விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (32)

6. கர்ம யோகத்தின் நிறைநிலை.

6.7.சுதந்திரம் நமது பிறப்புரிமை.

Vivekanandar


விட்டு விடுதலையாகி நிற்றல் – அல்லது மோட்சம், அல்லது முக்தி – என்பதுதான் நமது நிறைவான குறிக்கோள் என்று பார்த்தோம். சுருங்கச் சொன்னால், நாம் சுதந்திரர்களாக, பந்தமின்றி இருக்க வேண்டும் என்பதுதான் நமது அடிப்படை இலட்சியம். பிரபஞ்சத்திலுள்ள சிறிய பெரிய இருப்புகள், உயிர்கள் அனைத்துக்கும் சுதந்திரம் என்பதே அடிப்படை வேட்கையாக இருக்கிறது. சுதந்திரம் நமது பிறப்புரிமை! அதை அடைந்தே தீரவேண்டும்! இன்றோ நாளையோ, விரைந்தோ, மெல்லவோ.

பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்துமே இந்த இலக்கை நோக்கித்தான் போராடிக் கொண்டிருக்கின்றன. அணுவிலிருந்து மனிதன் வரை, உயிரற்றவற்றிலிருந்து பூமியின் மிக உயரிய வஸ்து வரை பிரபஞ்சத்தின் இயக்கமே விடுதலை பெறும் போராட்டத்தினால்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூலக்கூறுகளின் ஒவ்வொரு துகளும் மற்றவற்றிலிருந்து தப்பியோடவே போராடிக் கொண்டிருக்கின்றன. மற்றவை, அது தப்பி ஓடாதபடி தடுத்துக் கொண்டிருக்கின்றன. பூமி சூரியனிலிருந்து தப்பி வெளியேற முயல்கிறது. சந்திரனுக்கோ சூரியனிலிருந்து தப்பி ஓட வேண்டும்!

மனிதர்களை எடுத்துக் கொள்வோம். உணர்ந்தோ உணராமலோ நாம் அனைவருமே இந்த விடுதலையை நோக்கித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த விடுதலை முயற்சிதான் தவ சிரேஷ்டர் பிரார்த்தனை புரிவதற்கும், திருடன் கொள்ளை அடிப்பதற்கும் காரணமாக அமைகிறது. நோக்கம் தீயதாக அமையும்போது அதைத் தீய சக்தி என்கிறோம். அதன் வெளிப்பாடு உயரியதாகவும் நேரானதாகவும் அமையும்போது அதை நன்மை என்கிறோம். ஆனால், அடிப்படையில் அவை இரண்டுக்குமான உந்துசக்தி ஒன்றே! விடுதலைக்கான போராட்டம். முனிவருக்குப் பந்தத்தினால் திணறிக்கொண்டிருக்கும் சுமையிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக அவர் விழைகிறார்; இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். திருடனுக்குத் தன்னிடம் பொருள் இல்லாத குறை தெரிகிறது. அதிலிருந்து விடுபட முயல்கிறான்; அதற்காகத் திருடுகிறான். ஆக, விடுதலை என்பதே உயிருள்ள, உயிரற்ற அனைத்துப் பொருட்களின் ஒரே குறிக்கோளாக அமைகிறது.

துறவி நாடும் விடுதலை வேறு. திருடன் நாடும் விடுதலை வேறு. துறவியின் விடுதலை, வார்த்தைக்கடங்காத, எல்லையற்ற, பரிபூரண ஆனந்தத்துக்கு அவரை அழைத்துச் செல்கிறது. திருடன் நாடும் விடுதலை அவனை மேன்மேலும் பந்தப்படுத்துகிறது.

எந்தச் சமயத்தை எடுத்துக் கொண்டாலும் விடுதலையை நோக்கிய போராட்டத்தின் வெளிப்பாடு அதில் இருக்கிறது. எல்லா அறக் கோட்பாடுகளின் அடிப்படையும் இதுவே. அதாவது, "நான் என் அற்ப உடம்பு மட்டுமே" என்கிற கருத்திலிருந்து விடுதலை. ஒருவன் நல்ல செயல்களில் ஈடுபட்டிருக்கிறான். பிறருக்கு உதவுகிறான். இதன் பொருள், "நான், எனது" என்கிற குறுகிய வட்டத்துக்குள் அவன் முடங்கிப் போகவில்லை என்பதே. இப்படி விரிவடைவதற்கு ஓர் எல்லையே இல்லை. அனைத்து அறநெறிக் கோட்பாடுகளும் கலப்பற்ற தன்னல மறுப்பையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

தன்னலம் துளிக்கூட இல்லாத நிலையை ஒரு மனிதன் அடைந்து விட்டால் என்ன ஆகும்? "நான் திருவாளர். இன்னான்" என்னும் சுய அடையாளத்தை ஒழித்து எல்லையற்ற, பரந்துபட்ட விரிவை அடைகிறான். இத்தகைய எல்லையற்ற விரிவே அனைத்துச் சமயங்களின், அனைத்துத் தத்துவ, அறநெறி உபதேசங்களின் நிறைவான குறிக்கோள் ஆகும்.

இந்த நிலை தன்னை முற்றிலும் இழப்பதாகும். நினைக்கும்போது பயமாக இருக்கிறது. ஆனால், பொதுவாக நன்னெறி உபதேசங்களைக் கேட்கும்போது பயமாக இருப்பதில்லை. தன்னலமின்மைக்கு எல்லை எதுவும் இல்லையே? வெறும் உடம்பாகத் தன்னைக் காண்பவன் பூரணமான தன்னலமின்மையை அடைந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுக்கும் தன்னைப் பிரபஞ்சத்துடன் ஒன்றிக் காணும் நிறைநிலையாளனுக்கும் என்ன வித்தியாசம்? முன்னவனுக்கு, தனது ஆராய்ச்சி அறிவை அதன் நிறைவு வரை எடுத்துச் செல்வதற்கான துணிச்சல் இல்லை என்பதுதான் வித்தியாசம்.

கர்ம யோகம் என்பது தன்னலமற்ற பணியின் மூலம் மனிதனின் இயற்கை வேட்கையான சுதந்திரத் தாகத்தைப் பூர்த்தி செய்து கொள்வதே ஆகும். சுயநலம் கலந்த ஒவ்வொரு செயலும் இந்தக் குறிக்கோளை அடைவதினின்று நம்மைப் பின் இழுத்துச் செல்கின்றன. சுயநலம் இல்லாத ஒவ்வொரு செயலும் இந்தக் குறிக்கோளை நோக்கி நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன.

கர்ம யோகி என்பவன் எந்தத் தத்துவத்தையும் நம்ப வேண்டியதில்லை. அவனுக்குக் கடவுள் நம்பிக்கை தேவை இல்லை. தத்துவ ஆராய்ச்சிகள் தேவையில்லை. பூரணத் தன்னலமற்ற நிலையை அடைவதற்காகத் தனக்கென ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு, அதை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு கணமும் அவன் ஞானம் பெறுகிறான். தத்துவம், தெய்வம் என்கிற எந்த ஊன்றுகோலும் இல்லாமல், ஞானி ஆன்ம விசாரத்தாலும், பக்தன் உபாசனையினாலும் அடையும் அதே நிலையை அவன் அடைகிறான்!

படம்: நன்றி – Wikipedia

(அடுத்த இதழில் முடியும்)

About The Author