தினமும்
ரகசியமாய்
ஒரு மாநாடு நடத்தின
வண்டுகள் எல்லாம் ஒன்று கூடி
கையில் மதுக் குப்பிகளோடு
என் மலர்தலை வைத்து.
ஒரு வண்டு நிகழ்த்தியது
மன்மத உரை.
காலியான குப்பிகளில்
என் அந்தரங்கத்தை நிரப்பி
ரசித்து அருந்திய வண்டுகளின்
படையெடுப்பில்
உடைபடுகின்றன என் கதவுகள்
தினமும்!
காலம்
காலத்தின்
அவதாரம் வலிமையானது.
அது பாடம் நடத்துகையில்
ஆசிரியர் மாணவராகிறார்.
தனது கைகளை நீட்டுகையில்
குசேலனும் குபேரனாகிறான்.
தாயாகும்போது
பார்வையற்றவனுக்கும்
விழி கிடைத்துவிடுகிறது.
கோபப்படுகையில்
கிளை பரப்பிய மரமும்
வேரோடு சாய்கிறது.
தனது கைகளை விரிக்கும்போது
பசித்த மயானத்திற்குக் கிடைத்து விடுகிறது
தினம் ஒரு மனித உணவு!
–தொட்டுத் தொடரும்…