2.7. உதிரிப்பூக்கள்
இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் கர்மயோகத்தின் அடிப்படையான சில செய்திகளைப் பார்த்தோம். இந்த இரண்டாம் பகுதியில் ‘எது நம் கடமை’ என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகளிலிருந்து, நாம் புரிந்து கொண்ட அளவில் நிரல்படத் தொகுத்து எழுதியவையாகும். (நமது தவறான புரிதல்களுக்கு சுவாமிஜி பொறுப்பாக மாட்டார் என்பதற்கே இந்தக் குறிப்பு.) நாம் எடுத்துக்கொண்ட தொகுப்பு வரிசையில் ஒட்டாத பல சிந்தனைகளும் சுவாமிஜியின் குறிப்பிட்ட கருத்துகளில் உள. அவற்றில் சிலவற்றை விட்டுச் செல்ல மனமில்லை. அந்த உதிரிப்பூக்களை இங்கு அளிக்கிறோம்.
• நமது தத்துவத்திலாகட்டும், சமயத்திலாகட்டும், போதனைகளிலாகட்டும், அத்தனையிலும் உள்ள மையக்கருத்து ஒன்றே – பலவீனங்கள் அத்தனையையும் கண்டனம் செய்வதே! இதுவே எனக்குப் பிடித்தது. நமது வேதங்களைப் படிப்பீர்களானால் இந்த வார்த்தையை அடிக்கடிக் காண்பீர்கள் -அச்சமின்மை! எதற்கும் அஞ்சேல்! அச்சம் என்பது பலவீனத்தின் அடையாளம். உலகமனைத்துமே ஏளனம் செய்தாலும், கேலி பேசினாலும் தளராது நாம் நம் கடமையைச் செய்து கொண்டே போக வேண்டும்!
• கடமை என்பது இனிமையானது இல்லை. அன்பென்னும் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அதன் சக்கரங்கள் இலகுவாகச் சுழலும். அன்பில்லையேல் தொடர்ந்து உராய்வுதான். அன்பு என்பது இல்லாவிட்டால் எப்படிப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கும், கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்கள் கடமைகளைச் செய்து கொள்ள இயலும்? கடமை என்பது அன்பின் மூலம் இனிமையாகிறது. அன்பு சுதந்திரத்தின் மூலம் ஒளிர்கிறது. புலன்களுக்கு, கோபத்துக்கு, பொறாமைக்கு இன்னும் அன்றாட வாழ்வில் காணும் நூற்றுக்கணக்கான அல்ப விஷயங்களுக்கு அடிமையாவதா சுதந்திரம்? சுதந்திரத்தின் உயரிய வெளிப்பாடு சகிப்புத்தன்மையே!
• உலகிலேயே மிக உயரிய இடம் வகிப்பது தாயன்பே! தன்னலமின்மை என்னும் அதி உன்னதக் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் உயரிய இடம் இதுவே! தாயன்பை விட மிஞ்சிய அன்பு இறை அன்பே!
• ஒரு மகாயோகி என்னிடம், செயல் புரிவதன் ரகசியத்தை இவ்வாறு விளக்கிச் சொன்னார்- "குறிக்கோளும் இலக்கும் ஒன்றாய் இணையட்டும்!" எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் அதற்கு மேல் வேறொன்றை நினையாதீர்கள். அதை ஒரு வழிபாடாக, உயரிய வழிபாடாக எண்ணிச் செயல் புரியுங்கள்! அந்த நேரத்துக்கு உங்கள் முழு வாழ்க்கையின் அர்ப்பணிப்பும் அதற்கே இருக்கட்டும்!
சிந்தித்துப் பாருங்கள்:-
• மனிதகுலம் அத்தனையும், கடமை பற்றி ஏற்றுக்கொள்ளும் கருத்து என்ன?
• பாரதியார் நோக்கில் எது அறம், எது பாவம்?
• நமது லட்சியத்தை நிர்ணயித்துக் கொள்வதில் அடிப்படையான விஷயம் என்ன?
• ஸ்வதர்மம் என்பதன் எளிய விளக்கம்?
• பேராற்றலுக்கும் பேடிமைக்கும் உள்ள வேற்றுமை என்ன?
• இல்லறத்தாரின் முக்கிய கடமை என சுவாமிஜி சொல்வது என்ன? கடமையை இனிமையாக்குவது எது?
(பிறக்கும்)”