வீட்டுப்பாடம்
வீடு எனக்கு
இன்னொரு பள்ளிக்கூடமாகி விட்டது.
தலைக்குத் தலை
வகுப்பு எடுக்கிறார்கள்.
ஒவ்வொரு பாடமும் முடிகிறது
ஏதேனும் ஒரு
நீதி போதனையில்
என் இருப்பை
கவனிப்பு செய்கிற
வருகைப் பதிவேடு போல
“உள்ளேன் அம்மா”
சொல்லியே ஆக வேண்டும்
கழிப்பறையில் இருந்தாலும்
வீட்டிற்குள் வந்துவிட்டது
உலகம்
எதற்கும் நான்
வெளியில் செல்லக்கூடாதாம்.
திசைகள் சுருங்கிப் புள்ளிகளாய்…
காதல் கணக்கு
அவனுக்கும் அவளுக்கும்
விருப்பமான பாடங்களில்
முதலிடம் வகிக்கிறது
கணிதம்.
அதிலும் குறிப்பாய்
அவளுக்குப் பெருக்கலும்
அவனுக்குக் கழித்தலும்
கூடுதல் விருப்பம்.
அவள்
அவனை, காதலை, இன்பத்தை
பெருக்கலில் வைத்திருக்கிறாள்.
அவன்
அவளை, துன்பத்தை, பொது நலத்தை
கழித்தலில் வைத்திருக்கிறான்.
இருவரின் பட்டியலையும்
காலம்
வகுத்து வகுத்து வாசிக்கிறது.
தண்டவாளங்களாகி விட்ட
இருவரின் கணக்கிலும்
யார் யாரோ பயணிக்கிறார்கள்
அவர்களின் கணக்குகள்
உலகெங்கிலும்
பேர் மட்டும் பார்க்கப்படுகிறது
பலரால்…
பலவிதமாய்…
தப்பு தப்பாய்…
–தொட்டுத் தொடரும்…
“