"ஐயோ! என்னால முடியலையே!… பிளீஸ்… என்னை வெளிய விடுங்க! நான் எங்கேயாவது போயிடறேன். இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்றீங்களே! என்னால முடியலை… என்னால முடியலை… ஐயோ!" விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே சோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள்.
திடீரென்று, விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட, "கடவுளே! நான் என்ன பண்ணுவேன்? இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே! இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைச்சு எடுத்துடுவான் போல இருக்கே!"
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படிச் சிகிச்சைக்காக அறைக்குள் அடைத்து வைத்து விட்டு, அவனுக்குக் காவலாய்த் தங்கள் மகள் கீர்த்தனாவை அமர வைத்து விட்டு டாக்டரைச் சந்தித்து வரச் சென்றிருந்தனர் அவனது பெற்றோர்.
"ஏய் கீர்த்தனா! பிளீஸ் கதவைத் திறந்து விடுடி! பிளீஸ்… பிளீஸ்…!" தங்கையிடம் பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான். சில நிமிடங்களிலேயே அந்தக் கெஞ்சல் அழுகையாக மாறியது.
மெல்ல எழுந்து வந்து அவன் இருந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள் கீர்த்தனா. தரையில் அமர்ந்து சிறு குழந்தையைப் போல் அழும் அண்ணனைப் பார்த்துப் பரிதாபப்பட்டது அந்தத் தங்கையின் மனம். "கடவுளே… நீதான் இவனைக் காப்பாத்தணும்! இந்தப் பாழாப் போன போதைப் பழக்கத்திலிருந்து நீதான் இவனை மீட்டுத் தரணும்!"
ஜன்னலில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும் அவன் அதிகமாய் அழ, கீர்த்தனாவிற்கும் அழுகை தானாகவே வந்தது. தனக்காக அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட விஸ்வம் மெல்லத் தன் கோரிக்கையை நாசூக்காக வைத்தான்.
"கீர்த்தனா! பிளீஸ் எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?" அவன் அழுதவாறே கேட்க,
"என்னண்ணா?"
"நீ கதவைக் கூடத் திறந்து விட வேணாம். அம்பது ரூபா எடுத்துக்கோ!… நேரா பஸ் ஸ்டாப்புக்குப் பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைக்குப் போ!… அங்க… கடைல இஸ்மாயில்னு ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட என் பேரைச் சொல்லி அம்பது ரூபாயைக் கொடு!… அவன் ஒரு பொட்டலம் தருவான். அதை வாங்கிட்டு வந்து என்கிட்ட குடுக்கிறியா?"
அவள் யோசனையாய்ப் பார்க்க, சட்டென்று அவள் கைகளைப் பிடித்துக் கெஞ்சலானான் அவன். மனமுருகிப் போன கீர்த்தனா உடனே புறப்பட்டாள்.
தங்கை எப்பொழுது வருவாள் என்கிற எதிர்பார்ப்புடன் ஜன்னலையே பார்த்தபடி அமர்ந்திருந்த விஸ்வம், தலைவிரிகோலமாய்க் கத்தியபடி ஓடி வந்த தங்கையைப் பார்த்து அதிர்ச்சியானான்.
"ஐயோ!… அண்ணா!… அண்ணா!…" என்று கத்தியவாறே சோபாவில் குப்புற விழுந்து குலுங்கியவளை ஏதும் புரியாமல் பார்த்தபடி நின்றான் விஸ்வம்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த அவன் அம்மாவும் அப்பாவும், மகள் கிடந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
"கீர்த்தனா! என்னம்மா?.. என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்கே?" இருவரும் மாறி மாறி விசாரிக்க, விம்மி விம்மி அழுதபடி நடந்ததை விவரித்தாள் கீர்த்தனா. அவள் சொன்னதைக் கேட்டுத் தலையில் இடியே விழுந்தது போல் நிலைகுலைந்து போனான் விஸ்வம்.
அவன் தாய் நேரே அந்த ஜன்னலுக்கு வந்து, "அடப்பாவி!… நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ கெட்டுத் தொலைஞ்சது போதாதுன்னு கூடப் பொறந்தவளையும் கெட்டுப் போக வெச்சிட்டியேடா!"
பின்னாடியே வந்த அவனது தந்தை "ஏண்டா அறிவு கெட்டவனே! அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வயசுப் பொண்ணை யாராச்சும் அனுப்புவாங்களாடா? கொஞ்ச நேர சொகத்துக்கு ஆசைப்பட்டு உன் தங்கச்சியோட வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா! ஐயோ!
ஆண்டவா! இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்கவா என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கே?" மேலே பார்த்துக் கூவினார்.
விஸ்வம் அழுதான். ஜன்னல் கம்பிகளில் மீண்டும் மீண்டும் தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் விட்டான். தங்கைக்கு ஏற்பட்ட கொடுமை தந்த அதிர்ச்சி அவன் போதைவெறியை மறக்கச் செய்தது.
சட்டென ஏதோ நினைப்பு வந்தாற்போல் அவன் அம்மா, கீர்த்தனா கொண்டு வந்திருந்த பொட்டலத்தை எடுத்து விஸ்வத்திடம் நீட்டி "நீ ஏண்டா அழறே? இந்தா! உனக்கு வேண்டியது இதுதானே? வாங்கிக்கோ!… நீயாவது சந்தோஷமா, உன் இஷ்டப்படி இரு!" என்றாள்.
விழித்துப் பார்த்தபடி, மெதுவாக அந்தப் பொட்டலத்தை வாங்கிய விஸ்வம் சிறிது நேரம் அதையே முறைத்துப் பார்த்தான். கோபம், ஆற்றாமை, இயலாமை, அவமானம் என்று மாறி மாறி அவன் கண்களில் உணர்ச்சிகள் பொங்க, பெரும் வெறுப்புடன் அதை ஜன்னல் வழியே விட்டெறிந்தான். தரையில் உட்கார்ந்து, இரு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி மறுபடியும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.
வழியில் கீர்த்தனாவைச் சந்தித்தபோது வீட்டில் நடந்ததைக் கேட்டுவிட்டுத் தாங்கள் நடத்திய நாடகத்தின் முடிவு சுபமானதில் உள்ளுர மகிழ்ந்தன மூன்று உள்ளங்கள்.
“