பீட்சா படத்தின் தொடர்ச்சியாக வர இருக்கும் ‘வில்லா’வின் முன்னோட்டக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. இசைக்கு அதே சந்தோஷ் நாராயணன். இயக்கம் தீபன் சக்ரவர்த்தி.
பூமியில் வானவில்
அவனுள் காதல் ஏற்படுத்துகிறாள் அவள். அருண்ராஜா எழுத, கிதாருடன் பாடல் தொடங்குகிறது. அதைப் பிரதீப் குமார் பாடியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், மழை நேரத் தேநீர் போல் வசீகரிக்கிறது பாடல்!
இரு விழிகளும் புதுக் கவிதைகள் பாடும்!
இதழ்ப் படுக்கையில் தினம் உறங்கிட நானும்
போதுமே, நாளும் இது போதுமே!
டிஸ்கோ வுமன் (Disco Women)
அதிரடி பீட்டுகள், வசீகரிக்கும் குரல், அவ்வப்போது வந்தாலும் தன் பக்கம் இழுக்கும் வயலின் என நம்மை நிஜமான டிஸ்கோ கிளப்பிற்கு அழைத்துச் செல்கிறது. இனி பப்களில் அதிகம் கேட்கலாம்.
மின்னல் போல வாழ்வில்
இன்னல் இன்றித் திளைத்தேன்!
காலம் போடும் கோலம் கண்டதில்லை நானும்!
காணும் ஞானம்
படத்தின் தீம் இசையில் ஒரு பாடல். சற்றே உற்றுக் கவனித்தால் கதையின் வேர் தொடுகின்றன வரிகள். ஒருவிதத் தேடலைப் பாடலின் இறுதி வரை கையாண்ட விதம் கவனிக்க வைக்கிறது. நிச்சயம் இதன் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும்.
ப ப ப (Pa Pa Pa)
கானா பாலா பாடுகிறார். அனேகமாக, இது பேயின் தீம் பாடலாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதிரும் மேற்கத்திய இசை, பாலாவின் குரல் என வித்தியாசக் கூட்டணியில் ரகளை பண்ணுகிறது பாடல்!
இவை போக இரண்டு இசைக் கோவைகள் ‘வில்லா’, ‘வரைபடம்’. அவையும் நன்றாக இருக்கின்றன. சந்தோஷ் படத்திற்குப் படம் மெருகேறியிருக்கிறார். முதல் பாடலில் அவர் கிதாரைக் கையாண்டிருக்கும் விதம் கேட்போரையெல்லாம் கட்டிப்போடும்.
வில்லா – மயக்கிக் கேட்க வைக்கும்!