சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று மதவாதிகள் நிறுவினார்கள். ஆனால், கலிலியோ அதை ஒப்புக்கொள்ள மறுத்தார். பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கோபர்னிகஸ் கூறியதையே கலிலியோ ஏற்றார்.
கோபர் நிகஸ் (1473-1543) உலகம் மறக்க முடியாத ஒரு விஞ்ஞானி. பைபிள் கூறியதற்கு மாறான வானவியல் கருத்தை வெளியிட்டவர். ‘வானவியலின் தந்தை‘ என்று போற்றப்படுபவர்.
ஆனால், கலிலியோவின் இந்த அறிவியல் கோட்பாட்டை ஏற்க மறுத்த சமய நீதிமன்றம் தெய்வ நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டி அவருக்குத் தண்டனை விதித்தது. அத்தோடு மட்டுமின்றி, அவர் சொன்னதைத் தவறு என ஒப்புக்கொள்ளக் கூறி அவரை வீட்டுச் சிறையிலும் வைத்தனர். தன் வாழ்க்கையின் கடைசி ஏழு ஆண்டுகளைக் கலிலியோ தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பார்வை இழந்து மிகவும் சங்கடப்பட்டு 1642ஆம் ஆண்டு அவர் உயிர் விட்டார். அப்போது கூட அவர் உடலை முறைப்படி அடக்கம் செய்ய மதக் குருமார்கள் தடை விதித்தனர்.
பின்னாளில், கோபர்நிகசும் கலிலியோவும் கூறியபடிப் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மை மறுக்க முடியாத அளவில் அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுவிட்டது. மதவாதிகள் தாங்கள் வழங்கிய தீர்ப்பைத் திருத்த வேண்டியதாயிற்று. கலிலியோ உயிரோடு இருந்தபோது அவர் கூறிய உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்தது மட்டுமில்லாமல் அவரைக் குற்றவாளியாகக் கருதித் தண்டனை விதித்த அதே மத நீதிமன்றம், முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் கலிலியோவின் வழக்கைத் திரும்ப விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அவர் குற்றவாளியல்ல என்றும் தீர்ப்பளித்தது.
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்’…
உண்மை எப்போதும் தோல்வி அடையாது. தாமதமானாலும் இறுதியில் சத்தியமே வெல்லும்!
ஆதாரம்: பெரியோர்கள் வாழ்வில் அரிய நல்கதைகள் – ராஜேஸ்வரி கோதண்டம்.