வாழு, வாழவிடு !

கிழக்கிலே பார்தியின் கிரணங்கள் தோன்றுமுனம்
கிள்ளை புறா மயில் குருவியும்
கீசு கீசென்று மைனா குயில் கூவக்
கிளையாட்டும் மரங்களெல்லாம்

எழுச்சியில் அணில் தாவி இங்கும் அங்கும் ஓடி
இணையுடன் இசை பாடிடும்
இறகு தலை நனைந்திடக் காகங்கள் கூடியே
இடந்தேடிக் குரல் எழுப்பும்

பழக்கிடும் பறவைதம் குஞ்சுகள் பறந்திடப்
பக்குவ மாய்ப்பார்த்திடும்
பசுமைமிகு செடிகொடிகள் பழங்களும் சேர்ந்திடப்
பாய்ந்திடும் ஆனந்தமே

வழக்கமாய்க் காணுமிக் காட்சிகள் இன்னாளில்
வறட்சியாய்ப் போய்விட்டதேன்
வாழ்வோம் எல்லா உயிரும் வாழவழி செய்குவோம்
வடபழனி முருகேசனே !

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    வாசக நண்பர்களே, முதல் வரியில் பார்தியின் என்பதை பரிதியின் என்று திருத்தி வாசிக்கவும். நன்றி.

  2. நிலாக்குழு

    அன்புடைய பாலகிருஷ்ணன்,
    பக்க வடிவமைப்பின்போது ஏற்பட்ட இந்தத் தவறுக்கு நிலாக்குழு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
    மீண்டும் தவறேதும் நிகழாமல் இருக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
    தொடர்ந்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
    – நிலாக்குழுவினர்.

  3. P.Balakrishnan

    நிலாக்குழுவுக்கு நன்றி. பத்திரிகை நடத்துவது எளிதான காரியமல்ல;அதுவும் நிலாச்சாரல் போன்ற சிறப்பான வலைத்தள இதழுக்குப் பக்கங்கள் கோப்பதில் நம்மை அறியாமல் சில தவறுகள் நுழைந்துவிடுவது ஒன்றும் பெரிதல்ல. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது ஏரிக்கரை என்ற தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழை நான் நடத்தியபோது ஏற்பட்ட அனுபவம் பெரியது!

Comments are closed.