காற்று
என் தோட்டத்திற்குள்
உன் சுவடு தெரியாமல்
வந்து போனதாய்
நினைக்கிறாய்.
உன் மீதான எனதன்பை
உணர்ந்த காற்று
காட்டிக் கொடுத்தது
உன் மணம் பரப்பி.
வறட்டு பூமி
நன்கு உழவு செய்கிறாய்
ஆனால்
உனக்கு விதைக்கத் தெரியவில்லை!
நிரம்பி வழியும் அளவிற்கு
நீர் பாய்ச்சுகிறாய்
ஒரு துளியில் கூட
உயிர் இல்லை!.
விளைச்சல் குறித்து
யாரேனும் கேட்டால்
வறட்டு பூமியெனப்
புலம்புகிறாய்
என் வயிறு எரிய எரிய!.
முதல் முகம்
அம்மன் தேர்ஏரேறிய
ஒரு திருவிழா நாளில்
மிக எளிமையாய்
என் கடை
அவனால் திறக்கப்பட்டது.
காதல் சாவி
என் கடைக்குக் கச்சிதமாய்ப்
பொருந்தியதன் விளைவு
இன்று என் கடைக்கு
வாடிக்கையாளர்கள் அதிகம்!.
கல்லாப்பெட்டி நிறைகிறது.
மனதும்
நிறையாதோவென
ஏங்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் வந்து போகிறது
என் கடையை
முதலில் திறந்த முகம்.
–தொட்டுத் தொடரும்