6.கர்மயோகத்தின் நிறைநிலை
6.5.துன்பம் வருவது பணியினால் அல்ல, பற்றினால்!
நம் அனைவரின் அடிப்படை இலக்கும் நிரந்தரமான ஆனந்தமும் ஆழ்ந்த அமைதியும்தான். இதைத்தான் மோட்சம் எனவும் முக்தி எனவும் பெரிய பெரிய பயமுறுத்தும் வார்த்தைகளில் சொல்கிறார்கள். கர்மயோகத்தின் மூலம் இந்த நிலையை அடைய முடியும்;
கர்மயோகத்தின் நிறைநிலை அதுதான். அதே நேரத்தில், வெறுமனே வேலை செய்து கொண்டிருந்தாலும் இந்த நிறைநிலை கிடைக்காது. இந்த விஷயத்தில் தெளிவு தேவைப்படுகிறது.
கர்மயோகம், நமக்குச் செயல்புரிவதன் ரகசியத்தைச் சொல்லித் தருகிறது. எப்படிச் செயலாற்ற வேண்டும் என்னும் நெறியைச் சொல்லித் தருகிறது. இதை உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் நாம் படித்ததெல்லாம் வீணே!
செயலாற்றுவது தவிர்க்க முடியாதது; அவசியமானது! ஆனால், நாம் செயலாற்றுவது மிக உயரிய நோக்கத்துக்காக இருக்க வேண்டும். இந்த உலகம் நிலையற்றது என்பதும், நாம் அனுபவங்கள் பெற்றே தீர வேண்டும் என்பதும் கர்ம யோகம் தரும் அடிப்படைத் தெளிவு.
விட்டு விடுதலையாகி நிற்கும் நிலையை அடைய, நாம் மெதுவாக, ஆனால் தீர்மானமாக முன்னேறியாக வேண்டும். பாம்பு சட்டையை உரித்து விட்டு நிற்பது போல் இந்த உலகை விலகி நின்று பார்க்கக் கூடியவர்கள் எங்கோ சிலர் இருக்கலாம். ஆனால், அவர்கள் அசாதாரணமானவர்கள். மற்றபடி நாமெல்லாம், இந்த உலகப் பணிகளில் இருந்து கொண்டே சிரத்தையுடன் முயன்று பணியாற்றித்தான் முன்னேற வேண்டும்.
கர்மயோகம் சொல்வதுதான் என்ன? இடைவிடாது செயல் புரிக! ஆனால், செயலில் பற்று வைத்திருப்பதைத் துறந்து விடுக! எதனுடனும் உன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாதே! மனது சுதந்திரமாய் இருக்கட்டும்! வலிகள், வேதனைகள், துன்பங்கள் இப்படி அத்தனையும் உலகின் இன்றியமையாத சூழ்நிலைகளே. வறுமையானாலும் சரி, வளமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, துயரமானாலும் சரி – எல்லாமே வாழ்க்கையில் வந்து போகக் கூடியவை. நிலையானவை அல்ல. இவற்றுக்கும் நமது உண்மை இயல்புக்கும் சம்பந்தமே இல்லை. நமது இயல்பு இன்ப – துன்பங்களுக்கு அப்பாற்பட்டது. புலனறிவுக்கு அப்பாற்பட்டது. கற்பனைக்கும் எட்டாதது.
நாம் செய்ய வேண்டுவது, இடைவிடாது -பற்று நீங்கி- உழைத்துக் கொண்டிருப்பதே! துன்பம் என்பது பற்றினால் ஏற்படுகிறதே ஒழிய, பணியினால் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் காரியத்துடன் நம்மை "நாம்" ஒன்றாக்கிக் கொள்வதன் மூலம் நாம் துன்பத்தில் ஆழ்கிறோம். நாம் செய்யும் பணியையும் நம்மையும் வேறாக்கிப் பார்க்கும்போது நமக்குத் துன்பம் ஏற்படுவதில்லை. வேறு ஒருவனிடம் உள்ள அழகான படம் ஒன்று எரிந்துபோனால் நாம் வருந்திக் குமைவதில்லை. ஆனால் நமக்குச் சொந்தமான படம் ஒன்று எரிந்து போனால் நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? இரண்டுமே அழகான படங்கள். ஒரே படத்தின் பிரதிகளாகக் கூட இருக்கலாம். ஆனால், ஏன் ஒன்றன் இழப்பு மட்டும் வேதனை தருகிறது? காரணம், அதனுடன் நாம் நம்மைப் பிணைத்துக் கொள்கிறோம்.
"நான்", "எனது" எனும் உணர்வுகள்தாம் துன்பத்துக்குக் காரணம். "உடைமை" எனும் உணர்வு "தன்னலம்" தருகிறது. தன்னலம் துன்பத்தை அழைத்து வருகிறது. தன்னலமான ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும், நம்மை ஏதோ ஒன்றுடன் பந்தப்படுத்தி வைக்கின்றன. உடனடியாக இந்தப் பந்தம் நம்மை அடிமையாக்குகிறது. சித்தத்தின் ஒவ்வொரு சிற்றலையும் "நான், எனது” எனச் சுழன்று நம்மைச் சுற்றி ஒரு சங்கிலியாகப் பிணைக்கிறது. நாம் அடிமையாகிறோம். எந்த அளவுக்கு நான், எனது என உழல்கிறோமோ அந்த அளவுக்கு அடிமைத்தனம் வளர்கிறது. துன்பம் மிகுகிறது.
கர்ம யோகம் நமக்குச் சொல்லித் தருவது, உலகத்தின் அத்தனை ஓவியங்களையும் ரசித்துக் கொள்ளுங்கள். ஆனால், எதனுடனும் உங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளாதீர்கள்! எதையும், ஒருபோதும் என்னுடையது என்று கூறிக் கொள்ளாதீர்கள். ("இதம் ந மம" எனும் வேத மந்திரம் சொல்வது இதுதான். "இது என்னுடையதில்லை"). என்னுடையது எனச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் துன்பம் கூடவே வருகிறது. யான், எனது என்னும் செறுக்கு அறும்போது துன்பம் தூர விலகுகிறது.
-(CW 1 – Pages 99 – 101).
(தொடரும்)
“