விரல் தொட்ட வானம் (38)

இடிபாடுகளுக்கு நடுவே

இடிபாடுகளுக்கு நடுவே
சிக்குண்டு கிடக்கிறான்
அந்த மனிதன்.
பூமியில் அவனுக்கான நேரங்கள்
குறைந்து கொண்டே வருகின்றன.
தனக்குத் தெரிந்த
கடவுள்களின் பெயர்களையெல்லாம்
கூவி அழைக்கிறான்
‘காப்பாற்று’ என்கிற வார்த்தையை
இணைத்து.

கடவுள்களின் பெயர்களைவிட
‘காப்பாற்று’ என்கிற வார்த்தைக்கு
அதிக அழுத்தம் தருகிறான்.
அந்த அழுத்தம் சொல்கிறது
வாழ்வதற்குத் துடிக்கிறான் என்பதை.
சிதிலமடைந்த கட்டடச் சுவர்களில்
அவனது அபயக் குரல்
மோதி மோதி உடைகிறது.

புழுதி கிளப்பிய
பிற மனிதர்கள்
ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களது பாதங்களில்
அவனது அபயக்குரல் மிதிபடுகிறது.
மேலும் மேலும்
அவன் அழைத்த கடவுள்களில் ஒருவர்
தனது கரத்தை நீட்டுகிறார்.

உயிர் பிழைத்தவன்
கடவுளைப் பார்த்துக் கேட்கிறான்
"நீங்க எந்த சாதிக் கடவுள்" என
இடிபாடுகளுக்கு நடுவே
சிக்குண்டு கிடக்கிறார்
இப்போது
அந்தக் கடவுள்!

முடியாதது

உன்னில் இருந்து
உருவி எடுத்துக் கொண்ட என்னை
கழுவ நினைக்கிறேன்
உன் அழுக்குப் போக.
பெருவெளி எங்கும்
தேடி அலைகிறேன்
நீர்ப்பரப்பை.
பொழுதின் முடிவில்
தென்படும் குளத்தில்
எட்டிப் பார்க்கிறேன்.
நிரம்பி இருக்கிறாய் நீ
என்னைப் பகடி செய்தபடி!

–தொட்டுத் தொடரும்…

About The Author