விரல் தொட்ட வானம் (10)-எருமை மாடுகள்

எருமை மாடுகள்

சகதி நீர்
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்
போதும் என
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்,
காடு சிவக்கும்படி!

சிறை

தாண்டினால் புரட்சி
மிதித்தால் படிக்கட்டு
அழித்தால் சாதனை
சொல்…
என்ன செய்வதாய் உத்தேசம்…
உன்னைச்
சிறைப்படுத்தும் கோடுகளை?

காலத்திற்கு

ஏழை வீட்டு மண் குடங்களைச்
சிதைக்க அலைகிறது
காலம் என் கையிலென
அதிகாரத் திமிர்.
களை எடுக்கக்
கங்குலிருளைத்
தன் வாயில் கௌவிக்கொண்டு
ஒரு பூனையைப் போல
உப்பரிகை, அத்தாணி, அந்தப்புரமென
வலம் வருகிறது
இறக்கி வைப்பதற்கு.
சமையலறை தேடி
அடுப்பில் திணித்தபோது
காளபத்துக்குப் போன திமிர்
புறமுதுகு காட்டித் திரும்புகிறது.
எங்கே எதை வைப்பதென
தெரிந்திருக்கிறது காலத்திற்கு.

தொட்டுத் தொடரும்

About The Author