விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (6)

பகுதி – 2 : எது என் கடமை?

2.1 கடமை பற்றிய பல்வேறு கருத்துகள்

கர்ம யோகம் பற்றிப் பேசுகையில் இடைவிடாது உழைக்க வேண்டும் என்கிறோம். கடமையைச் செய்ய வேண்டும் என்கிறோம். ஆனால் கடமை என்பது என்ன என்பது பற்றி ஏதாவது திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா? நான் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், என் கடமை என்ன என்ற தெளிவு இருந்தால்தானே முடியும்?

கடமையைப் பற்றிய கருத்து நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இஸ்லாமியனுக்கு குரான் சொல்வதுதான் கடமை. அது போல கிறிஸ்தவனுக்கு பைபிள் சொல்வதும் இந்துவுக்கு வேதம் சொல்வதும் கடமை. அதே போல வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுக்கும், சரித்திரத்தின் பல்வேறு கால கட்டங்களுக்கும் ஏற்ப கடமை பற்றிய கருத்து வேறுபடுகிறது. கடமையின் இலக்கணம் இதுதான் என்று வரையறுத்துச் சொல்ல இயலாது. என்றாலும் அதன் நடைமுறைச் செயல்பாடுகளையும் விளைவுகளையும் கொண்டு அது பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம். நம் முன் சில நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அதனை நமது இயல்பினாலோ, பயிற்சியினாலோ ஒரு குறிப்பிட்ட வழியில் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஓர் உந்துதல் ஏற்படுகிறது. இந்த உந்துதல் ஏற்படும்போது மனது அந்த சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறது. அந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்வது நல்லது என்று மனம் சொல்கிறது. வேறு சில நேரங்களில் அப்படி நடந்து கொள்வது சரியல்ல என்கிறது அதே மனம், சூழ்நிலைகள் அதே போல இருந்தாலும்.

கடமை என்பது பற்றிப் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்ல முடியும். நல்லவன் ஒவ்வொருவனும் தன் மனசாட்சியின் கட்டளைப்படி நடந்து கொள்வான் என்பதே அது. எல்லாம் சரி, ஒரு செயலைக் கடமை ஆக்குவது எது? தன் உயிரைக் காத்துக் கொள்ள அல்லது மற்றவர் ஒருவரது உயிரைக் காக்க, மாட்டிறைச்சியை ஏற்றால், அல்லது கொடுத்தால் கடமையை நிறைவேற்றியதாக ஒரு கிறிஸ்தவர் நினைப்பார். ஆனால் ஓர் இந்துவுக்கோ அச்செயல் கடமை தவறியதாகும். இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். பலரைக் கொல்வது படைவீரனுக்குப் பெருமை. சாதாரணனைப் பொறுத்தவரை கொலை புரிவது பாவம். இப்படி எல்லாம் வேறுபாடுகள் இருந்தாலும் சில அடிப்படைத் தத்துவங்கள் உண்டு.

நம்மைக் கடவுளை நோக்கி இட்டுச் செல்லும் செயல்கள் எல்லாம் நல்லவை. அவை நம் கடமையின்பாற்படும். நம்மைக் கீழ்நோக்கி இட்டுச் செல்லும் எந்தச் செயலும் தீயது. நம் கடமைக்குப் புறம்பானது. சில செயல்கள் நம்மை மேம்படுத்தி உயர்த்தும். சில செயல்கள் நம்மைக் கீழ்நோக்கித் தள்ளி விலங்கு நிலைக்குக் கொண்டு செல்லும். ஆனால், எல்லாருக்கும், எல்லா வகைகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும், எது எப்படி என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் மனிதகுலம் அத்தனையும், நாடு, பிரிவு, காலம் என்ற வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் கருத்து ஒன்று உண்டு. வடமொழி சுபாஷிதம் ஒன்று சொல்வது இது: "எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காதே. தீங்கிழையாமை அறம். தீங்கிழைத்தல் பாவம்" (இந்தக் கருத்தை பாரதியார் தமது பகவத் கீதை கட்டுரைகளில் குறிப்பிடுவதோடு ஒப்பு நோக்குக: "பாவமாவது யாது? புண்ணியம் என்பது என்ன? தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம்; தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத் தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்."

பகவத்கீதை இதை வலியுறுத்திச் சொல்லும். பிறப்பினாலும் சமுதாயத்தில் நமக்கு அமைந்துள்ள இடத்தினாலும் ஏற்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும். நாம் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் இலட்சியங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இசைய, நம்மை மேம்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டுவது நமது கடமை. இது ஸ்வதர்மம் எனப்படும். இதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கடமை பற்றிய கருத்து சமுதாயத்துக்கு சமுதாயம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எனவே நமது அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களை மதிப்பிடுவதோ எள்ளி நகையாடுவதோ தவறு. உலகத்தில் ஏற்படுகிற அத்தனை சச்சரவுகளுக்கும் முக்கிய காரணம் நமது அளவுகோலை வைத்துக் கொண்டு மற்றவர்களை எடை போட முனைவதுதான்.

இப்படி கடமை பற்றிய கருத்துகள் வேறுபடுகின்ற சூழ்நிலையில் நம் முன் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறிவிலிகளின் வழி. அது, ‘உண்மையை அடைய ஒரே வழிதான் உண்டு.. மற்ற பாதைகள் அனைத்தும் தவறானவை’ என்று கருதுவது. மற்றது விவேகிகளின் வழி. அவரவரின் மனப்போக்குக்கும், வாழ்க்கை நிலைகளுக்கும் ஏற்ப கடமைகளும் நெறிகளும் மாறுபடும் என்பதைப் புரிந்துகொண்டு ஒழுகுவது. கடமை, ஒழுக்க நெறி என்பவற்றில் பல பரிமாணங்கள் உள்ளன. வாழ்க்கையின் ஒரு நிலையில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், கடமை அறம் என்று கருதப்படுவது எல்லா இடங்களுக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்.

(தொடரும்)”

About The Author