விரல் தொட்ட வானம் (5) – பேனாக்கள்

பேனாக்கள்

வரலாறு எழுதும் மை
விழுந்த வேகத்தில் ஆவியாகிறது
வெப்பம் சுமந்த
தாள்களில் இருந்து.
உறிஞ்சும் தாள்களால்
ஒருபோதும் பிரச்சினையில்லை
தன்னுள் வளராத எழுத்திற்கு
எது காரணமென.
உள்ளே இருக்கும் ப்ரியங்கள்
தீரும் வரை
கிழிந்த நிலை வந்தாலும் சொல்வதில்லை.
பேனாவின்
தொடர்மழைக்குத் தாளாமல்
வெளியே வழிந்தோடி
ஊர் சிரிக்கும் வரை
ஒரு போதும் தாள்களால் துன்பமில்லை
பிறன்மனை நோக்கும்
பேனாக்களுக்கு.

******

பசித்த பூனை

கிழக்கு மேற்கு
இரு திசைகளையும்
வகுத்து எழுப்பப்பட்ட
ஒரு நேர்க்கோட்டு எயிலில்
அமர்ந்திருக்கிறது.
எரிகதிரின் கனற்சி
உள்ளே தகிக்கிறது
சிறுகுடலை
வேக வைப்பதுபோல.
மேயும் அதன் பார்வைக்கு
தெரிகின்றன இருபக்கமும்
பாலும், மீன்களும்.
பாதுகாப்புடன்
நடந்து போவது
குதித்தல் நிகழும்
திசை எதுவாயினும்
கட்டுப் போடவேண்டியதென்னவோ
தன் ஆசைகளுக்குத்தான் என
உணர்ந்த நிலையில்
பார்க்க மட்டுமே செய்கிறது.
திமிறிப் படமெடுத்தாடும்
தன் ஊன்றியை அடக்கவியலாமல்
பசித்த பூனை.

–தொட்டுத் தொடரும்…

About The Author