விரல் தொட்ட வானம் (20)-முகம்

முகம்

ஒரு முறைக்கு
பலமுறை கழுவப்படுகிறது
முகம்.
மழிப்பிலும் வாசனைப்பூச்சிலும்
அழகுபடுத்தப்படும்போது
எப்போதும் இருக்கிறது
ஒரு முள்
மனதைக் கொல்வதற்கு.
பார்த்திருக்கலாம்
அல்லது உணர்ந்திருக்கலாம்
நீங்களும்
உதவி என்று
அந்த முகத்தைத் தேடும்போது.

சரித்திரம்

தட்டினாய் என்பதற்காக
திறந்தேன்
என் கதவுகளை.
தேடி வந்து படியேறி உள் நுழைந்து
பகிர்ந்து விட்டுப் போனாய்
கோப தாபங்களையும்
இன்னும் சிலவற்றையும்.
ரணத்திற்கு மருந்தாய்
ஆறுதல் என நன்றி கூறி மகிழ்ந்தாய்
நெகிழ்வைக் கசிய விட்டு.
இன்று
உன் நிலையில் நான்.
தேடியபோது படிகளில் நிற்கிறாய்
எந்த நிறுத்தம் வந்தாலும்
இறங்கிக் கொள்வதற்கு வசதியாய்
ஒரு பயணியைப் போல.

–தொட்டுத் தொடரும்

About The Author