விரல் தொட்ட வானம் (34)

வடிகால்

அக்காவுக்கு
முன்நெத்தி நரைச்சிருச்சு
வயசும் ஆச்சு
முப்பத்திரண்டுக்கு மேல.
வாக்கப்பட்டுப் போயிருந்தா
பேரன் பேத்தி எடுத்திருப்பா.
பண்ணையாரு வயலும்
பாக்கெட் சாராயமும்தான்
அப்பாவுக்கு உலகம்.
அண்ணனுக்கு லகான்
அண்ணியோட முந்தானை.
வெந்ததைத் தின்னுட்டு
விதியேன்னு கிடக்கிற
அம்மாவுக்குக் கவலையெல்லாம்
அக்காவ பத்திதான்
எப்படி கரையேத்துறதுன்னு.
எங்காச்சும்
எட்டு எழுவுன்னா ஓடுவா
செத்தவனை சாக்கு வச்சு
சொல்லிச் சொல்லி மாரடிக்க!

இது சுதந்திர நாடு

பெருக்கித் தள்ளுகிறேன்.
வீசும் காற்றில்
மீண்டும்
மீண்டும்
குப்பையாகிறது வீடு.
காற்றைத் தவிர்க்க
கதவடைத்தால்
புழுக்கமாகிவிடுகிறது
மனது.
இரண்டையும் திறந்து வைத்து
இயல்பாய் இருக்க முடியவில்லை.
இது சுதந்திர நாடு.

–தொட்டுத் தொடரும்…

About The Author