன் ஒருவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார். ஆனால் அவன், "நான் சின்னப் பையன் இல்ல" என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவான். அப்போது அங்கே வரும் தீவிரவாதி தன்னை வைத்து ஊஞ்சலை ஆட்டச் சொல்வான். மறுநாள் அவன் தற்கொலைப்படைத் தீவிரவாதியாகத் தன் உயிரைத் தியாகம் செய்வான்.
இப்படி நிறைய காட்சிகள். பின்லேடனும் படத்தில் வருகிறார். அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் நிகழ்காலத்துக்கு வருகிறது கதை. ஓமரின் சதித் திட்டத்தைத் தடுக்கக் கமல் போராடுவதுதான் மீதிக் கதை. இடையிடையே பின்னோக்கிக் கொண்டு சென்று, கதையின் முடிச்சுகளை அவிழ்ப்பது புதுச்சுவை!
பல இடங்களில் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் நிருபமா பேச்சுவாக்கில், தங்கள் கடவுளுக்கு நான்கு கைகள் என்று சொல்ல, அதற்கு அந்த அதிகாரி அப்படியானால் எப்படி சிலுவையில் அடிப்பீர்கள் என்று கேட்பார். அதற்கு நிருபமா "நாங்க சிலுவையில் அடிக்க மாட்டோம்; கடல்ல தூக்கிப் போட்ருவோம்"" என்று சொல்வது, படத்துக்கு உரையாடலாசிரியர் கமல்ஹாசன் என்பதைப் போகிற போக்கில் நினைவூட்டுகிறது.
புறாக் காலில் கதிர்வீச்சுச் சாதனம், தட்டான் போல் பறக்கும் காமிரா, பின்கதை வரப்போகும் இடங்களில் நேர உறைதல் தொழில்நுட்பத்தை (Time Freezing technology) பயன்படுத்தியிருப்பது, அலைபேசிச் சமிக்ஞையைத் தடுக்கச் சமைப்பானைப் (Microwave Oven) பயன்படுத்துவது எனப் பல இடங்கள் அசத்தல்!ஆனால், இவ்வளவு துடிப்பான கதையில் திரைக்கதை மெதுவாக நகர்வது அலுப்பூட்டுகிறது!
ஒட்டுமொத்தமாகப் படத்தைப் பார்த்து முடிக்கும்பொழுது, இந்தத் தீவிரவாதிகள் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறதே என்ற எண்ணம்தான் மேலிடுகிறது. அதே நேரம், "அமெரிக்க ராணுவ ஆளுங்க பொம்பளைங்களையும் குழந்தைங்களையும் கொல்ல மாட்டாங்க" என்றெல்லாம் வசனம் வைத்திருப்பது, ஆலிவுட்டில் நுழையக் கமல் தயாரித்திருக்கும் நுழைவுச்சீட்டுதான் இந்தப் படம் என்னும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது.
படம் நன்றாகவே இருக்கிறது, தொழில்நுட்பரீதியாகவும்! திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! இரண்டாம் பாகத்தில், கமல் அதைச் செய்வார் என்று நம்புவோம்!
விஸ்வரூபம் என்பதற்குப் பிரம்மாண்டம் என்பது போக, உலகின் உருவம் என்றொரு பொருளும் இருக்கிறது. அதைத்தான் இந்தப் படமும் காட்டுகிறது!
விஸ்வரூபம் – உலகின் உண்மை முகம்!
“