6. கர்ம யோகத்தின் நிறைநிலை
6.3. விட்டு விடுதலையாகி நிற்றல்.
கர்ம யோகத்தின் நிறைநிலை என்பது பாரதியார் சொன்ன "விட்டு விடுதலை"யாகி நிற்கும் நிலைதான். நல்ல செயல்களைச் செய்வதால் நல்ல பதிவுகள் அமைவதற்கும் மேலான நிலை இது. "பந்தமில்லை, பந்தமில்லை; பயமே இல்லை" என்கிற நிலை. முழுக்க முழுக்க எந்தவிதத் தளையும் இல்லாமல் இருப்பது. நல்லது, கெட்டது ஆகிய இரண்டு விதத் தளைகளும் நீங்குவது. தங்கச் சங்கிலியாய் இருந்தால் என்ன? இரும்புச் சங்கிலியாய் இருந்தால் என்ன? பிணைப்பு பிணைப்புதான்! காலில் ஒரு முள் தைத்து விட்டது என்றால் இன்னொரு முள்ளைக் கொண்டு அந்த முள்ளை எடுக்கிறோம். பிறகு, இரண்டு முட்களையும் தூக்கி எறிந்து விடுகிறோம்! கெட்ட பதிவுகளை, நல்ல பதிவுகள் கொண்டு எதிர்கொள்வோம்! தீயவை யாவும் முழுமையாய் மறைந்து விடும்; அல்லது மனதின் ஒரு மூலையில் நமது கட்டுப்பாட்டின் கீழ் அடங்கி நிற்கும். இதற்குப் பிறகு, நல்ல பதிவுகளையும் வென்றாக வேண்டும்! இந்த நிலையில்தான் பற்று என்பது பற்றின்மையாக மாறும். செயல் புரிவோம்; ஆனால் செய்யும் செயல்கள், நமது மனதில் ஆழ்ந்த பதிவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வோம். சிற்றலைகள் எழும்பி மறையட்டும்! நமது உடலும் புத்தியும் அரும்பெரும் செயல்களைச் செய்யட்டும்! ஆனால், அவை ஆன்மாவில் ஆழ்ந்த பதிவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
6.4. கிறிஸ்துவாகலாம், புத்தராகலாம் நீங்களும் நானும்!
கர்ம யோகத் தத்துவத்தின்படி, நாம் செய்யும் வினை எதுவொன்றும் அதன் பலனைத் தராமல் அழிந்து விடுவதில்லை. இயற்கையின் எந்தச் சக்தியும் செய்யும் எந்தவொரு செயலுக்கான விளைவையும் தராமல் நிறுத்தி விட முடியாது. நல்ல காரியத்தின் நல்ல விளைவானாலும் சரி; தீமையின் தீய விளைவானாலும் சரி.
எந்தக் காரியத்தையும், இது முழுக்க முழுக்க நல்லது என்றோ, இது முழுக்க முழுக்கத் தீயது என்றோ எல்லைக் கோடு வகுத்துச் சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு சுவாமிஜி சொல்லுவார்: "நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களில் சிலர் நான் நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதே நேரத்தில் நான் சுற்றுச்சூழலில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்களைக் கொன்று கொண்டிருக்கக்கூடும். என் பேச்சு உங்களுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், நுண்ணுயிர்களுக்கு அது தீங்காகும். உங்கள் மீது என் பேச்சு ஏற்படுத்தும் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. நுண்ணுயிர்களின் மீதான தாக்கம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதே போலத்தான், நமது தீய செயல்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், எங்கோ ஓரிடத்தில் அவை நல்ல விளைவுகளை ஏற்படுத்துவது தெரிய வரும்! நல்ல செயல்களிலும் ஏதோ கொஞ்சம் தீமை இருக்கிறது என்பதையும், தீமைக்கு மத்தியிலும் ஏதோ நன்மை இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் கர்ம யோகத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டதாகிறது.
இதனால் என்ன? நாம் என்னதான் முயற்சி செய்தாலும் முழுக்க முழுக்கத் தூய்மையான செயல் என்று எதையும் செய்ய முடியாது. அதே போல், முழுக்க முழுக்கத் தூய்மையற்றது என்றும் எந்தச் செயலும் இல்லை. தூய்மை, தூய்மையற்றது என்பதை இங்கே பிறருக்குத் தீங்கானது, தீங்கற்றது எனும் பொருளில் பிரயோகிக்கிறோம். பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் நம்மால் மூச்சு விடக்கூட முடியாது. நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு கவளம் உணவும் மற்றொரு வாயிலிருந்து பறித்துக் கொள்ளப்பட்டது. நாம் வாழ்வது என்பதே மற்ற பல உயிர்களைப் பின்னுக்குத் தள்ளிய பின்பே அமைகிறது. அவை மனிதர்களாக இருக்கலாம், நுண்ணுயிர்களாக இருக்கலாம். இதனால் என்ன தெரிகிறது? வெறுமனே செயல்புரிந்து கொண்டிருப்பதாலேயே நிறைநிலையை அடைந்துவிட முடியாது! என்னதான் உழைப்பு உழைப்பு என்று உழைத்துக் கொண்டிருந்தாலும் உழைப்பின் விளைவில் நல்லதும் தீயதும் கலந்துதான் இருக்கும்.
என்னதான் முயன்றாலும் இந்த உலகை முழு நிறைவடைந்த சொர்க்க பூமியாக ஆக்கி விட முடியாது. எல்லாமே கனக் கச்சிதமாக மூளியற்ற முழு நிறைவாக அமைவது என்பது இலட்சிய நிலை. ‘மெய்க்கும் கிருத யுகம்’ என்பது சாத்தியமே இல்லை. முழு நிறைவான உலகம் என்பது சொற்றொடர்களிடையே ஆன முரண்பாடு. வாழ்க்கை என்பது நிரந்தரமான போராட்டம். காற்றுக்கும் உணவுக்குமான போராட்டம்! காற்றோ உணவோ இல்லாமல் போனால் நாம் இறந்து போவோம். வாழ்க்கை என்பது நீரொழுக்குப் போல அவ்வளவு எளிதானதல்ல. நமக்குள்ளே உள்ள ஒன்றுக்கும், புற உலகுக்கும் இடையே ஆன போராட்டத்தைதான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்தப் போராட்டம் நின்றுபோனால் வாழ்க்கையே நின்று போகும்.
நற்செயல் புரியும் நம் முயற்சியெல்லாம் நமக்கு ஓர் ஆன்மிகப் பயிற்சியே என்பதை முன்னமே பார்த்தோம். நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் உபகாரமும் நம்மைத் தூய்மைப்படுத்த உதவுவது மட்டுமின்றி, நம்மைக் கடையனிலும் கடையனாகப் பாவித்துக் கொள்ளும் பணிவைத் தருகிறது.
இந்த இடத்தில்தான் ஞானயோகம், பக்தியோகம், கர்ம யோகம் எல்லாம் சங்கமிக்கின்றன. என்றென்றும் முழுமையான தன்னல மறுப்பே வாழ்க்கையின் இலட்சியச் சிகரம்! இதை நோக்கித்தான் எல்லா யோகங்களும் நம்மை இட்டுச் செல்கின்றன. புத்தர் தியானத்தின் மூலமும், இயேசு கிறிஸ்து பக்தியின் மூலமும் அடைந்த அதே நிலையை, பூரணமான தன்னலமற்ற செயலின் மூலம் நாமும் அடையலாம்.
(தொடரும்)