இசைஞானி இளையராஜாவின் அடுத்த படைப்பு இது. பி.ஸ்ரீனிவாசன் தயாரிக்க, இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்த ஜி.அனந்தநாராயணன் இயக்க, வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம். கல்லூரி திரைப்படத்தில் நடித்த அகிலும், மலையாள நடிகை மீரா நந்தனும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ‘ராஜா’வின் பாடல்கள் என்றால் உடனே கேட்டுவிட வேண்டாமா? அதுவும், கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தால்! விமர்சனம் கொஞ்சம் லேட் என்றாலும் லேட்டஸ்ட்தான்!
கூட வருவியா
பெலா ஷிண்டேவின் குரலில் அமைந்த நல்லதொரு மெலடி. மென்மையான பீட்ஸோடு ஆரம்பித்து, அதனுடன் அழகான புல்லாங்குழலைச் சேர்த்து, அருமையான கார்ட்ஸோடு கலந்து தந்திருக்கிறார் ராஜா. ‘என்னுடன் கடைசி வரை கூட வருவாயா’ என்று நாயகனிடம் நாயகி கேட்பது போல அமைந்திருக்கும் பாடல். வாலியின் வரிகளை பாடகர் அனுபவித்து பாடியிருக்கின்றார். உச்சரிப்பும் சரியாகவே இருக்கிறது. சரணங்களுக்கு நடுவில் வயலின் இசை பிரமாதம் என்று சொல்லலாம். மனிதர் எத்தனை வருடங்களாக இது போன்ற மெலடிகளை தந்து கொண்டிருக்கிறார்! அப்பப்பா!
பூ சிரிக்குது
ட்ரம்பெட், ட்ரம்ஸ் என்று மேற்கத்திய பாணியில் "தேனாம்பேட்டை தேன் குருவி" என்று ஆரம்பித்து, பின்பு ரீட்டாவின் குரலில் பூ சிரிக்கின்றது. ராஹுல் நம்பியார் உடனே சேர்ந்து கொள்கிறார். ஹார்மோனியம், புல்லாங்குழல் என்று ராஜா விளையாடி இருக்கிறார். வரிகளும், மெட்டும் கனகச்சிதமாக பொருந்துகின்றன. தாளம் போட வைக்கும் பாடல்.
ஒளி தரும் சூரியன்
குழந்தைகள் பாரதியாரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ வரிகளை ஒப்பிக்கின்றார்கள். அதன் பிறகு, ஒரு மென்மையான பியானோ பிரயோகம், மெருகேற்றும் கார்ட்ஸ் என்று ராஜாவின் கையெழுத்து ஆரம்பத்திலேயே தெரிகிறது. அவரே பெலா ஷிண்டேவுடன் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார். இன்னும் ஒரு நல்ல மெலடி. "ஒளி தரும் சூரியன் நீ இல்லை.." என்று ஆரம்பித்து நாயகன், தன்னை மாற்றிய நாயகியைப் புகழ்கின்றார் போல. பாடல் முழுவதும் வயலினும், பியானோவும் சக்கை போடு போடுகின்றன. ராஜாவின் குரல் நடிகருக்கு எப்படி பொருந்துகின்றது என்று பார்க்க வேண்டும்.
றெக்கை கட்டி பறக்குது
சங்கீத ஸ்வரங்களை கிராமத்திய மெட்டுகளுடன் எப்படி கலப்பதென்று இளையராஜா பாடமே நடத்தலாம். சிந்துபைரவியின் "பாடறியேன் படிப்பறியேன்" பாடல் போல அல்ல இது. ஏனென்றால், இம்முறை இது ஒரு "குத்துப் பாடல்". நாதஸ்வரத்தை டப்பாங்குத்தோடு இணைத்தது ராஜா ஸ்டைல். திப்புவும் ராஹுல் நம்பியாரும் சேர்ந்து மஜாவாக பாடுகின்றார்கள். பாடலைப் பற்றிச் சொல்வதற்கு வேறேதும் பெரிதாக இல்லை.
தென்றலும் மாறுது
இன்னும் ஒரு வித்தியாசமான ஆரம்பம், ‘இங்கி பிங்கி பாங்கி’ என்று குழந்தைகளின் விளையாட்டில். உடனே ரீங்காரம் செய்யும் வயலின், கீஸ், கிடார் என்று ராஜா கலக்குகின்றார். ஷ்ரேயா கோஷலின் குரலோடு இணையும் புல்லாங்குழல் பிரமாதம். ஆச்சரியம் – ஷ்ரேயாவின் உச்சரிப்பு அநேக இடங்களில் நன்றாக இருக்கின்றது! தேறிவிட்டார் போல! பாடல் முழுவதுமே வயலினையும் புல்லாங்குழலையும் கலந்து அற்புதமாக பிரயோகப்படுத்தியிருக்கிறார் ராஜா. "நீ மாறுவாய், நல்ல காலம் வரும்" என்று உற்சாகமூட்டும் பாடல்.
அச்சடிச்ச காசா
இன்னும் ஒரு குத்துப் பாடல், இம்முறை ராஜாவின் குரலிலேயே. மெட்ராஸ் தமிழில். ஆங்காங்கே அர்த்தமில்லாமலும், ஆங்காங்கே வேதாந்தம் பேசுவது போலவும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. ‘தண்ணி அடித்து விட்டுப் பாடினால்’ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றதா என்ன? திடீரென்று பாடலின் முடிவில், மென்மையான கீஸும் பியானோவும் கேட்கின்றன. நாயகன் ஏதோ பழைய மென்மையான நினைவுகளில் ஆழ்ந்துபோகின்றார் என்று கேட்டாலே புரிகின்றது.
என்னடா பாண்டி
இந்தப் பாடலைக் கேட்டால் சிரிப்பு வருவது நிச்சயம். ஏதோ ஒரு வித்தியாசமான மேளம்-உருமி போன்ற ட்ரம்ஸ் சப்தத்துடன் கீழ் ஸ்தாயியில் தன் குரலைச் சேர்த்திருக்கின்றார் ராஜா. வேண்டுமென்றே மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இசையமைத்திருக்கின்றார் என்று தெரிகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு ராஜா சென்னைத் தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
நான்கைந்து மெலடிகள் நிறைந்த ஒரு இசை ஆல்பத்தை இந்நாட்களில் கேட்பது கடினமே. இன்னும் தன்னால் சிறந்த மெட்டுகளைத் தர முடியும் என்று மறுபடியும் நிரூபித்திருக்கின்றார் ராஜா. இப்படத்தின் பாடல்களை ‘இளைய நிலா’வோடும், ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலோடும்’ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், ஏமாற்றந்தான் அடைவீர்கள். வார்த்தைகளே புரியாமல் இன்று வெளிவரும் பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆல்பம் தனித்து சுகமாகவே இனிக்கிறது.
“
பாடல்கள் அருமை