மிகவும் ஆரம்ப கால உபநிடதங்களில் ஒன்று தைத்திரீய உபநிடதம். வாழ்க்கை முறைகளைச் சிந்தித்து வாழச் சொல்லும் இந்த உபநிடதம், தானம் பற்றிச் சிறந்த விளக்கத்தை அளிக்கிறது.
ஏனோ தானோ என்று தானம் கொடுக்கக் கூடாது. உண்மையான ஈடுபாட்டுடன் கொடுக்க வேண்டும்! ஈடுபாட்டின் பின்னணியில் இது உன்னதமான ஒரு பணி. இதைச் செய்பவருக்கு இறைவன் உதவுவார் என்கிற சிந்தையுடன் செய்ய வேண்டும்.
வருமானத்தில் ஒரு பகுதியைக் கண்டிப்பாக இயன்ற அளவிற்குத் தானம் செய்ய வேண்டும். அதே சமயம், வருமானதிற்கு மீறித் தானம் செய்துவிட்டு பிறரிடம் யாசிக்கும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது!
ஐந்து காசுகளைக் கையில் வைத்துக்கொண்டு உயரமான மேடையில் நின்று, "வறியவர்களே! இதோ தானம்" என்று கூறாதீர்கள்! அவர்கள் இருப்பதால்தானே உங்களால் உதவ முடிகிறது? அதனால், உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடிகிறது என்பதை உணர்ந்து அவர்களிடம் நன்றியுடன் இருங்கள்! பெற்றுக்கொள்பவன் அல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன்! அத்தகைய தானத்தின் மூலம் தூய்மையையும் நிறைவையும் அடைய முடியும்.
தானம் செய்யும்போது இரண்டு விஷயங்களை நினைவினில் கொள்ள வேண்டும்! ‘நம்மை எதிர்பார்த்துச் சிலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாம் நன்மை செய்ய முடியும்’ என்று எண்ணுவது பலவீனம். நம்மை எதிர்பார்த்து ஒருவர் கூட வாழவில்லை. நம் கருணைக்காக ஓர் உயிர் கூடக் காத்திருக்கவில்லை. அனைவருக்கும் இயற்கை உதவி செய்கிறது. நம்மைப்போல மனிதர்கள் இல்லையென்றாலும் இயற்கை அவர்களுக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கும். பிறருக்கு உதவுவது நம்மை நாமே பண்படுத்திக் கொள்வதற்குத்தான். இது நமக்குக் கிடைத்த பேறு என்ற எண்ணம் வர வேண்டும்!
இரண்டாவதாக, பாத்திரமறிந்து தானம் இட வேண்டும். ஒருவருக்குக் கொடுக்கும் முன்பு அவருக்குத் தேவை இருக்கிறதா, அந்தத் தானத்தால் அவர் பயன் பெறுவாரா என அறிந்த பின்பே தானம் செய்ய வேண்டும்.
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்!’
தானத்திலேயும் நிதானம் வேணுங்க!
நன்றி: தைத்திரீய உபநிஷதம் -வாழ்க்கையை வாழுங்கள்!- இராமகிருஷ்ண மட நூல்!