வாழ்வு மீள்வு

வெள்ளி அன்ன முழுநிலா
தேய்ந்து மறைந்து வளர்வதேன்?
இன்சுவையின் விதைப் பலா
மண்ணில் ஊன்ற முளைப்பதேன்?

விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?

வெட்டவெளிப் பொட்டலில்
பட்ட மரக் கிளைதனில்
சொட்டு மழை பட்டதும்
பச்சை இலை துளிர்ப்பதேன்?

தாழ்வு தடை நீக்கியே
பாடுபடப் பழகினால்
வாழ்வு மீளும் உண்மையை
நாளும் உலகுக் குணர்த்தவே.

வாழ்வு மீள்வு யாருக்கு? உளம்
தோல்வி யுற்ற பேருக்கு.
ஆளும் மனச் சோர்வினால் பெறும்
தாழ்வு பெரும் ஊனமாம்.

கண்ணிழந்தும் மில்டனால்
கவிதை பாட இயன்றதை
பண்நிறைந்த காவியம்
மீண்ட சொர்க்கம் பிறந்ததை

எண்ணிறந்த முறைமைகள்
தோல்வி கண்ட பின்னரும்
மண்ணை ஆளும் வல்லமை
காட்டி லிங்கன் வென்றதை

எண்ணி எண்ணி உன்னுள் நீ
விண்ணளவு உயர்ந்ததாய்
எண்ணம் கொள்ளப் பின்அது
முன்னில் உன்னை நிறுத்திடும்.

About The Author

11 Comments

  1. venkatachalam

    மிக மிக அர்புதமாக உல்லது. என்னுடைய வால்துகல்

  2. Karthikesan

    அற்புதச் சந்தம், சீரிய எதுகைகள், அத்தனைக்கும் மணிமகுடம் அது தாங்கி நிற்கும் கருத்து. இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடல்… படிக்க வேண்டுமே!!!

  3. Mangai

    Its very nice though am not able to understand fully, am very much happy to see your poem in Web.. And I really wish u for the great success. Waiting to see more poem.. All the Very best.

Comments are closed.