ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் அனைவரும் மிக ஆர்வத்துடன் பல தீர்மானங்கள் போடுவோம். ஆனால், அநேகமாக ஜனவரி மாத இறுதிக்குள்ளாகவே பல தீர்மானங்கள் காணாமல் போய்விடுவது ஆச்சரியமில்லை. ரிச்சர்ட் வைஸ்மென் என்ற ப்ரிஸ்டல் பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணரின் ஆய்வுப்படி 88 சதவிகித மக்களின் புத்தாண்டுத் தீர்மானங்கள் இப்படி ஜனவரி இறுதிக்குள்ளாகவே தோல்வி அடைகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்மானங்களை முழுதாக நிறைவேற்றுவது எப்படி?
இதோ சில வழிகள்!
1. எது மிகவும் முக்கியமான தீர்மானமென்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். தீர்மானங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்! தவிர, பொதுப்படையான தீர்மானங்களைப் போட்டுக்கொள்ளக்கூடாது! பணம் சேமிப்பது, செலவைக் குறைப்பது – இப்படிக் குறிப்பான தீர்மானங்களைச் செய்துகொண்டு அதற்காகத் திட்டமிடுங்கள்!
2. உங்களுடைய தீர்மானத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அந்தச் சிறிய பகுதிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள், படிப்படியாக முடித்துத் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்!
3. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஐந்து நிமிட விதியை அமைத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்வது, ஐந்து நிமிடம் உடற்பயிற்சி செய்வது போல.
4. உறவுகள் மேம்பட வேண்டுமென்று தீர்மானித்தால் அதற்காக நடவடிக்கை எடுங்கள். நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது, வாழ்த்துக்கள் அனுப்புவது, நன்றி சொல்வது – இப்படி.
5. கடந்த ஆண்டுத் தீர்மானங்களைத் திரும்பிக் கூடப் பார்க்காதீர்கள்! அவற்றைச் செய்யவில்லையே என்கிற ஏக்கத்தில் இந்த ஆண்டுத் தீர்மானங்களையும் கோட்டை விட்டு விடுவீர்கள்.
6. உங்கள் தீர்மானத்திற்கு ஒரு தலைப்பு கொடுங்கள்! உடல் நல அக்கறை, தினசரி வாக்கிங், எப்போதும் புன்னகை போன்றவாறு.
7. உங்களின் தீர்மானங்களைத் திட்டமிட்டு அவற்றைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். திட்டங்கள் நிறைவேறுகின்றபோது உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ போட்டுகொள்ளுங்கள்! வெற்றியையே கனவு காணுங்கள்! தீர்மானங்களின் சின்னஞ் சிறிய வெற்றிகள் கூட உங்களின் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்!
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்’!
புத்தாண்டுத் தீர்மானங்களைத் திட்டமிட்டுத் தீர்மானியுங்க; தீர்மானித்துத் திட்டமிடுங்க!
(‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் நோனா வாலியா எழுதிய கட்டுரை ஒன்றின் தழுவல்).