வாலியின் சிவபக்தி

வாலி என்றவுடன் நமக்கு சுக்ரீவனின் சகோதரன் எனவும், ராமரால் மறைந்திருந்து வீழ்த்தப்பட்டவன் எனவும்தான் ஞாபகம் வரும். சிவபக்தன் என்றால் இராவணேஸ்வரன் நினைவுதான் நம் மனதில் தோன்றும். ஆனால், வாலியும் மிகச்சிறந்த சிவ பக்தன்தான். தான் எந்த இடத்திற்குச் சென்றாலும் தான் அந்த இடத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிப்பான். வாலிக்கு மனமெல்லாம் சிவமயம்! ஏதாவது காரியமாக ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஒரு சிவஸ்தலம் அவனால் உண்டாகிவிடும். இப்படி, வாலி போகும் இடமெல்லாம் சிவஸ்தலங்கள் உருவாகின. அப்படி வாலி உருவாக்கிய ஒரு சிவஸ்தலம் அரசூரில் உள்ளது.

இத்திருக்கோயில் பொன்னேரியிலிருந்து கும்மிடிப்பூண்டிக்குச் செல்லும் வழியில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோயில். ஊருக்குள் எங்கும் சத்தம், சந்தடி இல்லாமல் இருப்பதால் மனம் அமைதியாய்ச் சலனமற்று நிறைந்து நிற்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த ஊரின் பெயர் முதலில் ‘அசலனபுரம்’ என்று இருந்ததாம். பின்னர், ‘அசலபுரம்’ என்று ஆனதாம். பின், இதுவும் மருவி ‘அரசூர்’ என்று ஆகிவிட்டதாம்.

பாதி தார் ரோடும் பாதி மண் ரோடுமாக இருந்தாலும் நடக்கும்போது தூசி, பெட்றோல் போன்ற மாசுகளற்று சுத்தக் காற்று வீச, அதை ரசித்தபடி கோயிலுக்குள் போகிறோம். தெற்குத் திசை நோக்கியபடி அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். தெற்கு வாசல் பார்க்கும் சிவன் கோயில் யம பயம் நீக்கும் என்பதும் பரிகாரஸ்தலம் என்பதும் மக்களின் நம்பிக்கை.

உள்ளே நுழைய, ஆனந்தத் தாண்டவமாடும் சபேசர் தனது இடது பாதத்தைத் தூக்கியபடி நடனம் ஆடுகிறார். "இடது பாதம் தூக்கி ஆடும், நடராஜன் இனி பணிவோமே நெஞ்சே" என்ற பாடல் என் ஞாகத்திற்கு வந்தது. அவரது நடனத்தை ரசித்தபடி அன்னை சிவகாமி அம்மன் புன்னகையுடன் காட்சியளிக்கிறாள்.

கணபதி இல்லாத கோயிலா? வருகிறோம் கணபதியின் சன்னிதிக்கு. அங்கு பஞ்சமுக கணபதி அமர்ந்து அருள் புரிகிறார். அருகில் நடராஜனைப்போல் தானும் நர்த்தனம் ஆட ஆசைப்படும் ஒரு நர்த்தன கணபதியும் இருக்கிறார். மெல்ல, சிவநாமம் சொல்லியபடி கருவறைக்குள் நுழைகிறோம். கருவறையில் பரமேஸ்வரன் லிங்க வடிவில் அமர்ந்திருக்கிறார். பதினாறு பட்டை கொண்ட லிங்கம் பார்க்க மிக அழகாக இருக்கிறது. திருநாகேஸ்வரத்தில் பாலாபிஷேகம் செய்யும்பொழுது அந்த ராகு என்ற பாம்பின் கழுத்து நீல நிறமாக மாறுவதைப் பலர் கண்டிருக்கின்றனர். அதே போல் இங்கேயும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், பதினாறு பேறுகளைக் குறிக்கின்றன. இவரை மனமார வணங்க பதினாறு பேறுகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். வாலி இது போல் நாலு பட்டை லிங்கம், வட்ட வடிவ லிங்கம் எனப் பல லிங்கங்களைப் போகும் இடமெல்லாம் நிறுவினானாம்.

எதிரே அமர்ந்திருக்கும் அம்மன் சௌந்தர்யவல்லி பெயருக்குத் தகுந்தபடி அழகே உருவாகி புன்னகை தவழக் காட்சியளிக்கிறாள். தமிழில் அர்ச்சனை செய்யும்போது இவள் ‘அழகுடை நாயகி’ என்று பெயரெடுக்கிறாள்.

வெளிச்சுற்றில் நாம் பஞ்ச பூத லிங்கங்களையும் ஒரே இடத்தில் காண்கிறோம். விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், ஞானப்பிரச்சனாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர், காமாட்சியன்னை சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், பர்வதவர்த்தனி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் என்று ஐந்து லிங்கங்களையும் ஒரே நேரத்தில் காண மிகவும் பரவசமடைகிறோம்!

இங்கு நவகிரக சன்னிதியைத் தேடியும் கிடைக்கவில்லை. பின் அர்ச்சகர் மூலம், இங்கு நவகிரகத்திற்கென்று தனி சன்னிதி கிடையாது என்று தெரிய வந்தது. ஏனென்றால், வாலி சிவபூஜை செய்யும்போது ஒருவரையும் கிரகதோஷம் அண்டாதிருக்க வேண்டிக் கொண்டானாம். சிவனும் அவனுக்கு அருள் புரிந்தாராம்.

கோயிலின் வெளிப் பிராகாரம், உள் மண்டபம் என்று சில இடங்கள் பழுதடைந்து போயிருக்கின்றன. புதுப் புதுக் கோயில்கள் கட்டுவதைத் தவிர்த்து, இது போல் பழமை வாய்ந்த கோயில்களைப் பாழாகாமல் பாதுகாக்க வேண்டும்! மக்களும் ஒன்று சேர்ந்து முயன்றால் பல கோயில்கள் புதுப்பொலிவுடன் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை.

About The Author