வித்தகம்

இரவு வண்ணத்தின் ஒளித் துணுக்குகளை
பிரித்தெடுத்துத் தைத்த உடை

அணிந்திருந்தேன்.

இரண்டடி உயரத்தில் துணியின்
மடிப்பில் மடங்கித் தைக்கினறனர்
குனிந்து உட்கார்ந்து பத்து மணிநேரம்

சிறார்கள்.

உடையின் நிறத்திற்கு ஒத்ததேயான வர்ணத்தில்
கை நிறைய கண்ணாடி வளையல்கள்
அழகை மெருக்கூட்ட

அணிகிறேன்.

முந்நூற்று அறுபது டிகிரி உஷ்ணத்தில்
கண்ணாடிக் குழம்பை ஊதுகுழலில்
உதடு வரை படாமல் உறிஞ்சித்
துப்புகிறார்கள் எப்போதும்

சிறார்கள்.

சரம் சரமாய் சங்கிலிகளும், சலங்கைகளும்
நிறைந்து சப்திக்க ஒயிலாக நடை பயில
மின்னலின் வெள்ளியில் கொலுசு

அணிந்து கொள்கிறேன்.

மினுக்கும் வெள்ளியின் இடையிடையே
தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நகாசு வேலையில்

சிறார்கள்.

உணவருந்தும் விடுதியில் மேசையின் மீது
வண்ணப்பரப்பில் வண்ண வண்ண உணவுகள்
ஏதோ திரவம் என் மீது பட்டுவிட
சுடு சொற்கள் கோபத்துடன் வீசுகிறேன் – நான்
ஒயிலாக உடை திருத்தி

அதிர்ந்து முகம் சுருங்க விரலிடை
பிடித்த பாத்திரமும் துணியுமாய் எதிரில்

சிறார்கள்.

அச்சகத்தில் முடிவடையா புத்தகங்கள்
ஆவலில் என் மனம்
பசை ஒட்டியும், பைண்டிங் செய்தும்
கவிதைகளுக்கு இடையில் இன்னமும்
அதிகமாக

சிறார்கள்.

குரல் செருமி கூட்டம் பார்த்துக்
கை அசைத்து வாசிக்கத் தொடங்குகிறேன்
எனதேயான கவிதையை.

(தொடரும்)

About The Author