உல்ஃப் என்கிற மருத்துவர் பென்சில்வேனியாவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். பல ஊர்களிலிருந்தும் இதயம் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவத்திற்காக அவரிடம் வந்தபோதும் அருகில் இருந்த ரொசேடோ என்கிற ஊரிலிருந்து மட்டும் ஒருவரும் வரவில்லை. அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், 1950களில் அமெரிக்காவில் மாரடைப்பு என்பது மிகவும் சாதாரண உடல் நலக் கோளாறாக இருந்தது.
ரொசேடோ மர்மம் குறித்து அவர் ஆய்வு செய்தபோது முடிவுகள் வியப்பைத் தருபவையாக இருந்தன. ரொசேடோவில் 55 வயதுக்குக் குறைவாக எவரும் மாரடைப்பால் பாதிக்கப்படவில்லை. அவர்களிடம் தற்கொலை வழக்கம் இல்லை. குடிபோதையோ போதை மருந்துகளோ புழக்கத்தில் இல்லை. அங்கு குற்றங்களும் மிகக் குறைவாகவே இருந்தன. வயோதிகத்தால் மட்டுமே மரணமடைந்திருந்தார்கள். அதே நேரம், அவர்களின் உணவைப் பற்றி ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் கொழுப்புச் சாப்பிடுபவர்களாகவும், அவ்வளவாக உடற்பயிற்சி செய்யாதவர்களாகவும் தொப்பையும் தொந்தியுமாக இருந்தது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் எப்படி அவர்களால் ஆரோக்கியமாக இருக்க முடிந்தது?
அவர்கள் எப்பொழுதும் மகழ்ச்சியாக இருந்தனர். யார் வீட்டிற்கு வேண்டுமானாலும் மற்றவர்கள் செல்லலாம். தங்கள் வீட்டில் உணவு சமைக்காதபோது பக்கத்து வீட்டில் சென்று சாப்பிடலாம். மூன்று தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தனர். வெற்றிகரமாக வாழ்பவர்கள் மற்றவர்களுக்கு ஒத்தாசை புரிபவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் சமூக அமைப்பைப் பாதுகாப்பாக மாற்றியிருந்தனர். தங்கள் உலகைத் தாங்களே சிருஷ்டித்துக் கொண்டனர். ஓய்வு நேரங்களில் மனம் விட்டுப் பேசிக்கொள்வதையும் வெளிப்படையாகக் கிண்டல் செய்து சிரிப்பதையும் அவர்களிடம் பார்க்க முடிந்தது. அவர்களின் இயல்பான வாழ்வு அவர்கள் இதயத்தையும் உடலையும் சீராக வைத்திருந்தது. சுருக்கமாக சொன்னால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் கிராமங்கள், எந்தவித வெளிப்புறச் சாயலுமின்றி எப்படி இருந்தனவோ அப்படி அந்த ஊர் இருந்தது!
மனிதனின் மகிழ்ச்சி பகிர்வதில் உள்ளது! எந்தவித வெறியும் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும் பரிவுடனும் பண்புடனும் பரிமாறிக் கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து. மகிழ்ச்சியின்றி எந்த உயரத்திற்குச் சென்றாலும் அதனால் பயன் இல்லை. மகிழ்ச்சியே கோயில்! மகிழ்ச்சியே தெய்வம்! மகிழ்ச்சியே வழிபாடு! மகிழ்ச்சியே சுகம்!
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்!’
மகிழ்ச்சியாகவே இருங்க!
மருந்துகளையே மறங்க!
நன்றி: திரு.வெ.இறையன்பு அவர்களின் ‘எப்போதும் இன்புற்றிருக்க’ நூல்.
“
அருமையாய் இருக்கு. உண்மைதான் சந்தோசம் இல்லாமல் எங்கே போனாலும் எதுவும் கிடைக்காது. எனக்கும் மனதில் தினமும் வேதனை. நானும் சந்தோசமாய் இருக்க ஆசைப்படுகிறேன் முடிவதில்லை. என் தனிமை என்னை என்னை வேதனை படுத்துகிறது. நகைசுவை படங்கள் நிறைய பாக்கிறேன் அதுவும் முடிவதில்லை. சந்தோசமாய் இருக்க என்னதான் செய்வது. எனது மனைவி இறந்து ஒரு வருடமாகிறது. எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளை ஒரு ஆண் பிள்ளை. 9 வயதும் 6 வயதும்.