வசந்தகாலத்திற்காக…
வசந்தத்தைத் தேடி
மரங்கள் அடர்ந்த அடவிகளில்
பயணிக்கிறோம்
முட்களையும் பொருட்படுத்தாமல்
ஆயுதமின்றி இருவரும்.
சொற்களின் வாயை அடைத்து
எங்களின் மௌனங்களை
வளியும், இலைகளும்
அபகரித்துக் கொள்கின்றன
தடை உடைத்து
சொற்களை எடுத்து
பேச முற்படுகையில்
மரங்கள் புலம்புகின்றன
சருகுகள் உதிர்த்தபடி.
மீண்டும்
மௌனம் உடுத்திப் பயணிக்கிறோம்
அடவிகளில்
வசந்த காலத்திற்காக…
வாழ்க்கைக் கரும்பு
எப்படியோ
உன் கைகளுக்குள்
கொண்டு வந்து விட்டாய்
கணுக்கள் நிறைந்த
அந்தக் கரும்பை.
அதனை
வீணையாக்கி மீட்டுகிறாய்
அப்போது கூடுதலாகிறது
ஒவ்வொரு கணுவிற்குள்ளும்
இனிப்புச்சுவை.
உள்ளங்கை ரேகைகளும்
உதடுகள் விரிந்த பற்களின்
சுவடுகளும்
கணுக்கள் எங்கும் மினுக்குகின்றன.
உணர்வூட்டும் கடித்தல்களில்
கணுக்களின் அழகு சிதைகிறது
வெளியேறும் சாறுகளில்
கழுவிக் கொள்கிறாய்
பற்களிலும், ஈறுகளிலும்
படிந்து போன உன் அழுக்குகளை.
உருமாறிக் கிடக்கின்றன
கணுக்கள் எல்லாம் சக்கையாய்
எறும்புகள் சுவைக்கும் இனிப்பும்
அதில் இப்போது இல்லை.
எல்லாக் கணுக்களையும்
சுவைத்த நீ
மிச்சம் வைத்த ஒரு கணுவில்
படிந்திருக்கும் உன்
எச்சம்
உருமாறி நிற்கிறது
விதைக்கரும்பாய்
இறுதி நாள் வரை
உனக்கு மட்டும் கசக்கும்படி!
–தொட்டுத் தொடரும்
“