"வேலைக்குப் போகவே பிடிக்கவில்லை"
"வேலையை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது"
"வேறு வழி இல்லாமல்தான் இந்த வேலை பார்க்க வேண்டி இருக்கிறது"
"வாழ்க்கையே சலிப்பாக இருக்கிறது"
"எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று விடுபடுவது போலத் தோன்றுகிறது"
இப்படி நம்மில் பலர் புலம்புகிறோமே அதற்கான காரணத்தையும் தீர்வையும் அறியலாமா?
ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்தில் அவதரித்திருப்பதில் ஒரு உயரிய நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை நோக்கி அல்லது அந்த நோக்கத்துடன் நாம் பயணிக்கும் போது வாழ்க்கை சீராக அமைகிறது. மாறாக, அந்த நோக்கத்தை விட்டு நாம் விலகிப் போகும் போது தடைகளும், கஷ்டங்களும் பயணத்தைக் கடினமாக்குகின்றன.
எனில், நமது வாழ்க்கை நோக்கத்தை அறிந்து கொண்டு அதனை நோக்கி நம் பயணத்தின் திசையை மாற்றுவோமெனில் வாழ்க்கை ஒரு ஆனந்த அனுபவமாக அமையுமல்லவா?
மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? போன்ற கேள்விகளுக்கு பதில் இருக்காது. இந்தக் கேள்விகளுக்கான பதிலை, அதாவது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஒரு சிறிய பயிற்சி (நன்றி: லெக்ஸ் சிஸ்னி) இதோ:
1. ஒரு காகிதத்தில் உங்களுக்கு அதீத எதிர்மறை உணர்ச்சிகளைத் (கோபம், ஆத்திரம், வெறுப்பு பயம் போன்றவை) தோற்றுவிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள் (3 முதல் 5 விஷயங்கள்)
எ.கா:
1. பேராசை
2. அசுத்தம்
3. ஹாரன் ஒலி
4. அவமரியாதை
5. அநாகரீகமான கேள்விகள்
2. உங்கள் பட்டியலில் உள்ளவற்றுக்கு எதிர்பதத்தை எழுதுங்கள்
எ.கா:
1. பேராசை x மனநிறைவு
2. அசுத்தம் x சுத்தம்
3. ஹாரன் ஒலி x அமைதி
4. அவமரியாதை x பரஸ்பர மரியாதை
5. அநாகரீகமான கேள்விகள் x நாகரீகமான நடத்தை
3. இப்போது இந்த எதிர்பதமான சொற்களில் குறைந்தது மூன்றையாவது வைத்து கீழ்க்கண்ட வாக்கியத்திலுள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள்:
எனது வாழ்க்கையின் நோக்கம் _______________ ஆகும்
எ.கா: எனது வாழ்க்கையின் நோக்கம் மனநிறைவுள்ள, பரஸ்பர மரியாதையும் நாகரீகமான நடத்தையும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே ஆகும்.
வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொண்டீர்களா? அதை நோக்கித் திரும்புங்கள். சின்னச் சின்ன அடியாக நீங்கள் வைத்தாலும் கூட இந்தப் பயணம் இனிமையாக அமையும்.
இந்தப் பயிற்சி குழந்தைகளைக்கு உகந்த கல்வியைத் தேர்ந்தெடுக்க உதவும்.
அதெல்லாம் சரி, என் மகனது வாழ்க்கையின் நோக்கத்தின் படி பார்த்தால் அவனுக்கு ஓவியம் கற்றுக் கொள்வது உகந்ததாக இருக்கும். ஆனால் அது சாப்படு போடாதே என்று பயப்படாதீர்கள். உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்களல்லவா? கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் கூட மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறார்களல்லவா?
வேதனையான பணக்கார வாழ்க்கை, மன நிறைவுள்ள நடுத்தர வாழ்க்கை – இரண்டில் எதனை உங்களுக்குக் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான உலகம் அமையும்.
“
நச்சுன்னு இருக்கு முடிவுரை. நல்ல வழிகாட்டி
னமது நோக்கம் மட்டும் சிந்தித்தால் மட்டும் போதும் என நினைக்கிரேன். மகனது நோக்கம் பட்ரி நாம் நினைதாலும் நிம்மதி இருக்காது.