ஏனோ தெரியவில்லை, நாம் இசையையும் சினிமாவையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தே பழகி விட்டோம். சினிமாவிற்கு இசையமைப்பதென்றால் எத்தனையோ விஷயங்களைக் கவனிக்க வேண்டும். நடிகருக்குத் தகுந்தாற்போல் இசையமைக்க வேண்டும். பாடகரின் குரலும் நடிகர்களுக்குப் பொருந்த வேண்டும். இம்மாதிரி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளபடியால், இசையமைப்போர் தங்களது முழுத்திறமையையும் வெளியே கொண்டு வர சிரமப்படுகின்றார்கள்.
மேற்கத்திய நாடுகளில், இசைக்கென்றோர் உலகம் உண்டு; நம்மூரில் இல்லை என்று சொல்ல வரவில்லை. வடக்கில் உள்ள தலேர் மெஹந்தியை விட்டுத் தள்ளுங்கள். பாப் ஷாலினி, அனுராதா ஸ்ரீராம் போன்றவர்கள் தனி இசைத்தட்டுகளை வெளியிட்டிருக்கின்றனர். இதுபோல், சமீபத்தில் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்புதான் "விழியும் செவியும்".
வசந்த் அண்ட் கோ உரிமையாளரின் மகன் வினோத் குமார் இந்தப் பாடல் தொகுப்பை தயாரித்திருக்கின்றார். சமி யூசஃப், ப்ரேம்ஜி அமரன், டாக்டர் பெர்ன் மூவரும் இசையமைக்க, புகழ் பெற்ற பாடகர்கள் சிலரும், வளர்ந்து வரும் பாடகர்கள் சிலரும் இவ்விசைத்தட்டின் பாடல்களைப் பாடியுள்ளனர். பாடல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கூடி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதல் இசைத்தட்டை யுவன் ஷங்கர் ராஜா பெற்றுக்கொண்டார்.
அதெல்லாம் சரி, பாடல்கள் கேட்கும்படி உள்ளனவா! இதென்ன கேள்வி, இது போன்ற முயற்சிகளை வரவேற்க வேண்டாமா!! வாருங்கள், பாடல்களைக் கேட்கலாம்.
நீ என் விழியை
முத்து விஜயன் வரிகள் எழுத, அபிலாஷ் இப்பாடலைப் பாடியுள்ளார். காதல் ஏக்கத்தில் பாடும் பாடல். மெலடி என்று சொல்ல முடியாது, இருந்தும் மென்மையான பீட்ஸ், பாடல் கேட்க நன்றாகவே இருக்கின்றது. நடுவில் வரும் ஆங்கில வரிகள் பாடலைக் கெடுக்கவில்லை. திரை இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகின்றது – குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜும், யுவனும்! பரவாயில்லை.
ஒளியே ஒளியே
வெறும் பியானோ இசையுடன் மிக இனிமையாக ஆரம்பிக்கின்றது இந்தப்பாடல். கவின் பாடல் வரிகளை எழுத, கார்த்திகேயன், பிரதிபா, ஐஸ்வர்யா, வேலு இப்பாடலை பாடியுள்ளனர். எல்லோரும் அவரவர் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கின்றனர். உலக அமைதியை அழகாய் வலியுறுத்துகின்றது இந்தப்பாடல். நன்று!
As the sun shines
அபிஷேக் வரிகளை எழுத, டிம்மி இப்பாடலை பாடியுள்ளார். அன்பால் உலகம் அமைதி பெறும் என்று சொல்லும் முழு நீள ஆங்கிலப் பாடல். ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல கிடாரிங்!
உன்னை நான்
முத்து விஜயன் இப்பாடலை எழுத, ஹரிஷ் ராகவேந்த்ராவும் சைந்தவியும் இப்பாடலைப் பாடியிருக்கின்றனர். சினிமாவில் பாடும் அனுபவம் இருவரிடமும் நன்றாகத் தெரிகின்றது. இதைத்தான் “புரொஃபெஷனல்” என்கின்றார்களா!? பியானோவும் புல்லாங்குழலும் செவிக்கு அமுதாயினிக்க, அழகாய் ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். சினிமாவில் காதல் பாட்டுகள் பற்றவில்லை போல! ஆனால் அவ்வளவு நீளாமல், ஒரே சரணத்துடன் முடிந்துவிடுகின்றது. ரசிக்கக் கூடிய மெலடி.
இரவில் மலரும்
ப்ரியன் வரிகளை எழுத, அபிலாஷ் இந்தப் பாடலை பாடியிருக்கின்றார். ஆரம்பத்தில் மெல்லிதாக ஆரம்பிக்கும் கிடார், பாடலுடன் அழகாய் வடிவம் பெற்று, கடைசியில் நம்மைத் தாளம் போடவும் வைக்கின்றது. நல்ல கார்ட்ஸ் பிரயோகிப்பும் கூட! கொஞ்சம் வேதாந்தம் பேசும் பாடல். அங்கங்கு, மெய் மறந்து தலையை அசைக்க வைக்கின்றது.
ஒற்றைப் பார்வை
மேற்கத்திய வயலின், கிடார் என்று துள்ளலோடு ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். இன்னும் இனிமை சேர்ப்பது பாடகர் கார்த்திக்கின் குரல். தனியாகத் தெரிகின்றது அவர் குரல். பிரசன்னாவும் உடன் பாடியிருக்கின்றார். பாடல் வரிகளை ப்ரியன் எழுதியிருக்கின்றார். மீண்டும் காதல் ஏக்கத்தில் ஒரு பாடல். இப்பாடலுக்கும் ஒரே சரணம்தான். பாடல் முடிவில் விதவிதமாக ஹம்மிங் செய்ய முயற்சி செய்திருக்கின்றார்கள். ஹ்ம்ம்… தேறும்!
எனக்குக் கொஞ்சம் பிடிக்கும்
சௌண்ட் இன்ஜினியர்கள் எல்லாம் வந்துவிட்ட நிலையில் சில சப்தங்களைக் கேட்டால், என்ன இசைக்கருவி என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் விடிந்து விடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வினோதமான கருவியுடன் ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். இன்னும் சொல்லப் போனால், மொத்தப் பாட்டும் வினோதமாகவே இருக்கின்றது. அங்கங்கு சிறுவர் பாடல் போலத் தெரிகின்றது. அங்கங்கு, யாரோ வரிகளைப் படிப்பது போலுள்ளது. ஆங்காங்கே மூச்சு விடாமல் பேசவும் முயற்சி செய்திருக்கின்றார்கள். மிக மிக வித்தியாசமான இந்த பாடலை பெர்ன் எழுதி, மேகா, சுபாசினியுடன் அவரே இணைந்து பாடியும் உள்ளார்.
Theme Music
ஹா! "கண்மணி, அன்போடு காதலன் நான்… நான்… நான்… எழுதும் லெட்டர்… ச்சீ … மடல்" என்று குணா கமலின் குரலில் ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். ஒரு வரி கமல் சொல்ல, அதன் பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பு வர, சிரிப்பு தாள முடியவில்லை. I love, with love, I love, writing, letter. மீண்டும் கமல் "பிரமாதம், கவிதை" என்ன ஒரு கற்பனை! அந்த ஒரு வரிக்குப் பிறகு குணாவும் இல்லை, கமலும் இல்லை. டப்பாங்குத்து பாடல் இடம்பெறவில்லை என்ற குறையை தீர்த்து வைக்க இதோ இந்தப் பாடல் – தாரை தப்பட்டையுடன். "தின்னா தின்னா" என்று அங்கங்கு குரல்கள் வேறு! அடுத்த பாடல் ப்ளீஸ்…
Burn in Da Floor
அபிஷேக் மற்றும் ப்ரேம்ஜி அமரன் இப்பாடலை எழுத, தயாரிப்பாளர் வினோத்துடன் சேர்ந்து ப்ரேம்ஜி இப்பாடலைப் பாடியுள்ளார். இன்னும் ஒரு முழு நீள ஆங்கிலப் பாடல். பெரிதாக சொல்ல ஏதும் இல்லை. ஏதோ டிஸ்கோதேவில் இடம்பெறுவது போலத் தெரிகின்றது. எல்லா வார்த்தைகளும் புரிந்தால், எனக்குக் கொஞ்சம் சொல்லுங்கள். இதுதான் இசைத்தட்டின் கடைசி பாடலும்.
ஓரிரு பாடல்களை விட்டுவிட்டால், மற்ற பாடல்களெல்லாம் நன்றாகவே உள்ளன. பரவாயில்லை. இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து இசைக்கு ஒரு புது முகம் தர முயற்சி செய்திருக்கின்றனர். பாராட்டுக்கள். இசை பூமியை ஆளட்டும்!!
“