வித்யா பேசாமல் திரும்பிப் போனாள். எனக்குத்தான் வியர்த்துக் கொட்டியது.
எதிரே அரவிந்தனைப் பார்த்தேன். கூலிங்கிளாஸ் கறுப்பு மறைப்பில் உயிரற்ற அவன் விழிகள்.
என்ன செய்து விட்டேன்! ஏன் தடுமாறிப் போனேன்? எது என்னைத் தூண்டியது? வித்யாவின் அபரிமித அழகா? ‘பார்வையற்ற அரவிந்தனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா’ என்ற பொறாமையா?
“ராஜன் டீ குடிக்காமல் என்ன யோசனை?”
அரவிந்தன் சொன்னதும் எனக்குத் திடுக்கிட்டது.
“இதோ..சூ..சூடா இருக்கு.”
“வித்யா எனக்கு அரை தம்பளர் போதும்” என்றான்.
வித்யா அவனை நெருங்கி தம்பளரைக் கையில் கொடுத்தாள். சுவாதீனமான நெருங்கல். உரிமை உறவு தந்த பரிசு. நான் எந்த துணிவில் அவளின் விரல்களைப் பற்றினேன்? பதறாமல் விடுவித்துக்கொண்டு டீ கப்பை டீபாய் மீது வைத்தபோது அவள் பார்வையைச் சந்திக்க மனசு நடுங்கியது.
நடந்தது மீண்டும் மனத்திரையில் ஓடியது. உடம்பு மீண்டும் நடுங்கியது.
டீ கப்பை எடுத்து உறிஞ்சினேன்.
“வித்யாவை நான் ஏன் கல்யாணம் செய்து கொண்டேன் தெரியுமா? அழகாய் டீ போடுகிற திறமைக்காக” அரவிந்தன் பளீரெனச் சிரித்தான்.
என் சிரிப்பு சோகையானது. வித்யா எங்கள் எதிரேதான் அமர்ந்திருந்தாள். வேறுபுறம் பார்ப்பது போல் அவளைப் பார்க்க முயன்றேன்.
“ராஜன் அடுத்த ஸண்டே இங்குதான் உங்களுக்கு சாப்பாடு. சரியா” என்றான்.
“இல்லே.. வேணாம்”
“வித்யா நீயே சொல். எத்தனை நாட்களாய்ப் பழக்கம்? ஒரு தடவையாவது நம் வீட்டில் சாப்பிட்டால் என்னவாம். உன் சமையலைப் பற்றி பயமா!”
வித்யாவைப் பார்த்தேன். அந்த விழிகள் அரவிந்தனுக்காகவும் சேர்த்துப் பார்க்கிற தோரணையோடு என்னை ஊடுருவின.
“வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத குழந்தை போல இருக்காரே… அதுக்கு மதிப்பு தரவாவது வாங்களேன்..” என்றாள் படபடவென.
“ஏய்..வித்யா..என்னது லெக்சர்..”
காதலித்து மணந்து கொண்டவர்கள். அதன் வீரியம் குறையாமல் போஷிப்பவர்கள். ஏன் அற்பனாகிப் போனேன்..
“வரேன்..நிச்சயமா வரேன்” என்றேன் அரவிந்தனைப் பற்றிக்கொண்டு.
“என்னது ஈரமா இருக்கு?” என்றான் என் விரல்களைத் தொட்டு.
ஊனம் ஊனம் ஊனம் …………” பாட்டை நினைவுபடுத்தும் கதை
“