ஆடல் பாடல் காட்சிகள், வெளிநாட்டுப் படப்பிடிப்பு, இரவு விடுதிகள், கதாநாயகனின் சீறல்கள் – இவற்றில் எதையுமே காணோம். புதுமை எனக் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு எதையும் காட்டாமல் அடிமட்ட மக்கள் வாழும் இடங்கள் பலவற்றைச் சுற்றியே கேமரா சுழல்கின்ற வித்தியாசம்.
கோடம்பாக்க சினிமா மசாலாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கின்றார்கள். அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற பரபரப்பான உணர்வைப் பார்ப்பவர்கள் மனதிற்குள் தூண்டிவிட்டு, கதையின் உச்சக்கட்டத்தில் இலாவகமாக ஒரு குண்டை வீசிப் பேரதிர்ச்சியைத் தந்துவிட்டுப் படம் முடிகின்றது.
பூஜா, சிறுமி மாளவிகா இருவரின் அபார நடிப்பில், தமிழுக்குப் புது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் பாலாஜி கே.குமாரின் ‘விடியும் முன்’ பார்வையாளர்களை அசத்தியிருக்கின்றது!
கதையில் வேகம் சற்றுக் குறைவு என்றாலும், அடுத்து என்ன நடக்கும் எனப் பார்ப்பவர்களை நகம் கடிக்க வைக்கும் பரபரப்பை இறுதி வரை தக்கவைக்கத் தவறவில்லை திரைப்படம்.
2006இல் வெளிவந்த ‘London to Brighton’ என்ற ஹாலிவுட் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஒன்று. அந்தப் படத்தின் கதையை எடுத்துத் தமிழில் இவ்வளவு சிறப்பாக இயக்கியிருக்கும் பாலாஜி, நிச்சயம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சி அலையை உண்டு பண்ணியிருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஓடுவதும், துரத்துவதுமாகத்தான் கதை நகர்கின்றது.
3 ஆண்டுகளுக்கு முன் ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த பூஜா, நீண்ட இடைவெளிக்குப் பின் திரைக்கு வந்து (இடையில் ஓரிரு படங்களில் சிறப்புத்தோற்றத்தில் வந்ததைத் தவிர்த்து) தன் அசத்தல் நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். பாலியல் தொழிலாளியாக, மென்மையான குரலிலான இவர் நடிப்பு பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கின்றது.
சிறுமி மாளவிகாவின் நடிப்பும் நம்மை அசரடிக்கின்றது. ஒரு 12 வயதுச் சிறுமி இப்படியெல்லாம் பேசலாமா என்கிற சந்தேகம் நம்முள் முளைத்தாலும், அந்தப் பன்னிரண்டு வயதுக்குள் அவள் சந்தித்த படு மோசமான நிகழ்வுகள், அவளைப் பெரிய மனுஷித்தனமாகப் பேச வைப்பது யதார்த்தம் என்றே சமாதானம் கொள்ள வைக்கிறார் இயக்குநர். குறிப்பாக, ஓடும் ரயிலில் பூஜா – மாளவிகா இடையிலான உரையாடல்கள் என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை படத்திற்கு நல்ல பலம். கதையின் விறுவிறுப்பைத் தொய்ய விடாமல், இவரது இசை பக்கபலமாக இணைந்து கொள்கின்றது.
பலர் புதிய முகங்களாக இருப்பது, கதையின் பாத்திரங்களோடு நம்மை இயல்பாக ஒட்ட வைத்துக் கொள்ள உதவுகின்றது. படத்தில் நகைச்சுவை என்று தனியாக இல்லாவிட்டாலும், லங்கனாக வரும் ஜோண் விஜே, சிங்காரத்தைப் பல இடங்களில் மட்டந் தட்டிப் பேசும்போது, நகைச்சுவை இழைந்தோடுகின்றது.
பேச்சை வெகுவாகக் குறைத்துக்கொண்டு வில்லத்தனம் செய்யும் சின்னையாவாக வினோத் கிஷான் மனதில் நிற்கிறார். முடி திருத்துநராகவும், பாலியல் தரகராகவும் வரும் சிங்காரம் என்ற அமரேந்திரன், ரேகாவின் முன்னாள் தொழில் தோழியாக வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அடாவடித்தனம் செய்பவனாக வரும் லங்கன் என்ற ஜோண் விஜே – எல்லோருமே தங்கள் நடிப்பால் தமது பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டுகிறார்கள்.
இறுதிக் கட்டத்தில், எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்து, எதிர்பாராத ஒரு நிகழ்வைக் காட்டிப் படத்தை முடித்து ஓகோ என்று பாராட்டு வாங்கியுள்ள இந்த இளம் இயக்குநரிடம் இன்னும் நாம் நிறைய எதிர்பார்க்கலாமா? தட்டிக் கொடுக்கின்றோம். கொட்டிக் கொடுப்பாரா?