விஸ்வரூபம் – இசை விமர்சனம்

முன்பு தசாவதாரம் எடுத்த உலகநாயகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், தயாரிப்பு, விநியோகம் என விஸ்வரூபம் எடுக்கும் படைப்பு! இதில் ‘ஆளவந்தா’னுக்குப் பிறகு ஷங்கர், எசான் (Ehsaan), லாய் (Loy) எனும் மூவர் கூட்டணியோடு களமிறங்கியுள்ளார். புது முயற்சியாக ஆரோ 3டி (Auro 3D) எனும் தொழில்நுட்பத்தையும் இப்படத்தில் புகுத்தி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாகத் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் வெளியிடவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இக்கட்டுரை எழுதப்படும் நேரம் வரை இதுதான் தமிழ்நாட்டின் அவல் என்பது அனைவரும் அறிந்ததே!

பாடல்களில் இரண்டைக் கமலும், இரண்டைக் கவிப்பேரரசு வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள்.

விஸ்வரூபம்

ஊட்டி மலைத் தொடர்வண்டியின் சப்தத்தை ஒத்த ஒலியுடன் பாடல் ஆரம்பித்து, பின்னர் தடதடத்து வழக்கமான ஹீரோ அறிமுகப் பாடலாக நாயகனின் பராக்கிரமத்தை விவரிக்கிறது. இடையில் வரும் இசைக்குறிப்பு ஒன்று சற்றே பழக்கமானதுதான். இந்திப் படங்களில் அரேபியாவைக் காட்டும்போது வழக்கமாக வாசிப்பார்களே? அதே இசைக்குறிப்பை இங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். தவிர்த்திருக்கலாம்! இருந்தும் சுராஜ் ஜெகனின் குரலும் வைரமுத்துவின் வரிகளும் பாடலைக் கரை சேர்க்கின்றன.

"இவன் யாருக்கும் அடிமை இல்லை,
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காலங்கள் தாண்டி கடக்கின்றபோதும்
காற்றுக்குக் காயம் இல்லை"

– உலகநாயகனைப் புகழ்வதென்றால் கவிப்பேரரசுக்குத் தித்திப்புச் சாப்பிடுவது போல என்பது இதிலும் இன்னொரு முறை நிரூபணமாகியிருக்கிறது!

துப்பாக்கி எங்கள் தோளிலே

ஆயுதம் எடுத்த போராளிகளின் மனமொழியாக ஒலிக்கும் பாடல். ஆங்கில வரிகளில்தான் பாடல் ஆரம்பிக்கிறது. அதை மட்டும் ஆஷிஃப் அலி பெக் எழுதியிருக்கிறார். கமல், பென்னி தயாள் பாடியிருக்கிறார்கள். தமிழ் வரிகளுக்குப் பேனா பிடித்திருக்கிறார் கவிப்பேரரசு. தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட மேற்கத்திய தேசத்தின் மீது தனது சொற்சாட்டையைச் சொடுக்கி இருக்கிறார்!

"ஒட்டக முதுகின்மேலே ஒரு சமவெளி கிடையாது.
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது!"

"எப்போதும் எங்கள் கோப்பையில் தேநீரைப் பருகும் மரணமே!" – சுளீர் வரிகள்! 

உன்னைக் காணாது நான்

இதுவரை, கண்ணனை நேசித்து ராதை பாடும் பாடல்களைப் பெண் குரலில்தான் கேட்டிருப்பீர்கள். இதில், ஒரு மாறுதலுக்கு ஆண் குரலில் கேட்கலாம்! நடன ஜதி சொல்வது போல் தொடங்கிப் பின்னர், வார்த்தைகளை ஜதிக்குப் பயன்படுத்தியிருப்பது கமலின் படைப்புத்திறன். கமல், ஷங்கர் மஹாதேவன் இணைந்து பாடியுள்ள பாடல். ராதை இப்போது இருந்தால், நிச்சயம் இந்தப் பாடலைக் கேட்டுக் கமல் மீது பொறாமைப்படலாம்! கண்ணனை அப்படிக் காதலித்து எழுதியிருக்கிறார்!

"அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்" – ராதையின் காதல் வரிகள்.

அணு விதைத்த பூமியிலே

பாடலின் தொடக்க இசை மலைப்பகுதிச் சுற்றுலாவுக்கு நம் கரம் பிடித்துக் கூட்டிச் செல்கிறது. கமல் இதில் நிகில் டிசோசாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடலையும் தானே எழுதியிருக்கிறார். ‘அணு வேண்டாம்! போர் வேண்டாம்! அன்புதான் தேவை!’ எனக் காலத்திற்கேற்ற அறிவுரையைச் சொல்லும் பாடல். இசையும் பாடலுக்குப் பக்கபலமாக ஒலிக்கிறது.

"பேராசைக் கடல் பொங்கிவிட்டால் தங்கும் இடம் இல்லை,
புது வீடெதுவும் பால்வெளியில் இன்றுவரை இல்லை" 

– ஆட்சியாளர்களுக்கு டெடிகேட் செய்யப்பட வேண்டிய பாடல்!

படத்தில் உலகநாயகன் ஏதோ பன்னாட்டு அரசியலைப் பேசியிருக்கிறார் என இந்தப் பாடலின் வரிகளிலிருந்து ஊகிக்க முடிகிறது.

விஸ்வரூபம் – நிதானித்து நிலை பெறும்!

About The Author