6.கர்ம யோகத்தின் நிறைநிலை
6.8.நிறைநிலையில் ஒரு கர்ம யோகி
"கர்ம யோகத்தை வாழ்க்கையில் பூரணமாகக் கடைப்பிடித்த மனிதர் ஒருவரைப் பற்றிச் சொல்லப் போகிறேன்" என்று சொல்லி சுவாமி விவேகானந்தர் ஒருவரைப் பற்றிச் சொல்கிறார். அவர்தாம் புத்தர். கர்ம யோகத் தத்துவப்படி நடைமுறையில் சிறிதும் வழுவாமல் வாழ்ந்தவர் புத்தபிரான். புத்தர் தவிர்ந்த அத்தனை மகான்களுக்கும் தன்னலமற்றுச் செயல் புரிவதற்கான புறக் காரணங்கள் இருந்தன. மற்ற மகான்களை இரண்டு பிரிவினர்களாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் தங்களை இறைவனின் அவதாரம் என்று கருதிக் கொள்பவர்கள். மற்ற பிரிவினர் தாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள். இரு பிரிவினர்களுக்குமே புறத் தூண்டுதல் இருந்தது. பிற உலகப் பலன்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் பேசிய மொழி எவ்வளவுதான் உயர்நிலை ஆன்மிகமாக இருந்தாலும் இதுவே உண்மை. ஆனால், "கடவுளைப் பற்றிய உங்களது பல்வேறு தத்துவங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆன்மா பற்றிய நுட்பமான தத்துவங்களைப் பற்றி அலசிக் கொண்டிருப்பதால் என்ன பலன்? நல்லவனாய் இரு! நன்றே செய்!
இது உங்களை விடுதலைக்கும், எது சத்தியமோ அதற்கும் இட்டுச் செல்லும்!" என்று சொன்ன ஒரே மகான் புத்தர்தாம்! சொந்த வாழ்க்கையில் அவருக்கென்று தன்னல நோக்கம் இம்மியளவு கூட இருந்ததில்லை. ஆனாலும் அவரை விட அதிகமாக உழைத்தவர்கள் யார் இருக்கிறார்கள்? இத்தகைய உயர்நிலையில் உலகம் படைத்த ஒரே மனிதர் புத்தர்தாம் என்று சொல்லலாம். அவ்வளவு உயர் கருணை! அவ்வளவு உயர்ந்த தத்துவம்! மிக உயர்ந்த கருத்துகளைப் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், கடைப்பட்ட விலங்குகளிடம் கூடத் தீவிர அன்பு காட்டினார். தமக்கென்று அவர் எதையும் கோரியதில்லை. துளிக்கூட எந்தவிதச் சுயநலச் சிந்தனையும் இல்லாமல் பணியாற்றிய அவர்தாம் லட்சிய மனிதர்! கர்ம யோகி. மனித வரலாற்றிலேயே அவரைப் போன்று உயர்வான எவரும் பிறந்ததில்லை! மூளையும் இருதயமும் இணைந்து பணியாற்றிய லட்சிய அமைப்பு! இதுவரை வெளிப்பட்டுள்ள அத்தனை ஆன்ம சக்திகளிலும் மிக மிக உயர்வானது! உலகம் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தாம்! "ஏதோ ஒரு புத்தகத்தைக் காட்டுகிறார்கள் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள்! தேசிய நம்பிக்கை, சின்ன வயதிலிருந்தே அதை நம்பச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள்! பகுத்தாய்ந்து பாருங்கள்! ஆராய்ந்து பார்த்தபின், அது எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்று கண்டால் அதை நம்புங்கள்! அதற்கேற்ப வாழுங்கள்! மற்றவர்களும் அந்த நெறிப்படி வாழ உதவுங்கள்!" என்று துணிந்து சொன்ன ஒரே மகான் புத்தர்தாம்! எந்தவிதத் தன்னல நோக்கமும் இல்லாமல், பணம் புகழ் எதையும் கருதாமல் உழைப்பவனின் உழைப்பே உயர்வானது. இந்த நிலையை அடைந்து விட்டால் எந்த மனிதனும் புத்தனாகலாம். உலகையே மாற்றி அமைக்கக் கூடிய உழைப்பின் ஆற்றல் அவனிடமிருந்து வெளிப்படும். அத்தகைய மனிதனே கர்ம யோகத்தின் நிறைநிலை அடைந்தவன்!
சுவாமி விவேகானந்தரின் கையொப்பம்
(Ref: C.W 1 – Pages 116, 117, 118)
(நிறைவுற்றது)
“