புத்தகம்
ஆறாம் அறிவைக்
கூர்மைப்படுத்தும்
இன்னொரு ஆயுதம்
புத்தகம்.
புத்தகம் கூடக் கைத்தடிதான்
தூங்குபவனைத் தட்டி எழுப்பும்.
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தும்.
பார்வைக்கு மட்டும்
அழகாய் இருக்கும் புத்தகங்களைப்
பார்க்கலாம் நீங்கள் அடிக்கடி
கையேந்தி பவன்களில்.
படிக்கின்ற புத்தகத்தால்
பாடம் நடத்துவோம்
படித்த புத்தகங்கள் பல
நமக்குப் பாடம் நடத்தும்!
சில புத்தகங்கள்
நம்மை அசைத்துப் பார்க்கும்
புரட்டிப்போடும்
அலைக்கழிக்கும்
முகம் சுளிக்க வைக்கும்
அச்சுப் பிழையான புத்தகங்களை
அவ்வப்போதும்
ஆண்டுதோறும்
கூவாகங்களிலும்.
சில வேளைகளில்
புத்தகங்களுக்கும்
ஒருவழிப் பாதைதான்
இரவல் போனால்
திரும்புவதில்லை.
எல்லாப் புத்தகங்களையும்
மனிதன் வாய்விட்டு
வாசிக்கிறான்.
மனிதன் என்ற புத்தகத்தை
காலம் வாசிக்கிறது
கடைசிப் பக்கத்தை மட்டும்
ரகசியமாய்!
விரல் தொட்ட வானம்
வேலிகளுக்குள் இருந்து தப்பித்து
வாழ்வெளியில்
புகலிடம் தேடி அலைகிறது
அந்த விரல் செடி.
கீடமணிகள் ஜொலிக்கும்
காகிதப் பூந் தோட்டங்கள்
பகடி செய்கின்றன
விரலின் தேடுதல் கண்டு.
துன்பத்தோடும்
பசித்த வயிற்றோடும்
தட்டியபோது தெரிந்து கொண்டது
தோட்டங்களின் கதவுகளுக்கு
பூட்டு உள்பக்கம் உள்ளதென.
எதிர்ப்படும் சக விரல்களுக்கு
கண்கள் வேறுபக்கம் இருந்தன.
அவற்றின் தாகம் தணிக்க
போத்தல்கள் நிரம்பிய அங்காடிகள்
வீதிக்கு ஒன்று வரவேற்றன.
தாகத்தோடு
ஆங்காலம் தேடிக் களைத்த
ஒரு வெப்பப் பொழுதில்
தகித்துக் கிடந்தது நீண்ட பாலையொன்று
ஆசந்தி கணக்காய் கண்முன்னே.
தனது கடைசி நாள் இதுவென எண்ணி
ஆத்திரைக்குத் தயார் ஆனபோது
விரலைத் தொட்டது வானம்!
தேடிய மூலிகை கிடைத்த மகிழ்வு
இருவரின் கண்களிலும்!
பெருமழையில் நனைந்த விரல்
குளித்தது
குளிர்ந்தது
வானமே தன் ஆணிவேரெனப் பறந்தது.
ஆகடியம் பேசிய உதடுகள்
விரல் தொட்ட வானத்தின்
புகழ்பாடித் திரிவதைப் பொருட்படுத்தாமல்
பூமியெங்கும் தன் இனத்தைப் பரப்புகிறது
விரல்.
அதன் வேர்களில் கசிகிறது
வானம்
விசுவாசம் காட்டும்
விரலை மணக்க வைக்க
மேலும் மேலும்.
–விரல் தொட்டது வானத்தை!
“