5. திரும்பிப் பார்ப்போம்!
கர்ம யோகத்தின் நிறைநிலை என்னும் நிறைவுப் பகுதிக்குச் செல்லுமுன், நாம் இதுவரை பகிர்ந்துகொண்ட செய்திகளை நினைவுகூர்வது நலம் பயக்கும். கர்ம யோகத்தின் அடிப்படைகள் என்னும் முதல் பகுதியில் நாம் சிந்தித்த விஷயங்கள்:
இன்ப துன்ப அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில் பாடம் புகட்டுகின்றன. உண்மையில், இன்பங்களை விடத் துன்பங்களே நமக்கு மேலதிகம் கற்றுத் தருகின்றன. அனுபவங்கள் நம் மீது தாக்கும்போது பதிவுகளை விட்டுச் செல்கின்றன. இந்தப் பதிவுகள் நமது குணங்களை நிர்ணயிக்கும் காரணிகளாகும். அனுபவங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன எனச் சொல்வது கூடச் சரியில்லை. பிரபஞ்ச அறிவு நமக்குள் உறங்கிக் கிடக்கிறது. நம்முள் ஏற்கெனவே உள்ளது வெளிப்படப் புற அனுபவங்கள் காரணங்கள் ஆகின்றன. அனுபவங்கள் மட்டுமல்லாது நமது உணர்ச்சிகளும் செயல்களும் கூட உள் உறைவனவே. அந்தந்தத் தருணங்களில் வெளிப்படுகின்றன. குழந்தை பிறக்கும்போது காலி சிலேட்டாகப் பிறப்பதில்லை. பல பிறவிகளின் அனுபவங்கள், உணர்ச்சிகள், வினைகளின் பதிவுகளை ஏந்தியே பிறக்கிறது. இதனை ‘வாஸனை’ என்பார்கள். இந்த வாஸனைகளின் ஒட்டுமொத்தமே ‘ஸம்ஸ்காரம்’ எனப்படுவது. புலன்கள் மூலம் நமக்கு ஏற்படும் நிகழ்வுகள், ஏற்கெனவே நம்முள் உறைந்துள்ள வாஸனைகளுடன் கலந்து கட்டியாகி நமது எதிர்வினையாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, புதிய அனுபவங்கள், செயல்கள் நமது வாஸனைகளை மேலதிகப்படுத்துகின்றன.
நமது செயல்களுக்கு நம் ஸம்ஸ்காரங்களே காரணம். எண்ணங்கள் செயல்களாகவும், செயல்கள் பழக்கங்களாகவும், பழக்கங்கள் குணங்களாகவும் உருவெடுக்கின்றன. இவை அனைத்தின் விளைவுகளே நாம் இன்றிருக்கும் நிலைமை, நமது சூழ்நிலை, நம் விதி என்பது. இது மீளமுடியாததொரு மாயச் சுழல் போலத் தோன்றுகிறது. துரியோதனன் இப்படித்தான் அங்கலாய்த்தான், "எது நல்லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அப்படி?" என்பது அவன் கேள்வி. ஒரே வார்த்தையில் சொன்னால், ‘ஸம்ஸ்காரம்’ என்பதுதான் பதில்.
சுவாமி விவேகானந்தர் இந்த இடத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டுகிறார். நமது இன்றைய விதி, நமது பழ வினைகளின் காரணமாக அமைந்தது என்றால், இன்று சரியாகச் செயல்படுவதின் மூலம் நமது நாளைய விதியை நிர்ணயித்துக் கொள்ளும் சக்தி நம் கையில் இருக்கிறது. நமது எதிர்காலத்தை விரும்பிய வண்ணம் செதுக்கிக் கொள்ளும் சிற்பி நாமேதான்!
சுலபமாகத் தெரிகிறது. ஆனால் மெத்தக் கடினம்! கீதை காட்டும் பாதை, சிரத்தையின் மூலமும் பயிற்சியின் மூலமும் இதைச் சாதிக்க முடியும் என்பது. ஊழிற் பெரு வலி யாவுள என்பது உண்மையே! அதே அளவுக்கு, தாழாது உஞற்றுபவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பதும் உண்மையே!
விட்டு விடுதலையாகி நிற்றல் என்பதே உண்மையான, நிரந்தரமான ஆனந்தம்! அதற்கான சுலபமான பாதைதான் கர்ம யோகம். விட்டு விடுதலையாகி நிற்கும் அந்தப் பந்தமற்ற நிலையைப் பற்றி நிறைவுப்பகுதியில் விரிவாகக் காணப் போகிறோம்.
அடுத்த இரண்டாவது பகுதியில், எது நம் கடமை என்பது பற்றிப் பார்த்தோம். கடமை பற்றிய கருத்து காலத்துக்கும் தேசத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்றாலும், நம்மை மிருக நிலைக்குத் தள்ளக்கூடியவை விலக்க வேண்டியவை! நம்மை மேம்படுத்தக் கூடியவை செய்யத்தக்கவை! தவிரவும், எது கடமை எனத் தேர்வதில் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப சிந்தனைத் தெளிவு வேண்டும்! நமது இயல்புக்கேற்ப இலட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும்!
மூன்றாவது பகுதியான ஊருக்குழைத்திடல் யோகம் என்பதில் நாம் பார்த்தது:
உலகுக்கு நன்மை செய்யும்போது, நமது ஆன்மிக முன்னேற்றத்துக்கான பயிற்சியாக, நமக்குத்தான் நாம் உதவி செய்து கொள்கிறோம். உலகுக்கு நாம்தான் கடமைப்பட்டிருக்கிறோமே தவிர நமக்கு யாரும் கடன்பட்டிருக்கவில்லை. நாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். உலகை உத்தாரணம் செய்வதற்காக நாம் பிறந்திருக்கிறோம் என நினைப்பது தெய்வ நிந்தனை! இறைவன் இந்தப் பிரபஞ்சத்தை நியதியுடன் நடத்தி வருகிறான். யாரையும் வெறுக்க வேண்டாம்! நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ எதுவாயினும் இந்தப் பிரபஞ்ச வெளியில் சஞ்சரித்து, ஒத்திசைவான மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நமக்கும் உலகத்துக்கும் நன்மை சேர்க்கும்.
நான்காவது பகுதியான யோகம் என்பது செயலில் திறமை என்பதில் நாம் சிந்தித்தது:
குறிக்கோள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வழிமுறையும் முக்கியமே! மனம் குவிந்து செயல்பட வேண்டும்! நமது செயல்களில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்! செயலைத் துவங்கி விட்டால் விளைவுகள் எப்படி இருக்குமோ என்றும், மற்றவர்கள் கருத்து, ஏளனம், எதிர்மறை விமர்சனங்கள் இவை பற்றியும் அச்சமோ, கவலையோ கொள்ளாமல் பணியாற்ற வேண்டும்! எஜமானனைப் போல, சுதந்திரமாக, அன்பு கலந்து, பொறுப்பைச் சுமந்து பணியாற்ற வேண்டும்!
இனி நிறைவுப் பகுதியில் கர்ம யோகத்தின் நிறைநிலை பற்றிக் காண்போம்!
(தொடரும்)