வா… அம்மா…. சீக்கிரம்…

(ஜப்பானில் நிகழ்ந்த கடுமையான சுனாமியால் உயிரிழந்தோர் பலர். அவர்களில் பலர் அலுவலகம் செல்லுமுன் குழந்தைக்காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் மீள வரவேயில்லை என்ற செய்தியைப் படித்ததும் மனவேதனையோடு எழுதிய கவிதை இது.)

வழி பார்த்து நிற்கிறேன்,
வா… அம்மா…. சீக்கிரம்…
எத்தனைநேரம்தான்
ஆயாவின் கையால் அமுதுண்டு
உன் அரவணைப்பில்லாமல்
உறங்கி விழிப்பது?
அலுவல் வேலை அதிகமெனில்
அப்பா வரலாமே…
ஏனம்மா எவரும் வரவில்லை?

அம்மா..
டோமியை அவன் அம்மாவும்
நோபுவை அவன் அப்பாவும் வந்து
அழைத்துச் சென்றுவிட்டார்கள் தெரியுமா?

ஒருமுறை தூங்கி விழித்தாலே
நீ வந்தழைத்துச் செல்வாயே…
இன்று மட்டும் என்ன அதிசயம்,
இத்தனை முறை தூங்கி விழித்தும்
என்னையழைக்க நீ வரவேயில்லை?

ஒவ்வொருமுறை அலைபேசியில் பேசியபின்னும்
ஆவலோடு ஆயாவின் முகம்பார்க்கிறேன்,
என்னை ஒரு பூங்கொத்து போலே
அள்ளி அணைத்துப் புன்னகைக்கிறாள்,
ஆயாவுக்கு சிரிக்கவே தெரியாது
என்றல்லவா இத்தனைநாள் நினைத்திருந்தேன்?
அவள் விழியோரம் வழியும் கண்ணீருக்குத்தான்
காரணம் தெரியவில்லை எனக்கு..

வா… அம்மா…. சீக்கிரம்…
வந்தென்னை நம் வீட்டுக்கு அழைத்துச்செல்!
காலையில் நான் மறந்துவிட்டுவந்த
என் டெடிபொம்மை எனக்காக ஏங்கி
வழிபார்த்துக் காத்திருக்கும்.

About The Author

4 Comments

  1. கலையரசி

    அன்பு கீதா,
    கவிதையைப் படித்தவுடன் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் வேதனை கண்முன் தோன்றி மனதை என்னவோ செய்கிறது. திரும்பி வராத பெற்றோரைத் தினந்தினம் எதிர்பார்த்து அந்தக் குழந்தைகள் என்ன பாடுபடுகின்றார்களோ! மனதை மிகவும் நெகிழ வைத்த கவிதை.

  2. கீதா

    உண்மைதான். அந்தக் காட்சியை நினைக்கவே மனம் துணியவில்லை. இருப்பினும் மனதில் தோன்றிய உணர்வை முடிந்தவரை வார்த்தைகளால் வடிக்க முயன்றேன். மிகவும் நன்றி.

  3. கீதா

    என்ன பண்றது மினி? சில உண்மைகள் இப்படித்தான் நம்மை அழவைக்கும். என் அழுகையைக் கவிதையாக்கிட்டேன். உங்க அழுகையைப் பின்னூட்டமாக்கிட்டீங்க. பின்னூட்டத்துக்கு நன்றி மினி.

Comments are closed.