லண்டனில் வெளியிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்பட இசைத்தட்டு” என்ற பெருமையோடு வெளிவந்திருக்கின்றன இப்படத்தின் பாடல்கள். தமிழ்ப் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடுவதால் என்ன பெருமை என்று தெரியவில்லை. ஆஸ்கார் விருதுகளைப் பெற்று புகழின் உச்சியைத் தொட்டுவிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை உலக அரங்கில் ரிலீஸ் செய்தால் இன்னும் கொஞ்சம் கெத்தாக இருக்குமோ என்று எண்ணியிருக்கலாம்! எப்படியும், அதனைத் தொடர்ந்து, சென்னையிலும் விழா ஒன்றைக் கொண்டாடி இசைத் தட்டை வெளியிட்டார்களே, அது வரையில் சந்தோஷம்தான்!
போஸ்டர் அச்சடிப்பதிலேயே அலைபாயுதே, இதயத்தைத் திருடாதே, உயிரே போன்ற திரைப்படங்களின் நிழற்படங்களைப் போலவே இப்படத்திற்கும் நிழற்படங்களை அமைத்து தன் புத்திசாலித்தனத்தைக் காட்டியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன். மணிரத்னத்திற்கு கூடைகூடையாக ஐஸ் வைக்கிறார் போல!! முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இணைகிறார். சிலம்பரசன் (இப்பொதுல்லாம் மனிதர் விரலை கன்னாபின்னாவென்று ஆட்டுவதில்லையாம்), த்ரிஷா நடிக்கும் இப்படம் காதலர் தினத்தையொட்டி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, ரஹ்மானின் இன்னிசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்போமே!
ஓமனப் பெண்ணே
பென்னி தயாளின் குரலில் நல்ல மெலடி. ”தன்னைத் திருடிய ஓமனப் பெண்ணை” நினைத்து நாயகன் பாடும் பாடல். தாமரை கதாநாயகனின் தவிப்பை அழகிய வரிகளால் சொல்கிறார். பாட்டின் நடுவில் கல்யாணி மேனனின் மலையாள வரிகளும் வருகின்றன. ரொம்பவும் அழகாகப் பாடியிருக்கின்றார் கல்யாணி மேனன். சரணத்தின் ஆரம்பத்தில் பென்னி தயாள் செய்யும் குறும்புகள் (ஹூ… காற்றில்ல்ல் போன்ற இடங்களில்) நல்ல முயற்சி – இருந்தும் அத்தனைக் கச்சிதமாக எடுபடவில்லை. பாடல் முழுவதும் கம்ப்யூட்டரின் ஆதிக்கம் தெரிகின்றது. ரஹ்மான் என்றால் இருக்காதா என்ன! பாடலின் முடிவில் அற்புதமான நாதஸ்வர இசையைத் தந்து கம்ப்யூட்டரின் ஆதிக்கத்தைச் சரிகட்டுகிறார் ரஹ்மான். சபாஷ்!
அன்பில் அவன்
பாடலின் ஆரம்பத்திலேயே ரஹ்மானின் சௌண்ட் இன்ஜினியரின் ஆதிக்கம். கூடவே கொஞ்சம் மேள தாளத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பீட்ஸையெல்லாம் எடுத்துவிட்டு வெறும் நோட்ஸை மட்டும் கேட்டால், குழந்தைகள் சொல்லும் ரைம்ஸ் போலவே இருக்கும். சின்மயியும் தேவனும் பாடும் காதல் டூயட். நாயகன் நாயகி மணந்து கொள்ளும் காட்சி போல. ”எனக்கு நீ, உனக்கு நான்” என்பதை தாமரை தன் எழுத்துக்களின் மூலம் விதவிதமாகச் சொல்கின்றார். சர்ச்சில் கேட்கும் கார்ட்ஸ் கூட ஆங்காங்கு கேட்கின்றன. (படத்தில் த்ரிஷாவின் பெயர் ஜெஸ்ஸி!) டெக்னோ இசையை ரசிப்பவர்களுக்கு இப்பாடல் ரொம்பவும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா
கிடார், பியானோ மற்றும் கார்த்திக்கின் குரல் – மூன்றும் சங்கமிக்க படத்தின் ‘தீம்’ பாடல் வருகின்றது. வெறும் கார்ட்ஸையும் கார்த்திக்கையும் மட்டும் நம்பி ரஹ்மான் பாடலை இசையமைத்திருக்கின்றார். ஆங்காங்கே கிடார் புகுந்து விளையாடுகிறது. தாமரையின் அழகான வரிகள், எக்கச்சக்க கார்ட் மாற்றங்கள் – கொஞ்சம் ஜாஸ் ஜாடை. வித்தியாசமான தீம் இசை. வெள்ளித்திரையில் எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.
ஹோசன்னா
இசைத்தட்டின் வெளியீட்டிற்கு முன்பே, ஏதோ ஒரு புண்ணியவான் (இப்படியும் திட்டலாம்!) எங்கிருந்தோ திருடி, இண்டெர்நெட்டில் லீக் செய்து விட்ட ஹோசன்னா இதோ. ஆங்காங்கே கொஞ்சம் வாத்தியங்களைச் சேர்த்து, பாடலை மாற்றியிருக்கிறார். அழகான புல்லாங்குழல் இசையில் ஆரம்பிக்கின்றது. முதல் வரியிலேயே ”என் இதயத்தை உடைத்துவிட்டாய்” என்று காதல் நிரம்பி வழிகின்றது. மீண்டும் தாமரையின் வரிகள். அதற்குப் பிறகு ரஹ்மான் நமக்கு நிறைய இன்ப அதிர்ச்சிகளைத் தருகிறார். முதலில், கார்ட்ஸ் மாற்றங்கள், தாலாட்டும் பீட்ஸ், அதற்குப் பிறகு மேற்கத்திய பாணிக்கு கொஞ்சம் கிராமிய வாசனை பூசி ஒரு வித்தியாசமான பாடலைத் தருகிறார். தொல்லிசை முறையில் சொல்ல வேண்டும் என்றால் – நடை மாற்றம். விஜய பிரகாஷும் தன் குரலில் அற்புதமாக ஏற்ற இறக்கங்களைக் காட்டியிருக்கிறார் . அதனைத் தொடர்ந்து வரும் ப்ளாசேவின் ராப், சூசனின் பின்னணி ஹம்மிங் – மிகவும் வித்தியாசமான முயற்சி.
கண்ணுக்குள் கண்ணை
காதலியைப் பார்த்து நாயகன் ”இன்னும் ஏன் பதில் இல்லை” என்று கெஞ்சுவது போன்ற பாடல் – மீண்டும் தாமரை வரிகளில். வயலின், செலோ, ட்ரம்ஸ் – பிரம்மாண்டமான தொடக்கம். தாளம் போட வைக்கும் வேகமான பாடல். நரேஷ் ஐயர் கச்சிதமாகப் பாடியிருக்கிறார். முன்பொரு பாடலுக்குச் சொன்னதே இதற்கும் பொருந்தும் – எல்லா வாத்தியங்களையும் எடுத்து விட்டுக் கேட்டால், மிச்சம் இருக்கும் நோட்ஸ் ரைம்ஸ் வகையறாதான்! என்ன, இப்பாட்டில், கீஸ், கிடார், வயலின் என்று எல்லா வாத்தியங்களையும் நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்.
மன்னிப்பாயா
ஹா! என்ன ஒரு ஆச்சரியம்! ஷ்ரேயா கோஷலின் குரல் – அதுவும் ”இருந்தவள்”, ”வந்தவள்” என்று சரியான உச்சரிப்பு. வெறும் கார்ட்ஸின் பின்னணியில் ஒரு சிறிய, அழகான தொகையறா! அதன் பிறகு வெறும் கீஸ், கார்ட்ஸ் – பாடல் முழுவதும். அவ்வளவுதான்! ஆங்காங்கு மெய்சிலிர்க்க வைக்கும் புல்லாங்குழல். அதன் பிறகு ரஹ்மானின் குரல். தாமரையிடம் இது போன்ற காதல் பாடல்கள் நிறைய இருக்கின்றன போல! நாயகி எதற்கோ மன்னிப்பு கேட்க, அதற்கு நாயகன் பதில் சொல்வது போல அமைந்திருக்கின்றது. பாடல் நடுவில் – கிறிஸ்துவ இசைமுறை, திருக்குறள், வீணை, கார்ட் மாற்றங்கள் – என்று கலந்தடித்திருக்கிறார். பாடல் ஷ்ரேயாவின் குரலிலும், பியானோவிலும் முடிவது மெலடியை எடுத்துக் காட்டுகின்றது. நல்ல முயற்சி.
ஆரோமலே
மேற்கத்திய கிடாரிங்கோடு ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். அது என்ன ”ஆரோமலே”? சீக்கிரமே பாடல் ஆரம்பிக்க, பதில் கிடைக்கின்றது – இது ஒரு முழு நீள மலையாளப் பாடல் என்று தெரிகின்றது. கொஞ்சம் தேவைக்குரிய பீட்ஸ் சேர்த்து, வெறும் கிடாரை மட்டுமே வைத்துக்கொண்டு முழுப்பாடலை முடித்திருக்கிறார். கொஞ்சம் உற்று கவனித்தால், ஆங்காங்கு வயலின் கேட்கலாம். அவ்வளவுதான்.
கைதப்ரமின் மலையாள வரிகளை அற்புதமாக பாடியிருப்பவர் அல்ஃபோன்ஸ். ஆங்காங்கு உச்ச ஸ்தாயியில் கத்தும் பொழுது கூட சுருதியுடன் கனகச்சிதமாக சேர்கிறார். யார் சொன்னது ரஹ்மானுக்கு வெறும் கம்ப்யூட்டரை வைத்தும்தான் இசையமைக்கத் தெரியும் என்று! மனிதருக்கு முதலில் ஒரு சபாஷ் போடுங்கள்!
நம்மூர் இசையை மையக் கருவாக வைத்துக்கொண்டு, கொஞ்சம் மேற்கத்திய வாசனைப் பொருட்களைத் தூவி, நம் இசைமுறைகளை உலக அரங்கில் மேடையேற்ற நினைக்கிறார் இசைப்புயல். இரண்டு பாடல்களில் மட்டுமே புயலாய் வருகிறார், மற்றவற்றில் இனியதோர் தென்றலாய் வீசுகிறார். தமிழர்களுக்குத் தான் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் இசையை உபயோகித்தாலும், அவரும் இம்மண்வாசமும், நம்மிசையின் அருமையும் அறிந்தவரே என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கின்றார்!! ரஹ்மான்னா சும்மாவா!
மன்னிப்பாயா என்ற பாடல் உண்மையிலேயே மிகவும் இனிமை. சரியான விமர்சனம்.
(ஒரு வாரமாக எனது காரில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.)
கொசன்ன சொங் இச் வெர்ய் நிcஎ..இட்ச் ஒனெ ஒf தெ பெச்ட் சொங் ஒf திச் யெஅர்..தன்க்ச் ரெக்மஞி…….