வியக்க வைக்கும் பெண்கள்

சர்வதேசப் பெண்கள் தினம் துவங்கி ஒரு நூற்றாண்டு காலம் ஓடி விட்டது (1911-2011). இந்த தினம் துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா பார்த்தால் இன்றைய நிலையில் ஓரளவு நிறைவேறியுள்ளதாகவே தோன்றுகின்றது. இக்காலப்பெண்கள் சமூக அரசியல், பொருளாதார ரீதியில் உரிமை பெற்றிருக்கிறார்கள். பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று பெருமிதம் கொள்கின்ற வகையில் அனைத்துத் துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்துள்ளனர். இத்தினத்தை ஒட்டி நிலாச்சாரலின் தன்னார்வலர்கள் தாங்கள் வியந்து போற்றும் பெண்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

டி.எஸ்.ஜம்புநாதன்

ஊனமுற்றவர்களைப் பற்றிய மக்களின் பார்வை மாற வேண்டும். அவர்களை பரிதாபத்துடன் பார்க்காமல் ஒரு புரிதலோடு அணுகவேண்டும் என அயராது கனவு காண்பவர் திருமதி ஜெயஸ்ரீ ரவீந்திரன். கடந்த 15 ஆண்டுகளாக success and ability என்ற ஆங்கில அச்சு இதழை நடத்தி வருகிறார். பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காக குறுந்தகடுகளையும் வெளியிட்டு வருகிறார். அவர்களுக்கு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு அளிப்பது, ஒவ்வொரு ஆண்டும் ஊனமுற்ற சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது, கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கென சைகை மொழி, கணிணி பயிற்சி, முதலியன அவர் ஆற்றி வரும் பணிகளில் சில.

இனிமையாகவும், எப்போதும் நம்பிக்கையுடனும் பதில் அளிக்கும் இவருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஐந்து வயதில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும்போது கீழே விழுந்து கேட்கும் திறனை முழுதும் இழந்தவர் என்பது உங்களுக்குத் தெரியவே தெரியாது!

டி.எஸ்.பத்மநாபன்

"இறைவனே,
என்னால் மாற்றமுடியாததை ஒப்புக் கொள்வதற்கான அறிவைக்கொடு!
மாற்றமுடிவதை மாற்றுவதற்கான சக்தியைக் கொடு!
இவை இரண்டுக்கும் உள்ள பேதத்தை உணர்வதற்கான ஞானத்தைக் கொடு!"

மகளிர் தினம் என்றதுமே சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூறுவது வழக்கம்தான். ஆனால் நாம் சாதனை படைத்தவர்கள் என்று கூறுபவர்களில் பலர் நல்ல செல்வக் குடும்பத்தில் எல்லா வசதியுடனும் வாழ்ந்து சேவை செய்பவர்கள். ஆனால் எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் தன்னால் முடிந்த பணியை தான் பிறந்த மண்ணுக்குச் செய்ய வேண்டும் என்று வாழும் சிலர் இன்னும் அறியப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப் பாடப்படாத ஒரு பெண்மணிதான் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பசுமைப் புரட்சிப் பெண்மணி ஊர்மிளா பெஹெரா.

ஒரிஸ்ஸாவின் கோத்தப்படா என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி அறுபது கிராமங்களில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறார். அதுவும் அரசாங்கத்திடமிருந்து எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்காமல்! ஊர்மிளா பெஹெரா அப்படி எல்லாருக்கும் கொடுத்து உதவக்கூடிய அளவிற்குப் பணம் படைத்தவரல்ல. அவர் வசிப்பது ஓலைக் குடிசையில்தான். அவருக்கு உலக விஞ்ஞானிகளையும் அரசியல்வாதிகளையும்போல உலக வெப்பமயமாக்கல் பற்றியோ பசுமைப் புரட்சி பற்றியோ விவாதிக்கவோ நீண்ட உரை கொடுக்கவோ தெரியாது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொது அறிவு மட்டுமே படைத்தவர் அவர்.

அனைவராலும் கச்சாமாமா ( மரங்களின் அன்னை) என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், மரங்கள் வளர்ப்பதற்காக தன்னிடம் இருந்த சொற்ப நிலங்ளைக்கூட விற்றிருக்கிறார். அவருடைய இலக்கு நதிக்கரையோரங்களில், பள்ளிகளில் மற்றும் அநேக இடங்களில் மரங்கள் நடவேண்டும் என்பதுதான்.
அவர் சுற்றுப்புற இடங்கள் முழுவதையும் வேப்ப மரம், தென்னை, பனை, மா, தேக்கு, ஆலமரம் என்று பலவகைப் பயன்தரும் மரங்களை நட்டிருக்கிறார். அவர் கூறுகிறார், "எனக்கு ஆண் குழந்தைகள் கிடையாது. ஆண்குழந்தை இல்லாத குறையை மறப்பதற்குத்தான் மரங்கள் நட ஆரம்பித்தேன். இந்த மரங்களைத்தான் மகன்களாக நினைக்கிறேன். நாளடைவில் இதுவே எனக்குப் பொழுதுபோக்காகி விட்டது. ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து மரங்கள் நடுகிறேன். சில முக்கியமான நாட்களில் நூறு மரங்கள் கூட நடுவதுண்டு" என்று சொல்கிறார் ஊர்மிளா பெஹெரா.

பெஹெரா ஒரு தனி மனிதராக இந்தப் பணியைச் செய்கிறார். கேக் வெட்டி மரங்களின் பிறந்த நாளைக்கூடக் கொண்டாடுகிறார். அவருடைய தினப்பணி காலையில் மரத்திற்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதுதான். அவரது கணவரும் பெண்களும் அவருக்கு இந்தப் பணியில் உறுதுணையாய் இருக்கிறார்கள்.

" ரத்தமும் சதையும் படைத்த மனிதன் வேண்டுமானால் சமூகத்திற்கு எதிரான காரியங்களைச் செய்யலாம். ஆனால் மரங்கள் எப்போதும் அவ்வாறு செய்யாது. சமூகத்திற்கு எந்த உதவியும் செய்யாதவர்களை மனிதர்கள் என்றே சொல்ல முடியாது. நாங்கள் இந்தப் பணியை இறுதி மூச்சுவரை செய்வோம்” என்று சொல்கிறார் பெஹராவின் கணவர் பீதாம்பர். இந்தத் தம்பதியரின் பெண்களும், மற்ற கிராமத்துப் பெண்களும் ராக்கி தினத்தன்று மரங்களுக்கு ராக்கி கட்டுகிறார்களாம்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அதனைப் பற்றி மேடைகளில் அறைகூவல் விடுப்போர் பெஹறாவின் மவுனப் புரட்சியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் பல உண்டு.

சித்ரா

வாழும் தெய்வங்கள்
கூடி வாழ்வதால்
கோயில்களாகின்றன
முதியோர் இல்லங்கள்!

ஆம்! விச்ராந்தி என்ற முதியோர் இல்லக்கோயிலின் நிறுவனர் திருமதி சாவித்திரி வைத்தியைப் பற்றிதான் கூறப்போகிறேன்.

பதினாறு வயது முதல் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் இன்று வரை..80 வயது வரை ஓயாமல்.. ஓடியாடி துடிதுடிப்புடன் இயங்குவது ஆச்சரியம்தான்! மெலிந்த தேகம், தும்பைப்பூ போன்ற தலை, நெடு நெடு என்ற உயரம், கண்களில் கனிவு, முகத்தில் புன்னகை. பாட்டிகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு, இவைதான் சாவித்திரி அம்மாவின் தோற்றம்.

விழுதுகள் துறந்த ஆலமரங்களாய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது இந்த விச்ராந்தி. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்பங்களைத் தொலைத்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பெண் நோயாளிகள் என்று பெண்களுக்காக இயக்கப்படும் அமைப்புதான் விச்ராந்தி. அதிலும் குறிப்பாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக!

தங்குவதற்கு காற்றோட்டமான வசதியான இடம், உடுத்துவற்கு சுத்தமான உடை, உண்பதற்கு ஆரோக்கியமான உணவு, உடல்நலம் பேண சிறந்த மருத்துவ வசதி…(எல்லாமே இலவசமாக!)…என்று நின்று விடாமல் இன்னும் ஒருபடி மேலே சென்று, பாட்டிகள் இறந்து விட்டால், சாவித்திரி அம்மா அவர்களே இடுகாடுவரை சென்று அனைத்து காரியங்களையும் செய்கிறார்!!

முதன்முதலாக ஒரு இழப்பு நிகழ்ந்தபோது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாராம். வெட்டியானின் அலட்சியமான செயல்பாடுகள் ஆத்திரத்தை ஏற்படுத்த, அன்று முதல் இன்று வரை சாவித்திரி அம்மாவே இறக்கின்றவர்களுக்குக் காரியங்கள் செய்கின்றார். சாத்திரங்கள் பெண்களுக்கு இதை மறுத்திருந்தாலும் மனித நேய அடிப்படையில் இவருடைய செயல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தனித்தன்மை பெற்ற சமூகத் தொண்டராக விளங்குகின்றார் திருமதி சாவித்திரி அம்மா அவர்கள்.

ச.நாகராஜன்

சாதனைப் பெண் யாரென சற்று அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்கில் நினைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறேன். சற்று வித்தியாசமான நோக்கு கிடைக்கிறது. விளைவு கீழே உள்ள வரிகள்! இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் படித்துவிட்டுச் சொல்லுங்களேன்!

காலையில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து குளித்து சமையல் வேலையை – காலை சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும்தான் – முடித்து விட்டு, குழந்தையை எழுப்பி அதன் பள்ளி வேலைகளை முடித்து கணவனுக்கும் குழந்தைக்கும் காலை சிற்றுண்டியை வயிறு நிறையப் போட்டு, மதிய உணவை டிபன் பாக்ஸில் கட்டி, குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு அவசரம் அவசரமாக மின்வண்டியைப் பிடிக்க ரயில் நிலையத்திற்கு ஓடி, ரயிலைப் பிடித்து நின்றவாறே அலைமோதும் கூட்டத்தில் நீந்திப் பயணித்து, அலுவலகத்தில் சரியான நேரத்திற்கு சேர்ந்து வருவோரையெல்லாம் புன்னகையுடன் வரவேற்று, அங்கு வாடிக்கையாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்லி – மாலை அலுவலக வேலை முடித்து ரயிலில் திரும்பும் போது மறக்காமல் வாங்கி வந்த கறிகாயை நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு, வீடு வந்து காத்திருக்கும் குழந்தைக்கு டிபனைக் கொடுத்து, அது விளையாடி முடித்தவுடன் ஒன்றிரண்டு பாடங்களை, சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்து கணவன் வீடு வந்தவுடன் அன்றைய செய்திகளைப் பரிமாறிக்கொண்டு சமைத்திருக்கும் இரவு உணவை சேர்ந்து அனைவரும் முடித்து – இன்று ஒரு நாள் முடிந்தது நாளை? என்று எண்ணத் தொடங்குகிறாளே அந்த இளம் மகராசி .. அவளைப் போன்றவர்களால் அன்றோ குடும்பம் செழிப்பாய் இருந்து இந்த நாடு வல்லரசாக நடை போட ஆரம்பிக்கிறது!

சாதனை மகளிர் என்றால் தனியாகச் சாதிக்க வேண்டுமா என்ன? ஊழல் மகாயுகத்தில் விலைவாசி ஜெட் வேகத்தில் உயரத்தில் பறக்க ‘பார்’ விளையாடும் சர்க்கஸ் சுந்தரி போல நாடு செழிக்க, வீடு விளங்க தன் கடமையைத் தன்னலம் பாராது செய்கிறாளே.. அவளை என்னவென்று சொல்வதாம்?

About The Author