என் வாழ்க்கையின் மிக உன்னதமான நாள்!
இன்று காலை நான் கண் விழித்ததும் என் வாழ்க்கையின் ஒரு உன்னதமான தினம் இன்றுதான் என்று உணர்ந்தேன்! நான் எவ்வளவோ முறை இன்றைய தினத்தை அடைய முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதோ நான் அடைந்து விட்டேன்! ஆகையால் இதைக் கொண்டாடப் போகிறேன்.
இது வரை ஒரு நம்ப முடியாத வாழ்க்கையை வாழ்ந்ததற்காக இன்று இந்த நாளைக் கொண்டாடப் போகிறேன். என்னுடைய சாதனைகள், நான் பெற்ற ஆசிகள், ஏன், நான் கடந்து வந்த சோதனைகள் யாவுமே என்னை இன்று வலுவுடையவனாக ஆக்கியிருக்கின்றன. ஆகவே, இன்று நான் தலைநிமிர்ந்து, இதயம் நிறைய மகிழ்ச்சியுடன் இன்றைய நாளைக் கொண்டாடுவேன். இறைவனின் சிறிய பரிசுகளைக் கூட நான் பார்த்து அதிசயப்படுவேன்! இனிய காலை, அதிகாலைப் பனி, ஒளிர்விடும் சூரியன், மேகங்கள், பசுமையான மரங்கள், மலர்கள், பறவைகள் இவை யாவையுமே இறைவன் அளிக்கின்ற அதிசயமான அன்பளிப்புக்கள்தானே! இன்று, இயற்கையின் அதிசயமான இவற்றுள் எதையுமே நான் கவனிக்கத் தவற மாட்டேன்! இன்று நான் கண்ட அதிசயங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தவறமாட்டேன்.
எவரோ ஒருவரையாவது புன்னகைக்க வைப்பேன். எனக்குத் தெரியாதவர்களுக்குக் கூட எதிர்பார்க்காத அன்பான ஒரு செயலைச் செய்து காட்டுவேன்! இன்று, சோர்ந்து போய் இருக்கும் ஒருவரை உண்மையாக, மனதாரப் பாராட்டுவேன். ஒரு சிறு குழந்தையைப் பார்த்து "நீ எவ்வளவு சிறப்பான குழந்தை!" என்று கொஞ்சுவேன். நான் அன்புடன் நேசிக்கும் ஒருத்தியை என் வாழ்க்கைக்கு அவள் எவ்வளவு முக்கியமெனவும், நான் அவளை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் எனவும் மனம் திறந்து சொல்லுவேன்.
இந்த நாளில், நான் எனக்கு இதுவரை கிடைக்காதவற்றைப் பற்றிப் பட்ட கவலைகளை விடுவேன். எனக்கு இறைவன் அன்புடன் அளித்திருப்பவற்றையெல்லாம் நினைந்து நன்றி சொல்லுவேன்! கவலைப்படுவது எவ்வளவு வீணானது என்பதை இன்று நான் நினைவுபடுத்திக் கொள்வேன். நான் இறைவனிடம் வைத்திருக்கும் தெய்விக நம்பிக்கையால், அவன் வகுத்திருக்கும் கருணை மிகுந்த திட்டத்தில் எனக்கு எல்லாமே நன்கு நடக்கும் என்று மனதார நம்புவேன்!
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்!’
தினமும் காலையில் கண் விழித்ததும் இப்படியே சொல்லி எழுந்திருங்க! அப்புறம் பாருங்களேன்!
(சாது வாஸ்வானி அவர்களுடைய ஆங்கிலக் கட்டுரை ஒன்றின் தழுவல்).